Wednesday, 23 May 2012

மன்னிப்பு கேட்டால் கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?!

தமிழ் ஓரளவு எழுத தெரிஞ்சா போதும்னு எழுதவந்த பலரில் நானும் ஒருத்தன் இலக்கியம்,இலக்கணம் தெரிஞ்சவங்க அநேகர் இருக்கும் இடத்தில என்னை போன்றோரும் இருக்கிறோம் என்றால் அதுக்கு ஒரு காரணம் கூகுள். எழுத இலவசமா பிளாக் கொடுத்து என்னத்தையும் எழுதி தொலைங்க, எனக்கு தமிழ் படிக்க தெரியாதது நல்லதா போச்சு என்று சகித்து கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றியோ நன்றி !




ம்...நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி என்பது ஒரு அழகான வார்த்தை தானே, தேவையில்லாம எதை எதையோ சொல்றோம், ஆனா நன்றினு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது ஏன்னு தெரியல. நன்றி, சாரி, பரவாயில்லை என்பது போன்ற (சம்பிராதய) வார்த்தைகள் மிக முக்கியம். இவையே உறவை வளர்க்க உதவும். இவற்றை உபயோகிக்காததால் நல்ல நட்பை/உறவை இழக்க நேரலாம்.


சின்ன வயசில என் அம்மா சொல்லி கொடுத்த பழக்கம் இது, யாருக்கும், எதற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பது, இப்ப என் பசங்களிடமும் இது தொடருகிறது. பெரிய விசயங்கள் என்று இல்லை, சின்ன சின்ன சந்தர்பங்களிலும் நன்றி என்ற சொல் தானாக வந்துவிடும். (ஒரு அனிச்சை செயல் போல )


சொல்லி பாருங்களேன்....
கல்லூரி செல்லும்பஸ்ல கண்டக்டர் டிக்கெட் கொடுத்ததும் தேங்க்ஸ் சொல்வேன், இதை எதிர்பார்த்து இருக்காததால் நான் சொன்னதும் சட்னு திரும்பி பார்த்து லேசா சிரிப்பார்.வேலை நெருக்கடியில் இந்த நன்றி அவரது இறுக்கத்தை தளர்த்தி முகத்தில் புன்னகையை கொடுக்கிறது.ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுற செய்கிறது என்றால், ஒரு நன்றி அல்ல ஆயிரம் நன்றி சொல்லி கொண்டே இருக்கலாம். 


என் பசங்க எனக்கு குடிக்க தண்ணி எடுத்து கொடுத்தா வாங்கிட்டு உடனே நன்றினு சொல்லிடுவேன்...அவங்களும் அதை அப்படியே பாலோ பண்றாங்க...வீட்ல இப்படி சொல்லி பழகிட்டா வெளியிடங்களிலும் மத்தவங்ககிட்ட சொல்வாங்க... !!

எங்க வீட்டு சின்ன வாண்டு சிஸ்டம்ல கேம்ஸ் ஆர்வமா விளையாட்டிட்டு இருக்கும்போது Avast! Antivirus , pop up message ல் 'your system is updated ' னு வாய்ஸ் வந்தா, தேவேகத்தில் உடனே 'ஒ.கே ஒ.கே தேங்க்ஸ்' என்கிறானா  பார்த்துகோங்க...! எந்த அளவிற்கு அவன் மனதில் இந்த நல்ல பழக்கம் பதிந்திருக்கிறது என்று...! 


சிறியவர்கள் இவர்கள் நாளை சமூகத்தில் பலருடன் பழக நேரும், அப்போது ரொம்ப இறுக்கமாக பேசினால் பிறரது நல்ல நட்பை, உறவை இழக்க நேரும். சிறு குழந்தைகளிடம் இது போன்றவற்றை பேச சொல்லி கற்றுகொடுங்கள். நீங்களும் முன் உதாரணமாக சொல்லி பழகுங்கள். 



நன்றி சொல்ல எதுக்கு ரொம்பயோசிக்கணும் ? 


தமிழ் வலைதளங்கள் பல இருக்க நம்மை நினைவு வைத்து,மதித்து நேரம் செலவு பண்ணி நம் தளத்தை ஓபன் பண்றதே பெரிசு, தவிர வோட் போட்டு பின்னூட்டமும் போட்டுட்டு போறாங்க என்கிற போது ஒரு நன்றினு சொன்னா என்னங்க ? நிச்சயமா நன்றியை எதிர்பார்த்து அவங்க பின்னூட்டம் போடல...ஆனா நமக்கு நேரம் கிடைக்கும் போது குறைந்தபட்சம் பின்னூட்டதிற்கு பதில் அல்லது நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வது நல்ல பழக்கம். இதை சொல்லகூட பெரிசா யோசிக்கிற நாம், சகமனிதர்களை நேசிக்கிறோம் என்று சொல்வது எப்படி ஏற்புடையதாகும். அது பொய்...வெளிவேசம்...பெரிய சமாளிப்பு...!!

அதெல்லாம் சொல்ல முடியாது, எனக்கு பிடிக்காது, நேரமில்லை என்ற வீம்பில் இருப்பவர்களை விட்டு, நெருங்கிய நண்பர்களும் சற்று விலகியே நிற்பார்கள் என்பது நிதர்சனம். 
  
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?

மன்னிப்பு என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிபடுத்தும் ஒரு செயல். மனிதனின் உயர் பண்பு !!

மன்னிப்பு கேட்பது என்பதை ஏதோ தன் கௌரவத்தை அடகு வைப்பதை போல சிலர் பேசுவதை/எண்ணுவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மனித தன்மை...அதே சமயம் தன் செயல் அல்லது சொல்  பிறரை வருத்தபடுத்திவிட்டது என்பதை அறிந்த பின் மன்னிப்பு கேட்பது தெய்வீக தன்மை. ஆனால் குறைந்தபட்சம் நாம் மனிதராக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. 

ஒரு சொல்லோ செயலோ நம் மனதிற்கு சரியாக படும் அதேநேரம், பிறருக்கு பெரிய மனவருத்தத்தை அல்லது மன காயத்தை ஏற்படுத்திவிடலாம். அது நம் கவனத்திற்கு வந்தால் உடனே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவர் 'இல்லைங்க பரவாயில்லை என் மீதும் தவறு இருக்கிறது' என்று சமாதானத்துக்கு வந்துவிடுவார். அப்படியும் சொல்லவில்லை என்றால் அவரது மனசாட்சியே அவரை குத்தி காட்டி சிதைத்துவிடும்.

பகைவனுக்கும் அருளவேண்டும் என்று படித்திருந்தாலும் நம்மால் ஏன் அதை பின்பற்ற இயலவில்லை...? அதற்கு தடையாக நம் முன்னால் நிற்பது எது ? கர்வம், ஈகோ, தன்முனைப்பு போன்றவை தானே ?! இவை எதுவும் என்னிடம் இல்லை என்று சொல்பவர்களும் மன்னிப்பு என்று வரும்போது  தயங்கவே செய்கிறார்கள் !?


அனைத்து மதங்களும் மன்னிப்பதை பற்றி தெளிவாக விரிவாக கூறி இருந்தும் அதை ஏனோ பலரும் பெரிதுபடுத்துவதே இல்லை. பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை தேவன் மன்னிப்பான் என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில் செயல்படுத்துவதில்லை.


நெருங்கியவர்களிடம் ....


தன் நண்பனை பற்றிய தவறான தகவல்கள் நமக்கு சொல்லபட்டிருந்தால் அதை நம்பி அவருக்கு எதிராக தவறுகளை செய்யலாம். உண்மை தெரிய வரும் பட்சத்தில் வலிய சென்று மன்னிப்பு கேட்கலாம். 


மன்னிப்பு எதிரிகள் இரண்டு பேரை நண்பர்களாக்கி விடும். அதே நேரம் நண்பர்களுக்கிடையே என்றால்
நட்பு இன்னும் இறுக்கமாகி விடும், இத்தகைய  நட்புகளே மரணபரியந்தம் தொடர்ந்து வரும்.


மன்னிக்க முடியாது...

இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தால் அந்த பாதிப்பு உங்களுக்கு தான். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன் அலைய நேரும். உங்கள் சந்தோசம், உடல் ஆரோக்கியம்  உங்களுக்கு முக்கியம் என்றால் மன்னித்து பழகுங்கள்...

மன்னிக்க முடியாது என்பது எப்படி இருக்கிறது என்றால், 


* தவறு நடந்தது நடந்ததுதான்
* அதை சரிபடுத்திக்க முயற்சிக்கவே மாட்டேன்
* மறக்கவும் மாட்டேன்
* தவறுக்கு அடுத்தவங்களை காரணமாக சொல்வேன்
* சில நேரம் என்னையும் திட்டிப்பேன்
* மன அழுத்தத்தில் விழுவேன்
* மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்...?!!!


பலர் இப்படிதான் தேவை இல்லாததை சுமந்திட்டு நிம்மதி இல்லாம வாழ்ந்திட்டு இருக்கிறாங்க...கண்டதையும் சுமக்காம தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிட்டு, அவர்களை  மன்னித்து மறந்து சுத்தமாக புறக்கணித்து புறந்தள்ளிவிடுங்கள்...தெளிவாகுங்கள்...இயந்திரஉலகின்நாளைய ஓட்டத்திற்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டாமா...?! 

சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும்....
ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில் நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள், உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...


தொற்றுவியாதி போல அடுத்தவரையும் பீடிக்கும், பின்னிக்கொள்ளும்...நல்ல சமூதாயம் அமையும்...சமூகம் மாறவில்லை என்று இருக்காமல் முதலில்  நாம் மாறுவோம் மற்றவர்களையும் நல்ல பண்புகளால் மாற்றுவோம். நல்ல மாற்றங்களை நம்மில் இருந்து தொடங்குவோம்...விரைவில் நம் சமூகமும் மாறும்...

தொகுப்பு : மு .அஜ்மல் கான்.

No comments:

Post a Comment