இரவில் படுக்கைஅறையில் அணிந்துகொள்ள தயாரானதுதான் ‘நைட்டி’ (இரவணி) எனப்படும் நைட்டிரஸ் என்பது எனது தாழ்மையான கருத்து. புடவையோடு எக்கசக்க உள்ளாடைகள் அணிந்து பகல் முழுதும் அல்லல் படும் பெண்கள் இரவில் ரிலாக்ஸாக ‘நைட்டி’ அணிவதில் தவறில்லை. ஆனா இந்த ஆடையை பெண்கள் இரவு நேரங்களில் மட்டும் இல்லாமல், வீட்டில் இருக்கும் எல்லா நேரமும் அணிய ஆரம்பித்து விட்டனர்.
நைட்டி என்று பெண்களால் அழைக்கப்படும் இந்த உடைகள் பல வகைகளில் வருகிறது. சாக்குபை போல் ஒரே மாதிரி இல்லாமல் கவர்ச்சியாகவும் அதே சமயம் வசதியாகவும் இருக்கும் படி பல டிசைன்களில் இவை வருகின்றன. பிரைடல் செட் காப்ரி செட், பான்சி நைட்டி, ஹவுஸ் கோட், லாங் நைட்டி, ஷார்ட்ஸ், பைஜாமா செட், டெட்டி செட், ஷார்ட் நைட்டி, நைட் சூட் என பல மாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் பார்க்க வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உள்ளன. இதில் சில உடைகள் இரவில் மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக புதிதாக திருமணமான பெண்களுக்காக ஸ்பெஷல் நைட்டிகள் உள்ளன.
அதுதான் பிரைடல் செட். இதனை இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தமுடியும். இதில் நான்கு மாடல்கள் உள்ளன.
1, டூ பீஸ்- மாடல்களில் சிலிப், ஓவர்கோட் வரும்.
2,போர் பீஸ் நைட்டியில்- சிலிப், ஓவர் கோட் மற்றும் உள்ளாடைகள்,
3, சிக்ஸ் பீஸ். இதில் உள்ளாடைகள், சிலிப், ஓவர் கோட் பைஜாமா மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப்.
4, எயிட் பீஸ். இதில் சிக்ஸ் பீஸ் மாடல்களில் இருக்கும் உடைகள் மற்றும் ஒரு ஷார்ட்ஸ் அதற்கு டாப் வரும். ஆறு மற்றும் எட்டு உடைகள் கொண்ட நைட்டிகளில் எல்லாவற்றையும் அணிய வேண்டும் என்றில்லை. நமக்கு விரும்பிய செட்டுகளை தேர்வு செய்து அணியலாம்.
அடுத்து காப்ரி செட்: இது பனியன் துணியில் ஸ்லீவ்லெஸ் மற்றும் பாதி ஸ்லீவ் டாப் மற்றும் பாண்ட் என வரும். பான்சி நைட்டிகள், கவுன் போல இருக்கும். மெல்லிய ஸ்ட்ராப் பட்டை கொண்டு தொடை வரை மட்டுமே இது இருக்கும். சில சமயம் தேவைப்பட்டால் இதனுடன் ஓவர்கோட் சேர்த்து கிடைக்கிறது. புதிதாக டெட்டி செட், இது முக்கால் பாண்ட் மற்றும் டாப் என்று சொல்லும் ஷர்மிளா, நைட்டிகள், காட்டன், சாட்டின், பனியன் துணி மற்றும் நெட்டெட் காட்டன் துணிகளில் வருவதாக தெரிவித்தார்.
பருத்தி உடையில் வரும் நைட்டிகளை வெயில் காலத்தில் அணியலாம். சார்டின் குளிர்காலத்துக்கு ஏற்றது. உடம்பில் வழுவழுவென்று தழுவிக் கொண்டு இருப்பதால் பார்க்க அழகாக இருக்கும். பனியன் மற்றும் நெட்டெட் காட்டன் நைட்டிகள் எல்லா காலங்களிலும் அணியலாம். பான்சி மற்றும் பிரைடல் நைட்டிகளை சோப்பு தண்ணீரில் நனைத்து கைகளால் துவைத்தால் போதும். பிரஷ் மற்றும் வாஷிங்மெஷின் பயன்படுத்தக்கூடாது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் உடலை இறுக்கி பிடிக்கும் உடைகளை அணியமுடியாது. அவர்களுக்காகவே பெரிய சைஸ் நைட்டிகள் உள்ளன. இவை முழங்கால் வரை மட்டுமே இருக்கும். அதே போல் பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு பிரத்யோக நைட்டிகள் உள்ளன. இது அவர்கள் குழந்தைக்கு பால் கொடுக்க வசதியாக மார்பக பகுதியில் ஜிப் வைத்து இருக்கும். இவை பருத்தி துணியில் மட்டுமே கிடைக்கிறது.
நைட்டி அணிவது பற்றிய எனது கருத்து :
ஆரம்பத்தில் இரவில் மட்டும் நைட்டி அணிவது, அதிலும் மேல்தட்டு மக்கள் தான் அதிகம் அணிவது என்று இருந்தது. மெல்ல மெல்ல மாறி நாம் வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் பெண்களின் உடை நைட்டி என்பது போல் என்றாகியது. வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் உடை மாற்றிக் கொண்டு இருந்தனர். அதுவும் பிறகு மாறி ஒரு துப்பட்டாவோ, துண்டோ மேலே போட்டுக் கொள்ளவாவது செய்தனர். சமீபமாக அதற்கும் ஒருபடி மேலே போய் அப்படியே பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கும் போய் வர ஆரம்பித்து விட்டனர்.
இப்போ நம்ப ஊர் மக்கள் நைட்டி போட்டுட்டு மேலே கொஞ்சமும் மேட்சிங்கா இல்லாம டவல் போட்டுட்டு போறாங்க இல்ல அவங்களுக்காக துப்பட்டாவோட இப்போ நைட்டிகள் வருதாம்.இப்போ மார்கெட்டில் புதுசு புதுசா நிறைய நைட்டி ப்ராண்டு வந்துருச்சு. குடும்ப பெண்ணா உணர வைக்க நைட்டி தேவைப்படுது போல இப்போ விகாஸ், பொம்மீஸ், ஜூலியட், மங்கை, ராசாத்தி, பொன்னீஸ், நாசுரல் இப்படி ஏகப்பட்ட ப்ராண்டு கிடைக்குது. விலை 300 - 3000 சாதாரணமா. இன்னும் விலை அதிகமா கூட இருக்கு. நைட்டிக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா???!!!
குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது அவசரத்தில் நைட்டிகள் அணிந்து கொண்டு போகாதீங்க! உடல் பருத்த பெண்மணிகள் தமக்கு சற்றும் பொருத்தமில்லா இந்த ஆடையை அணிந்துகொண்டு தெருவில் நடமாடுவதும் காய்கறிவண்டிகாரனிடம் பேரம் பேசிக்கொண்டும் பிள்ளைகளை பள்ளி வேனில் ஏற்றிவிடுவது போன்ற வற்றை தவிர்க்கவும். இன்னும் சிலர் உள்பாவாடை வெளியே தெரிய ஆங்காங்கே கிழிந்து கந்தலான இதை சிறிதும் கூச்சமில்லாமல் அணிந்து நடமாடுவதை என்னவென்று சொல்வது. அணிவதற்கும், வேலை செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது என்பதற்காக இப்படியா? வெளியில் வரும் போதாவது கண்ணியமான உடைகள் அணிய வேண்டும் என்று தோன்றாதா? நாமே இப்படி உடை உடுத்தி விட்டு பார்க்கும் ஆண்களைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம் நாம்?
எந்த இடத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்ற விவஸ்தை கூடவா பெண்களிடம் குறைந்து போய் விட்டது? மற்ற அலங்காரத்திற்கு ஆகும் நேரம் ஆகுமா உடை மாற்ற?சமீப காலமாக, பல டீன் ஏஜ் பெண்கள் உடை உடுத்துவது பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. லோஹிப் பேண்ட், கண்டபடி வசனம் எழுதிய டீசர்ட்னு நன்றாக இருக்கும் ஆண்களைக் கூட கெடுப்பது போல் உள்ளது. பிள்ளைகளுக்கு தெரியவில்லை என்றால், அப்பெண்களின் அம்மாக்களாவது பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்லித் தர மாட்டார்களா? நம் பெண் நீட்டாக உடை உடுத்தி வெளியே செல்கிறாளா என்பதைக் கூட கவனிக்க முடியாத அளவு பிசியாகி விட்டார்களோ?பெற்றோர்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதில் உடை விஷயம் அத்தியாவசியமான ஒன்று. மாடர்ன் உடைகள் உடுத்த வேண்டாம்னு சொல்லவில்லை. பார்க்க கண்ணியமாக இருப்பது போல் உடுத்த சொல்லிக் கொடுக்கலாமே!
பெண்களே கொஞ்சம் யோசியுங்கள் நைட்டி அணியுங்கள் ஆனால் வீட்டில் மட்டும்!!
ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment