கடவுள்!
மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.
ஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.
கடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.
அதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை "நாத்திகவாதியாக" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.
ஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.
ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக சொல்கின்றனர் நாத்திகர்கள்.
உண்மைதான். ஆய்ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.
அதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.
அறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம். ஆம்! ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.
இப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள்
சரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,
காரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விளைவு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது.
ஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.
அதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்?
பேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?
ஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.
இலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை!
No comments:
Post a Comment