Sunday, 1 January 2012

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்....

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.

உங்கள் நண்பன்-மு.அஜ்மல்கான்.

No comments:

Post a Comment