பல்கலைக்கழகம் என்ற இலக்கு கீழ்பருவத்தில் படிக்கும்போது தெரிவதில்லை. ஏதோ படிக்கிறோம் அல்லது படிக்கத் திணிக்கப்படுகின்றோம் என்ற நிலையில் கல்விநிலை நம்மிடையே காணப்படுகின்றது.
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை என்ற கட்டாயத்துக்கும் பெற்றோரின் பெருமைகளுக்கும் என்றுமாய் முதலாவது திணிப்பு நாடகம் அரங்கேறுகிறது.
அதில் அந்தப்பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப அப்பரீட்சை போதுமானதாக இருந்தாலும், நமது பிள்ளைகளின் உள உடல் வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணப்படாதிருக்கின்றது. இதற்கு எமது பிள்ளைகளின் வளர்ச்சிப்பருவங்களில் பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்குரிய சரியான போசணையளவு பேணப்பட்டு வளர்க்கப்படுவது குறைவு. அதற்கு இதுவரை சரியான சுகாதார கட்டமைப்புக்கள் முறையாக 6 அல்லது 7 வயதுகளுக்கு மேல் இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.
சற்று பொருளாதார வசதி குறைந்த குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்கள் இப்பிரச்சனைக்கு இயல்பாக உள்ளாக்கப்படுகின்றனர். இது நமது நாட்டில் நடுத்தர அல்லது அதற்கும் குறைந்த பொருளாதார வசதியுள்ள குடும்பத்தினரே கூடிய சதவீதத்தில் இருப்பதால், புலமைப்பரிசில் பரீட்சையில் பிள்ளைகளை மிகவும் கஸ்டத்துக்கும் மனஉழைச்சலுக்கும் உள்ளாகக்கூடிய நிலையேயுள்ளது. இதை நாம் சாதாரணமாய் பார்க்கின்ற விடயம். இதற்கு ஒரு உதாரணமாக கடந்தமுறை நடந்த உண்மையான விடயத்தை பகிர்கிறேன்.
"ஒரு மாணவன் வகுப்பில் கெட்டிக்காரன். அவனது பெற்றோர் அவனை மிகவும் கஸ்டப்படுத்தியற்காக அவன் பரீட்சை மண்டபத்தில் சுட்டெண்ணை மட்டும் எழுதி விடைகளை எழுதாமல் வெறுமையாக கொடுத்திருந்தான்".
இந்த ஐந்தாரம் தரத்திற்குப் பிற்பாடு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் ஆறாந்தரத்தில் பிள்ளையை பெருமளவில் பெற்றோர் அக்கறை செலுத்தத் தவறுகின்றனர். காரணம் கடந்தவருடம் பிள்ளையை கூடுதலாகக் கஸ்டப்படுத்தியாச்சு ஆகவே ஏதாவது செய்யட்டும் என்ற மனப்பாங்கு அனேக பெற்றோரிடம் இருப்பது வருந்த்தக்க விடயம்.
இங்கு பெற்றோர் விடும் தவறு பிள்ளையின் கல்வியின் தொடரறா ஒத்துழைப்பில் கவனக்குறைவு நடக்கிறது. இதனால் பிள்ளைகள் மிகவும் பிரச்சனைகளுக்கும் கஸ்டத்துக்கும் உள்ளாகின்றமை உள்ளங்கை நெல்லிக்கனி.
பின்னர் கல்விப் பொதுத் தராதர (க.பொ.த)சாதாரணதரப் பரீட்சைக்கு ஆயத்தமாகும் தருணம். இது பிள்ளையின் முயற்சியும் பயிற்சியும் நிறைந்த நிலையிருக்கவேண்டிய தருணம். ஆனால் பிள்ளைக்கு சரியான ஒத்துழைப்பும் தொடர்ச்சியான கவனமும் தரம் 11 இலே தான் அதுவும் கடைசித் தவணையிலேதான் பெற்றோரிடமிருந்து கிடைக்கின்றது. இதனால் பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறத்தவறுகின்றனர்.
உண்மையில் பெற்றோரின் தொடர்ச்சியான கண்காணிப்பு தரம் ஆறிலிருந்து ஆரம்பமாகவேண்டும். பிள்ளைக்கு எழுதத்தெரிகிறதா, வாசிக்கமுடிகிறதா, ஏதாவது பிரச்சனை பிள்ளையின் கல்வியில் இருக்கிறதா என பாடசாலையில் ஆசிரியர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு பிள்ளைநேயக் கல்வியை ஊட்டவேண்டும். பின்னர் பிள்ளை தரம் 9 இற்கு வரும் போது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அதன்பின்னர் பிள்ளையின் எதிர்காலம், எதிர்காலத்தில் எந்தத்துறையில் பிள்ளைகள் முன்னேற முடியும், தெரிவுசெய்கின்ற துறையில் பாடங்களின் தெரிவு எவ்வாறு அமையவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களுடன் சேர்ந்து பெற்றோர் இதுபற்றிய கூடுதலான அறிவுறுத்தல்களையும் அனுபவப் பகிர்வுகளையும் சொல்லிக்கொள்ளவேண்டும்.
இது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில் சாதாரண தரத்தில் பிள்ளைகள் பரீட்சை எழுதியவுடனேயே உயர்தரப்பரீட்சைகளுக்குரிய பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பமாவதால் தீடீரென முடிவெடுத்து ஏதாவது ஒரு துறையில் உயர்தரக் கல்வியைத் தொடருகின்றனர். இதனால் பிள்ளைகள் சரியான துறையைத் தெரிவுசெய்யாததால் பிள்ளைகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பான முடிவுகளை பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ளத் தவறுகின்றமைக்கு ஒரு காரணமாக அமைகிறது.
பின்னர் மீண்டும் பெற்றோர் பிள்ளைகள் மீது தங்களது வெறுப்புணர்வுகளைச் சித்தரிக்கின்றனர். பிள்ளைகள் தங்களுக்கு தெரியாது இப்பதான் எல்லாம் தெரியுது என்று சொல்லியழும்போது நமக்கும் கண்கள் கலக்கமாக இருக்கின்றது. இதற்காக பிள்ளைகளை தரம் 9 இற்கு பிறகு சுயமான கற்றலுக்கும் கூடுதலான வாசிப்புப் பயிற்சிக்கும் பாடங்களின் வினாக்களுக்கான கூடுதல் பயிற்சிகளுக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் சேர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியில் வெறுப்புணர்வு ஏற்படா வண்ணம் ஆர்வமான முறையில் கல்விகற்றலின் சில பொருத்தமான நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்கவேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையல்லவா..
No comments:
Post a Comment