Sunday 1 January 2012

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் - திட்டமிடுதல்/தன்னம்பிக்கை/வாழ்க்கையின் இரகசியம்!....

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் .....

திட்டமிடுதல்

முன்னொரு காலத்தில் அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். அரண்மனைக்குச் சென்று 'எனக்கு அரசர் பதவி வேண்டும்' என்று கேட்டால் போதும், அரியணையில் அமர்த்தி முடிசூட்டிவிடுவார்கள். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

மேற்கண்ட கதையை கவனியுங்கள்!
''ஐந்து ஆண்டுக்குப் பிறகு காடும் சாவும்தான் விதி'' என்ற விதியை மதியால் எப்படி மாற்றினான்?

வறுமையும், நோயும், மன உளைச்சலும், அவமதிப்பும்தான் நம்முடைய விதியா?

பசி, பிணி, மூப்பு, சாக்காடுதான் தலையெழுத்தா? எப்படியும் மரணம்தான் என்பது ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் வகுக்கப்பட்ட விதியாக இருந்தாலும், இறுதிக் காலத்தை ஏன் இறுகிப்போன காலமாகக் கழிக்க வேண்டும்?

அதற்காகத் துல்லியமாகத் திட்டமிடுங்கள்.
எப்போது செய்ய வேண்டும் என்று அழகாகத் திட்டமிடுங்கள்.
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
 தன்னம்பிக்கை

 

ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம்
" சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது.
சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.
ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து,
" ஏன் ஓடுகிறீர்கள் ? " என்று கேட்க,
" என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. எவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது " என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி,
" வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்." என்றது. அதற்கு சிங்கம்,
" சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் " என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,
" கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் " என்று சொன்ன உடன்,
இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.

- இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலை படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

உதாரணம், ஒரு ஒருவழி சாலையில், நீங்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி கொண்டு செல்கிறீர்கள், அப்போது எதிரே பஸ் அல்லது லாரியோ எதிரே வேகமாக வருகிறது சில நொடிகளில் விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலை, இந்த தருனத்தில் நீங்கள் அய்யோ என்று பதறினால் ஒன்றும் நிகழப்போவதில்லை உங்களுக்கு நன்மையாக, ஆனால் உங்களின் கவனத்தை எதிரே வருகிற வாகத்தை எப்படி தவிர்த்து ஒதுங்கி போவது என்று சிந்தித்து அதன்படி உங்கள் வாகத்தை செலுத்தினால் அந்த விபத்திலிருந்து தப்பலாம்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும் தன் நம்பிக்கையுடன். எனக்கு அது போல சூழ்நிலை ஏற்படுவதுண்டு என் மனைவி அய்யயோ இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதுண்டு நான் அதை பற்றி சிந்திக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அதன்படி செயல்பட ஆரம்பித்து விடுவேன். பிறகு அந்த சூழ்நிலை மாறியதும் என் மனைவியிடம் சொன்னால் அதற்கு நீங்கள் ரொம்ப அழுத்தம் என்பார்கள்.

எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி.

தன்னம்பிக்கை வேண்டும் பதட்டம் வேண்டாம்... வெற்றி உங்களுக்கே...


ஒரு கப்பல் கட்ட வேண்டுமா? உங்கள் ஆட்களைக் கூப்பிட்டு, மரத்தைக் கொண்டுவரச் சொல்லி, வேலைகளைப் பிரித்துக்கொடுத்து, உத்தரவுகள் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்காதீர்கள். முடிவு இல்லாத அகண்ட கடலை நினைத்து ஏங்குவதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் போதும்.

எல்லோரையும் நம்முடைய பயணத்தில் சேர்த்துக் கொள்ளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள்  ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களின் அடி மனத்தில் நுழைந்து பாதித்து, உங்களைவிட அவர்கள் அதிக உற்சாகமாகப் புறப்படும்படி செய்துவிட வேண்டும்.

மனிதர்களை கூட்டு சேர்த்துக்கொள்வது என்றால், அவர்கள் முழுக்க முழுக்க ‘இது என்னுடைய வேலை’ என்று சொந்தம் கொண்டாட வேண்டும். அதற்கு, தொழில் இலக்குகளோ, புள்ளி விவரங்களோ போதாது. ஒரு லட்சிய வேள்வியின் பயனாக விளைவது அது.

கூட்டாளிகள் வந்து சேர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் மும்முனைத் திட்டம்.
         
1. எடுத்த காரியம் வெல்ல வேண்டும்.
        
2. நாம் வெல்ல வேண்டும்.
        
3. நம்முடன் சேர்ந்தவர்கள் வெல்ல வேண்டும்.

நம்முடைய லட்சியத்தால் கவரப்பட்டு, தோழர்கள் தானாக வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்; நம் சுருதியில் இழைந்து பாட வேண்டும். யாரையும் வலிமையைக் காட்டி இழுக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டோமானால், எப்போது அவர்கள் நம்முதுகில் குத்துவார்கள் என்றே தெரியாது. நம் முதுகைக் காப்பாற்றுவதற்கே நேரம் சரியாகப் போய்விடும். ஆனால் பணியின் மீது முழு ஈடுபாட்டை அவர்கள் மனத்தில் ஏற்படுத்தி விட்டால் போதும்; எப்போதும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.

வாழ்க்கையின் இரகசியம்!

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
 உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
 பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நன்றாகப் பேசுவது நல்லதுதான்
ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!

முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி
மெளனமாக இருப்பதுதான!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!

இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

No comments:

Post a Comment