Saturday 14 January 2012

உலகைக் கவரும் ஆயுர்வேதம்...

 

நேகல் ஷாவை ஒரு `சர்வதேச இளைஞர்’ என்று கூறலாம். பெங்களூரில் வசிக்கும் இவர், ஒரு ஜப்பானிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். அயர்லாந்து பெண்ணை மணந்துள்ளார். ஜெர்மானிய கார்களில் பைத்தியமாக இருக்கிறார். ஆனால் மருத்துவம் என்று வருகிறபோது, ஆயுர்வேதத்தை நாடுகிறார். ஆம், 5 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துக்கு தற்போது மதிப்பு அதிகரித்து வருகிறது.
படித்த நகர்ப்புற இளந்தலைமுறை, ஆயுர்வேதத்தை (ஆயுர்- உயிர், வேதம்- அறிவு) நாடத் தொடங்கியிருக்கிறது.
ஆயுர்வேதம் என்றாலே மசாஜ், மூலிகை ஷாம்புகள், இனிய மணமுள்ள மாய்சரைஸர்கள், பாட்டி வைத்தியம் என்பதைத் தாண்டி, ஆயுர்வேதத்தில் அனேக அதிசயங்கள் இருக்கின்றன என்பதைத் தற்போது உலக மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தீவிர நோய்ப் பாதிப்புகள் எப்போதையும் விட அதிகரித்துள்ள தற்போதைய நிலையில், பலரும் ஆயுர்வேதத்தை மவுசுமிக்கதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் முதல் பல் வலி வரை பல்வேறு தீவிர, சாதாரண நோய்ப் பாதிப்புகளை ஆயுர்வேதம் குணப்படுத்தவும், தடுக்கவும் கூடும் என்று நம்புகின்றனர்.
பலர், ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை தடுப்பு மருந்துகள் தவிர வேறு போதுமான நோய்த் தடுப்பு வழிகள் இல்லை என்று கருதுகின்றனர். ஆங்கில மருத்துவத்துடன் ஒப்பிடுகையில் ஆயுர்வேதம் மெதுவாகச் செயல்படும் என்றாலும், பக்க விளைவுகள் குறைவு என்பது இதன் சிறப்பு அம்சமாகி விடுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் நேரும் மரணங்களில் 53 சதவீதம், தீவிர நோய்ப் பாதிப்புகளால் ஏற்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டில் இறந்த 10 லட்சத்து 30 ஆயிரம் பேரில் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர், தீவிர நோய்ப் பாதிப்புகளால் மரணத்தைத் தழுவியவர்கள். இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 6 கோடியாக இருக்கும் என்கிறது ஒரு `பகீர்’ கணக்கு.
இந்நிலையில், தீவிரமான நோய்களுக்கு எதிராகவும் ஆயுர்வேதம் கவசமாக முடியும் என்று கருதப்படுகிறது.
“ஆயுர்வேதத்துக்கு இதற்கு முன் இந்தளவு அங்கீகாரம் கிடைத்ததில்லை, அதிகம் பேர் இந்தச் சிகிச்சை பெற்றதில்லை” என்கிறார், மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இதய மருத்துவச் சிகிச்சை நிபுணருமான எம்.எஸ். வலியதன். “ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையால் மட்டும் அனைத்து உடல் பிரச்சினைகளையும் சரிப்படுத்திவிட முடியாது என்று மக்கள் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார் இவர்.
தீவிர நோய்ப் பாதிப்புகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தால் எந்த அளவு உதவ முடியும்?
“ஆயுர்வேதம், அதிசயம் எதையும் நிகழ்த்துவதில்லை” என்கிறார், பெங்களூரில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ மற்றும் ஆயுர்வேத நிறுவன மருத்துவ இயக்குநர் ஜி.ஜி. கங்காதரன். “உதாரணத்துக்கு, `டைப் 1′ நíரிழிவு நோய்க்கான எங்களின் சிகிச்சையில் பஞ்சகர்மா அல்லது விரேச்சனா போன்ற சுத்தப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் அப்யங்கா, தன்யம்லதாரா, உத்வர்த்தனா போன்ற மசாஜ் தெரபிகள் உள்ளன. இவை, உடம்பில் சேர்ந்துள்ள நச்சுகளை அகற்றி, உள் உடலமைப்பைச் சுத்தப்படுத்த உதவுகின்றன. ஐந்தாண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கூட இந்தச் சிகிச்சை பயன் கொடுக்கும். ஆயுர்வேத நடைமுறைகளை தவறாது கடைப்பிடித்தால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடலாம்” என்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளில் நம் நாட்டில், இதய நோய்ப் பாதிப்பு நகர்ப்புறங்களில் 6 மடங்கும், கிராமப்புறங்களில் 4 மடங்கும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3 கோடி இதய நோயாளிகள் இருக்கிறார்கள். “இவர்களுக்கு மருந்து மட்டும் உதவாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் கூடிய ஆயுர்வேத வாழ்க்கைமுறைதான் வியாதியைக் கட்டுக்குள் வைக்க உதவும்” என்கிறார் வலியதன்.
வருமுன் தடுப்பதுதான் ஆயுர்வேதத்தின் அடிப்படை அம்சம். ஆகாரம் (உணவு), விகாரம் (வாழ்க்கைமுறை), அவுஷதம் (மருந்து) மூன்றின் கூட்டணியே ஒருவரை நலமாக வாழ வைக்கும் என்கிறது ஆயுர்வேதம்.
ஆகாரம் என்பது சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாக அமைய வேண்டும். `வாழ்க்கைமுறை’யில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. நித்திரை (உறக்கம்) என்பது இரவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாலை 3.30 மணி முதல் 5.30 வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிக்கவேண்டும்.
“நான் அறிந்தவரை, பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது அரிது” என்கிறார், பெங்களூர் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் டாக்டர் எம். ரமேஷ்.
“காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் போன்ற உடல் வேதிவினை மாற்றப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தினம் தவறாது அப்யங்கமும் (மசாஜ்), உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால், உடம்பில் `ஆமம்’ (நச்சுகள்) சேராது, பல உடல் வேதிவினை மாற்றக் குறைபாடுகள் தவிர்க்கப்படும்” என்று அடித்துக் கூறுகிறார், ரமேஷ்.
உடம்பின் நுண்ணிய மற்றும் பெரிய வாயில்களைச் சுத்தமாக வைத்திருந்தால் ஒருவரால் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் என்பது ஆயுர்வேதத் தத்துவம்.

No comments:

Post a Comment