Wednesday 18 January 2012

இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்..?



இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ''முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்'' கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இத்தகையப் பிரச்சாரம் நடத்தப்படுகின்றது. இதை நாம் மிகையாகச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்ற திறந்த, பரந்த மனப்பான்மை இவர்களிடம் இல்லை. சிந்திக்கும் திறனும் இவர்களிடத்தில் இல்லையென்பதை இவர்களின் போலியான வாதங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இத்தகைய வாதத்தை வைக்கிறார்களோ, அதற்கு முன்னர் கூறப்பட்டது என்ன? தொடர்ந்து வரும் வசனங்களில் சொல்லப்படுவது என்ன? என்பதையும் சற்று நிதானத்துடன் கவனித்தால் தமது வாதங்களிலுள்ள அபத்தங்களை உணர்ந்து கெண்டிருப்பார்பார்கள்.

''இவர்கள்'' என்று நாம் குறிப்பிட்டது, இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்த அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களை மட்டுமே அடையாளப்படுத்தும், முஸ்லிமல்லாத அனைவரையும் சுட்டிக் காட்டவில்லை என்பதை புரிபவர்கள் புரிந்து கொள்ளட்டும். அதுபோல், இவர்கள், அவர்கள். அவன், இவன். அது, இது. அவை, இவை. போன்ற சொற்களை பிரயோகிக்கும்போது தனியாகப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே எது பற்றியாவது, எவரைப் பற்றியாவது பேசியிருந்தால் மீண்டும் அதைக் குறிப்பிடுவதற்காகவே இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.

''இன்று காலை 9 மணிக்கு வருவதாக முஹம்மதும், முஹைதீனும் நேற்று சொல்லிச் சென்றார்கள், இன்னும் 'அவர்கள்' வரவில்லையே என்று சொன்னால் 'அவர்கள்' என்ற வாசகம் யாரைக் குறிக்கும் என்பதை விளங்க என்ன சிரமம் இருக்கிறது. அவர்கள் என்றால் யார்? எத்தனை பேர்கள்? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் இந்த இடத்தில் இது பற்றி எதையும் விளங்காதவர்கள் ''அவர்கள்'' என்றால் மொத்த ஊரிலுள்ளவர்களையும் குறிக்கும் என்பதுதான் அசட்டுத்தனம்.

திருக்குர்ஆன் 2:191வது வசனத்தை விமர்சிப்பவர்களிடம் நியாயமான பார்வையிருந்தால் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்வதில் இந்த ''அவர்கள்'' என்பவர்கள் யார்? என்பதை முன், பின் வசனங்களிலிருந்து விளங்கியிருப்பார்கள். நேர்மையில்லாதவர்களிடம் நியாயமான பார்வையை எதிர்பார்க்க முடியாது. எனினும் இவர்களின் நேர்மையற்ற விமர்சனம் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

2:190.உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும். இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


மேற்காணும் ஐந்து வசனங்களும் போர் பற்றியே பேசுகிறது. இவ்வசனங்கள், போர் தொடர்பாக மதீனாவில் அருளப்பட்ட முதல் வசனங்களாகும். போர் பற்றிய வரம்புகள் இங்கு விளக்கமாகச் சொல்லப்படுகின்றது. போர் செய்ய நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

முதலில் திருக்குர்ஆன் 2:190 இறை வசனம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

9:13. அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?


உங்களுடன் போருக்கு வருபவர்களுடன், நீங்களும் போர் செய்யுங்கள் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகிறது. வம்புச் சண்டைக்கு, அதாவது வலியப் போருக்குச் செல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை. நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே முஸ்லிம் அரசாங்கம் போர் செய்ய வேண்டும். (இது பற்றிய விளக்கம் வரும் பகுதிகளில்)

இஸ்லாத்தின் ஆரம்பகாலப் பிரச்சாரத்தை மக்காவில் துவக்கியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குறைந்த அளவிலான முஸ்லிம்களும், மக்கா குரைஷிகளால் - மக்கத்துக் காஃபிர்களால் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடூரமாகக் கொலை செய்தும் வந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் திட்டமும் குரைஷிகளால் தீட்டப்பட்டது. இந்தக் கொடுமைகளிலிருந்து மீள, இறைத்தூதரும் - முஸ்லிம்களும், தமது உடமைகளையெல்லாம் இழந்து சொந்த ஊரையும் துறந்து வெளியேறினார்கள். வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

மக்காவைத் துறந்து சென்ற முஸ்லிம்களுக்கு மதீனா அடைக்கலம் தந்து ஆதரித்தது. இறைவன் காட்டிய வழியில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் மதீனாவில் ஒரு அரசு உருவாகியது. இந்த நேரத்தில் மக்காவில் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருந்த ''மக்கத்துக் காஃபிர்கள்'' முஸ்லிம்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தேத் தீருவோம் என்ற மூர்க்கத்தனத்தில் செயல்பட்டு, முஸ்லிம்களின் மீது வலிய போருக்கு வந்தார்கள். அதனால் மதீனாவில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்று இறைவனின் போர் பற்றிய முதல் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. கட்டளையிடும் அதே நேரத்தில் போரில் வரம்புகளை மீறி விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. (புரிந்து கொள்ள இந்த வரலாற்றுப் பின்னணி உதவியாக இருக்கும் என்பதால் சிறு விளக்கம்.)

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

190லிருந்து 194வரையுள்ள, போர் பற்றி அறிவிக்கும் வசனங்களில், 191வது வசனத்தை மட்டும் உருவியெடுத்துக் கொண்டு விமர்சிப்பது இவர்களின் நோக்கம் என்னவென்பதை வெள்ளிடை மலையாக விளக்கி விடுகிறது. இந்த வசனத்தில் (போர்க் களத்தில்) சந்திக்கும் போது ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே சொல்லப்பட்டுள்ளது. போர்க் களமென்று இங்கு சொல்லவில்லையே? என்ற கேள்வியெழுந்தாலும், ''உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்ற 190வது வசனத்தின் தொடர்ச்சியாகவே 191வது வசனமும் அமைந்திருக்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்து வைக்கும் (191வது) வசனத்திற்கு முந்தைய வசனத்தில் ''உங்களுடன் போரிட வருபவர்களை எதிர்த்து போரிடுங்கள்'' என்று கூறிவிட்டு, அடுத்த 191வது வசனத்தில் முஸ்லிம்களுடன் போருக்கு வருபவர்களேயே ''அவர்கள்'' என்று சுட்டுகிறது. 'அவர்கள்' என்றால் உங்களுடன் போர் செய்ய வருபவர்கள் என்பது எவருக்கும் விளங்கும். அதாவது முஸ்லிம்களை அழித்தொழிக்க படை திரட்டிக் கொண்டு வரும் எதிரிகளோடு போரிட்டு ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,191வது வசனத்தின் தொடர் வாசகங்கள் இவர்களின் தவறான வாதத்தை தகர்த்தெறிகிறது. ''அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு, நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்'' என்று கூறுகிறது, மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது ''மக்கத்துக் காஃபிர்களா?'' அல்லது ''பக்கத்துக் காஃபிர்களா?'' (சிந்திக்கவும்)

1.''அவர்களை''க் கொல்லுங்கள்'' 2.''அவர்கள்'' உங்களை ஊரை விட்டு வெளியேற்றியவாறு'' என 191வது வசனத்தில் இரண்டு முறை அவர்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மக்கத்துக் காஃபிர்களைத்தான் குறிப்பிடுகின்றது என்பதை விளங்கலாம்.

9:13. ''தமது, உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவங்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?''

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிம்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்கத்துக் காஃபிர்களே, முஸ்லிம்களுக்கெதிராக போரிடவும் வந்தார்கள். ''அவர்களுடன்'' போர் செய்ய வேண்டாமா? என, 9:13வது வசனத்தில் சொல்லப்படுகிறது. 2:190,191 ஆகிய இரு வசனங்களுக்கு, 9:13வது வசனம் விளக்கமாக அமைந்துள்ளது.

மேலும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்பதும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்வதாக பொருள் கொள்வது தவறான புரிதல்.

 
இஸ்லாம், ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்கிறதென்றால், இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் ''ஜிஸ்யா'' ஏன் வசூலிக்க வேண்டும்..?


இஸ்லாம் பற்றி, இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பும் பொய்யானத் தகவல்களை களைவதுதான் இந்தப் பதிவின் நோக்கமேயல்லாது, அனைத்து இஸ்லாமியப் போர்கள் பற்றியும் விளக்கிடும் நோக்கமல்ல. ''முஸ்லிமல்லாதவர்களை கொல்லுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் முன் வைக்கும் மற்றொரு, - 47:4வது - வசனத்தையும் பார்ப்போம்.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

மேற்காணும், வசனத்தில் ''காஃபிர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள்'' என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டு ''திருக்குர்ஆன் முஸ்லிமல்லாதவர்களையெல்லாம் வெட்டச் சொல்கிறது பாருங்கள்'' என இஸ்லாத்தின் எதிரிகள் எழுதி வருகிறார்கள். மேலும், 47:4வது வசனம் போர் பற்றியே சொல்லவில்லை, எனவும் ''ஒவ்வொரு முஸ்லிமும் கையில் ஆயுதத்தோடு அலைந்து கொண்டிருக்க வேண்டும், காஃபிர்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பிடரியில் வெட்ட வேண்டும்''. என்றும் இஸ்லாத்தை விமர்சிக்கும், சில பக்கத்துக் காஃபிர்கள் 47:4வது வசனத்திற்கு இப்படித்தான் விளக்கவுரை!? எழுதுகிறார்கள்.

இந்த விளக்கம் சரியா? என்று பார்ப்போம்.

1. ''அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள்'' என்பது போர் முனையில் காஃபிர்களை சந்திப்பது பற்றி சொல்லவில்லை, பொதுவாக போரிலில்லாமல் சாதாரணமாக முஸ்லிம்கள் ''முஸ்லிமில்லாதவர்களை'' சந்தித்தாலும் அவர்களின் கழுத்தில் வெட்ட வேண்டுமென்பதுதான் பொருளென்றால், நபி (ஸல்) அவர்களின் ஆட்சித் தலைமையில் மதீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபொழுது, காஃபிர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். முஸ்லிம்களும், காஃபிர்களும் அன்றாடம் சந்தித்து அளாவளாவி, நட்புடன் கொடுக்கல், வாங்கல்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் காஃபிர்களை சந்தித்தவுடன் அவர்களின் கழுத்தை வெட்டியிருந்தால் மதீனாவில் ஒரு காஃபிர் கூட எஞ்சியிருக்க முடியாது. 47:4வது வசனத்திற்கு எதிரிகள் சொல்வதுதான் உண்மையான விளக்கம் என்றிருந்தால் அதை முஸ்லிம்கள் அன்றே விளங்கி செயல்பட்டிருப்பார்கள். மதீனாவில் காபிஃர்கள் சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் அப்படிச் செய்யவில்லை - காஃபிர்களின் கழுத்துகளை வெட்டுங்கள் என்ற வசனத்தை போரில் சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வு என்பதை முஸ்லிம்கள் சரியாக விளங்கிக் கொண்டதால் மதீனாவில் முஸ்லிம்களும், காஃபிர்களும் சகஜமாக பழகி வாழ்ந்து வந்தார்கள்.

2. இஸ்லாத்தின் சட்டங்களை செயல்படுத்தும் - இஸ்லாமிய அரசு அதிகாரம் செலுத்தும் - நாட்டில் ''ஜிஸ்யா'' வரி என்று ஒன்று வசூலிக்கப்படும். இந்த வரி முஸ்லிமல்லாத குடி மக்களின் மீது விதிக்கப்படுகிறது. ''காஃபிர்களை சந்தித்தால் அவர்களின் கழுத்துக்களை வெட்டுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வசனம் போரில் சந்திக்கும் போது வெட்டுவதைப் பற்றி சொல்லவில்லையென்றால், இஸ்லாம் அதிகாரம் செலுத்தும் நாட்டில் முஸ்லிமல்லாதவர் ஒருவர் கூட வாழ முடியாது. பின் ஜிஸ்யா வரி எதற்கு?

இஸ்லாமிய அரசு இல்லாத நாட்டில் ஜிஸ்யா வரி இல்லை. இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தும் அதிகாரம் பெற்ற நாட்டில் மட்டுமே முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்க முடியும். அப்படியானால் இஸ்லாமிய அரசு ஆட்சியிலிருக்கும் ஒரு நாட்டில் முஸ்லிம்களும், முஸலிமல்லாதவர்களும் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்பதை மேலோட்டமாக பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் - சிந்திக்கவும்.

இனி 47:4வது வசனத்தைப் பார்ப்போம்.

1.''நிராரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்.''
2. ''முடிவில் அவர்களை வென்றால் போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும்வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்.''
3. ''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம்''


''நிராரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்.'' என்று கூறி, அடுத்த வாக்கியத்தில், ''அவர்களை வென்றால்'' என்று சொல்லப்படுகிறது. ''அவர்கள்'' என்பது நாம் முதல் கட்டுரையில் விளக்கியது போல, இந்த வசனத்திலும் முதல் வாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ''காஃபிர்கள் - நிராகரிப்பவர்களையே குறிப்பிடுகிறது. பிறகு என்ன சொல்கிறது? ''போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை'' இங்கு மிகத் தெளிவாகவே, ''போர், சண்டை, யுத்தம்'' - (''war, fight, combat, battle'') - என்பதைக் குறிப்பட்டுச் சொல்லும் ''அல் ஹர்ப்'' என்ற வாசகமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (47:4வசனம் போர் பற்றி சொல்லவில்லை என்று மறுப்பவர்கள் தாராளமாக தங்கள் எதிர் கருத்துக்களை வைக்கலாம்)

''போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை'' என்று ஆயுதங்களோடு போருக்கு வருபவர்களை என்று விளங்குவதில் எந்த சிரமும் இல்லை, ஆனாலும் மிகவும் வெண்மையான இந்த வசனத்தைத் திரிக்க முயற்சிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, கருமையைப் பூசிட முயல்கிறார்கள்.

''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம்'' இங்கேயும் இந்த வசனத்தை திரிப்பவர்ளுக்கு மிகத் தெளிவான விளக்கமிருக்கிறது. - ''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்'' - போரில் தோற்கடிக்கப்பட்டு, போரில் வென்றவர்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களேயே போரில் தோற்ற எதிரணியினர் ஈட்டுத் தொகைக் கொடுத்து தங்கள் போர் வீரர்களை மீட்டுக் கொள்வார்கள்.

சுதந்திரமான எந்த மனிதனையும் பிடித்து வைத்துக்கொண்டு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே போரில் தோற்கடிக்கப்பட்டு பிடிபட்டவர்களே, ஈடு பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டார்கள்.

அன்றைய போர் என்பது, நூற்றுக் கணக்கான, பல்லாயிரக் கணக்கானவர்கள் மோதிக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல, ஒண்டிக்கு ஒண்டியாக மோதுவதும் போராகவே கொள்ளப்பட்டது. போர் சூழலை மேற்கொண்டு போரிடத் தயாராகும் இரு அணியும் தங்களது ராணுவத் தளங்களை ஸ்திரப்படுத்தி அமைத்துக் கொள்வார்கள். பிறகு முதன் முதலில் அங்கிருந்து ஒருவர், இங்கிருந்து ஒருவர் என களமிறங்கி எதிரியைச் சந்தித்து ஒத்தைக்கு ஒத்தையாக சண்டையிடுவார்கள். இருவருமே மற்றவர் கழுத்தை வெட்டுவதற்கு குறி வைத்தபடியே சண்டை நடக்கும், இதுவும் போர்தான். பிறகு மூன்று பேராகக் களமிறங்குவார்கள், இப்படியே போர் உக்கிரமடைந்து இரு அணியினரும் மோதிக் கொள்வார்கள். இதில் இரண்டு அணியினருமே கொல்லப்படுவார்கள்.

போரில், முஸ்லிம் காஃபிரை பிடரியில் வெட்டவில்லையென்றால், காஃபிர் முஸ்லிமைப் பிடரியில் வெட்டி விடுவார். காஃபிர், முஸ்லிமை பிடரியில் வெட்டவில்லையென்றால், முஸ்லிம் காஃபிரை பிடரியில் வெட்டி விடுவார். இது போரில் நடக்கும் சம்பவம். இதையெல்லாம் திரித்து இஸ்லாத்தின் மீது அவதூறு சுமத்தப்படுகிறது. எனவே...

ஆயுதமேந்தி போருக்கு வருபவர்களையே ''சந்தித்தால் அவர்களின் பிடரியை'' வெட்டுங்கள் என்பதை புரிந்து கொள்வதற்காகவே - (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) ''நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்.'' - திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு அடைப்புக் குறிக்குள் (போரில்) என்று விளக்கியிருக்கிறார்கள். 47:4வது வசனத்தின் பின் வரும் வாசகங்கள் போரில் நடப்பது பற்றியே பேசுவதால், போரில் சந்தித்தால் அவர்களின் பிடரியை வெட்டுங்கள்'' என்பது மிகையான மொழி பெயர்ப்பு அல்ல. வசனத்தின் மற்ற வாசகங்கள் இதையே உறுதிபடுத்துகிறது.

8:57. எனவே, போரில் நீர் அவர்கள் மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
போரில் சந்திக்கும் எந்தவொரு அணியும், எதிரணியை வென்று விட்டால் அவர்களை பின்னோக்கி ஓடும்படி விரட்டுவார்கள். இது மீண்டும் ''அவர்கள்'' போருக்கு வராமலிருக்க பாடமாக அமையும். இரு தரப்பினருக்கும் இது பொருந்தும். இந்த வசனத்திலுள்ள ''அவர்கள்'' யார் என்றால் போர் தொடுத்து வருபவர்களேயே ''அவர்களை'' எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறது. சண்டைக்கு வராதவர்களுடன், வலியச் சென்று சண்டையிடச் சொல்லவில்லை இஸ்லாம்.

(விளக்கங்கள் தொடரும்)

குறிப்பு: முதலில் ''பூ'' விற்க வந்துவர் இப்போ ''புஷ்பம்'' என்று விற்க வருகிறார். உள்ளேயிருக்கும் வியாபாரப் பொருள் ஒன்றுதான் பெயரில் மட்டுமே மாற்றம் உள்ளது. இவர், ''முஸ்லிம்கள்'' என்ற பதம் ''நம்பிக்கையாளர்கள்'' என்ற கருத்திலேயே திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் அவருக்கு நினைவூட்டி இந்த வசனம்...

22:78. ''அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்''
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ''முஸ்லிம்கள்'' என இறைவனே பெயரிட்டிருக்கிறான். திருக்குர்ஆனில் மற்ற வசனங்களில் இடம்பெறும் ''முஸ்லிம்'' என்பதை நம்பிக்கையாளர் என்று மொழி பெயர்த்தாலும், ''ஹுவ ஸம்மாக்குமுல் முஸ்லிமீன்'' இங்கே ''ஸம்மாக்கும்'' என்று ''உங்களுக்கு பெயரிட்டான்'' என்று இறைவன் சூட்டிய பெயரை மொழி பெயர்க்கக் கூடாது.

கருப்பருக்கு, வெள்ளையன் என்று பெயர் வைத்தால் வெள்ளையன் என்றுதான் அழைக்க வேண்டும். நோயாளியாக இருந்தாலும் ஆரோக்கியம் என்று பெயர் வைத்தால் நோயாளியையும் ஆரோக்கியம் என்றுதான் கூப்பிட வேண்டும். பெயர் என்பது காரணத்துடன் வைக்கப்படுவதில்லை, பெயர் ஒரு குறியீடுதான். முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தை முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவது, அப்படித்தான் அல்லாஹ் பெயர் சூட்டியிருக்கிறான் என்பதால், அப்படி எங்களை நாங்கள் குறியீடு செய்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment