தொல்லை தரும் வைரஸ் கிருமிகள்-இயற்கை வைத்தியம்!..
நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக செயல்
படுவதில்லை.
சளி, குருதி, குருதி படிந்த கருவிகள், உடல் திரவங்கள், இனப்பெருக்க திரவங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாக பரவும் வைரஸ் கிருமிகள், குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து வீரியம் பெற்றதும், அத்தியாவசிய உறுப்புகளை தாக்கி, பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒரு வைரஸ் கிருமி உடல் செல்லை தாக்கி, அதற்கான நோய் குறிகுணங்களை முதன்முதலில் காட்டத் தொடங்கும் காலத்தில் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் வைரஸ் கிருமிகளை சரியாக எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் நோயின் தீவிரம் அதிகரித்து பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடும். வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடலிலேயே போதுமான அளவு அமைந்துள்ளன. இவை வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைந்ததும் இம்யுனோ குளோபின்களை அதிகரித்து நோயை கட்டுப்படுத்துகின்றன. இந்த இம்யுனோ குளோபின்களின் அளவைக்கொண்டே நோயின் தீவிரம் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் டி.என்.ஏ. வரை தாக்குதலை ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஆற்றலுடையவை வைரஸ் கிருமிகள். உயிரற்ற செல்களில் இவை அழிந்துவிடுவதாலும், வீரியம் குறைவதாலும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைப் போல் மின் நுண்ணோக்கியில் பார்க்க இயலுவதில்லை.
வாய், உதடு, நாக்கு, தொண்டை, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மென்மையான தோல் பகுதிகள் ஆகியவையே வைரஸ் கிருமிகளின் இலக்காகும். இவற்றில் ஏற்படும் தாக்குதலே தொண்டை வலி, அம்மை, அக்கி, மரு, பாப்பிலோமா, நாய்முள், நாக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்பில் கடுமையான குழிப்புண்கள் ஆகியவற்றில் கொப்புளங்களாகவும், புண்களாகவும் வைரஸ் கிருமியின் தாக்குதலின் அடையாளமாக நாம் உணருகிறோம். இதனால் தோன்றும் சிறு சுரம், வலி ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையின வழிமுறைகளாம். ஹெர்பஸ் வைரஸ், அடினோ வைரஸ், புளூ வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் கிருமி தாக்குதலை நீக்கி, நம்மை காக்கும் எளிய மூலிகை மயிற்கொன்றை.
செசல்பினியா பல்செரிமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட செசல்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலை மற்றும் பூக்களிலுள்ள பிளேவனாய்டு குர்சிட்டின் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை.
வைரஸ் கிருமித் தொற்றினால் தோன்றும் சுரம் மற்றும் தொண்டைவலி நீங்க மயிற்கொன்றை இலைகளை இடித்து, சாறெடுத்து 15 முதல் 30 மில்லியளவு வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் விதைகளை அரைத்த தடவ, இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும். இலைச்சாற்றை தடவ, அக்கி தீவிரம் குறைந்து, தழும்பு மற்றும் அதனால் உண்டாகும் வலி மறையும்.
மயிற்கொன்றை இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 15 கிராம் இலைப்பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 125 மிலியாக சுண்டிய பின் வடிகட்டி குடிக்க சுரம் நீங்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
No comments:
Post a Comment