Wednesday, 4 January 2012

முந்தைய இமாம்களுடைய அரும்பணியை மறந்து விடக்கூடாது

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றிருக்கும் நாம் அந்த மார்க்கத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மார்க்கம் எவ்வாறு நம்மை வந்தடைந்தது, இந்த மார்க்கத்திற்கும் நமக்கும் மத்தியிலுள்ள தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும், என்பதையெல்லாம் நாம் புரிந்துக் கொண்டால் தான் இந்த மார்க்கத்தை முழுமையாக நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.

மார்க்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு அல்லாஹ்வினுடையது:

இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்கும்; இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தவிடு பொடியாக்கி மார்க்கத்தை இந்த பூமியில் மேலோங்கச் செய்வதற்கும் உரிய மாபெரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். ஆகவே அந்தப்பணிகளுக்கு ஏற்ற, தகுந்த மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டேயிருக் கின்றான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்.
-முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.
(அல்குர்ஆன்: 9:33)
இந்த வசனத்தில் தூதர்கள் அனுப்பப்பட்டதன் உயரிய நோக்கத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இந்த உலகத்தில் உள்ள மதச்சித்தாந்தங்களுடன் பத்தோடு பதினொன்றாக இருப்பதற்காக இஸ்லாத்தை அல்லாஹ் அருளவில்லை, மாறாக இந்த உலகத்தில் மதச்சித்தாந்தங்கள் என்று எத்தனை இருக்கின்றனவோ அத்தனையைவிடவும் இஸ்லாம் முதன்மையானதாக இருக்க வேண்டும். அத்தனைச் சித்தாந்தங்களையும் விஞ்சியதாக இஸ்லாம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை அல்லாஹ் குறிப்பிடுவதை இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்படும் உதவியாளர்கள்:
மேற்கூறப்பட்ட மகத்தான நோக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக அல்லாஹ் பல நிலைகளில் உதவிகளைப் புரிந்து கொண்டேயிருந்தான். ஸஹாபாக்களில் ஆரம்பித்து இன்று வரை அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மக்கள் இந்த மார்க்கத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தனி மனிதனோடு புறப்பட்ட இந்த மார்க்கம் மேலோங்கி மேலோங்கி அதன் இறுதி நிலை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

எங்கெல்லாம் இரவு, பகல் உதிக்கின்றனவோ அங் கெல்லாம் இந்த மார்க்கம் சென்றடையும். கண்ணி யமானவன் கண்ணியத்துடனோ, கேவலமானவன் இழிவைச் சுமந்தோ இந்த மார்க்கத்தைப் பெற்றேத் தீருவான். இந்த மார்க்கம் ஒவ்வோரு கிராமத்திலுள்ள வீட்டிலும் போய்க்கதவைத் தட்டும்.

நகரத்திலோ, கிராமத்திலோ, குக்கிராமத்திலோ இருக்கக்கூடிய எந்த வீட்டிற்குள்ளும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை கொண்டுபோய் நுழைக்காமல் விடமாட்டான். இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக பிரச்சாரம் செய்யவோ, போராட்டங்கள் புரியவோ அல்லாஹ் வானத்திலிருந்து மலக்குகளை அனுப்பமாட்டான். அல்லாஹ் இந்த சமுதாயத்திலி ருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை களம் இறக்குகின்றான். அவர்கள் மார்க்கத்திற்காக உழைக்கின்றார்கள், தியாகம் செய்கின்றார்கள். அவர்களுக்கு உதவியாக தனது புறத்திலிருந்து மலக்குகளை அனுப்புகிறான், உதவிகள் புரிகிறான், பல அற்புதங்கள் நடந்தேறுகின்றன. அவர்களுக்கு அல்லாஹ் பரகத் செய்கின்றான்.
இவ்வாறு இந்த மார்க்கம் மேலோங்கிக் கொண்டிருக்கின்றது. மேலோங்கியே தீரும் என்று அல்லாஹ் முடிவெடுத்திருக்கின்றான் அது நடந்து கொண்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் இந்த மார்க்கம் நம்மை வந்தடைவதற்காக எவ்வளவு பேர் என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தியாகங்களை செய்த தியாகிகளின் வரலாற்றைத் நாம் தெரிந்து கொள்ள கடமைப்பட்டி ருக்கின்றோம்.
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது (அல்குர்ஆன் 12:111) என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பது போல, இது வரலாற்றுடன் தொடர்புள்ள ஒரு தலைப்பு. இந்த வரலாறுகளின் மூலம் நாமும் படிப்பினை பெற வேண்டும், அதன் அடிப்படையில் நமது செயல்பாடுகளை அமைத்துக்க கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நினைவூட்டலின் நோக்கம். அப்படி அறிவதன் மூலம் நமது ஈமானிய பலம் கூடுவதற்கு வாய்ப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.

நாம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனைக்கு வந்திலுக்கின்றோம். ஷிர்க் (இணைவைப்பு), பித்அத் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களை இனம் கண்டு அவற்றிலிருந்து விலகி தவ்பா செய்தவர்களாக இருக்கின்றோம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
மார்க்கத்தின் எதார்த்த நிலையை முதன் முதலில் தமிழகம்தான் தந்திருக்கின்றதா? இதை முதன் முதலில் தமிழகத்திலிருந்து தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயமாக இல்லை. இந்த மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடியவர்களை அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கிறான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் ஒரு சிலரை அனுப்புகின்றான். அவர்கள் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றார்கள்.
ஒரு நபரை அல்லாஹ் அனுப்புகிறான் அவர் வந்து மார்க்கத்தின் பெயரால் மலிந்து கிடக்கின்ற அனாச்சாரங்களை களையெடுக்கின்றார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மார்க்கம் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. அதாவது எதார்த்த (உண்மை) நிலை நம் சமுதாயத்திற்கு உணர்த்தப்பட்ட பிறகும் திரும்பவும் அப்படியே வழி தவறி போய்விடுகிறார்கள். திரும்ப அல்லாஹ் அடுத்த நூற்றாண்டில் இன்னொரு நபரை அனுப்புகின்றான். இப்படியே அல்லாஹ் அனுப்பிக் கொண்டேயிருக்கின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்னுடைய சமுதாயத்தில் ஒரு பிரிவினர் தொடந்து சத்தியத்தில் இருப்பார்கள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்களாக ஒரு பிரிவினர் இந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டேயிருப்பார்கள். அவர்களுடைய கொள்கைக்கு யார் மாறு செய்கின் றார்களோ அவர்களை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கட்டளை மறுமைநாள் வரும் வரைக்கும் இது நீடித்துக் கொண்டே இருக்கும்.

முன்மாதிரிச் சமுதாயம்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்தார்கள். அதற்கு பிறகு ஸஹாபாக்கள் தியாகம் செய்தார்கள். இன்றைக்கு மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஸஹாபாக்களின் தியாகங்கள் கூட மறுக்கப்படும் நிலைதான். இந்த மார்க்கத்திற்காக உழைத்த, உயிரைக் கொடுத்த நபித்தோழர்களின் தியாகங்களை கூட புறக்கணித்து ஒரு தவறான சாயம் பூசப்படும் நிலையை நாம் பார்க்கின்றோம். ஆனால் அல்லாஹ் முதன் முதலில் இந்த மார்க்கத்தை இந்த உலகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதற்கு முன்மாதிரிச் சமுதாயமாக அவர்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்துகின்றான்.

இந்த மார்க்கத்திற்கு இப்படியெல்லாம் கூட தியாகங்களைச் செய்ய முடியும் என்று தியாகத்திற்கே உதாரணமாக அவர்கள் திகழ்ந்ததை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.

தமிழக மக்களின் நிலை
ஸஹாபாக்களுக்குப் பிறகு தியாகிகளின் நீண்ட பட்டியல் இருக்கின்றது. அந்த தியாகிகளின் வரலாற்றிற்கும் தமிழக மக்களுக்கும் மத்தியில் மிக நீண்ட இடைவெளி உள்ளது. எப்படிப்பட்ட தியாகங்கள் செய்யப்பட்டு நம் வரை இஸ்லாம் வந்துள்ளது என்ற வரலாற்றுத் தகவல்கள் தமிழக மக்களை வந்தடையவில்லை. இந்த வரலாற்றுத் தொடர் விடுப்பட்டதற்கு உர்தூ, அரபி போன்ற மொழி அறியாமையின் காரணமும் ஒன்றாகும்.
சஹாபாக்களின் தியாகங்கள் பற்றி நாம் இங்கு அதிகம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தளவிற்கு அவர்கள் மார்க்கத்திற்காக தியாகம் செய்திருக்கின்றனர்.

ஸஹாபாக்களுக்குப் பின்னும்…?
ஸஹாபாக்களின் தியாகங்களைப் பற்றி நாம் அங்காங்கே ஒரு சில சம்பவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்குப்பிறகு அல்லாஹ் தாபிஈன்களில் சில மக்களை மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காகவே தேர்ந்தெடுக்கின்றான்.

தாபியீன்களில்…
  • ஸயீத் இப்னு முஸய்யிப்(ரஹ்) (ஹிஜ்ரீ- 90 மரணம்)
  • உர்வாபின் சுபைர்(ரஹ்)
  • ஸாலிம் பின் அப்துல்லாஹ்பின் உமர்(ரலி) (உமர் (ரலி) பேரர்) (ஹிஜ்ரீ -106 மரணம்)
  • காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்கர்(ரஹ்) (ஹிஜ்ரீ-106)
  • உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) (ஹிஜ்ரீ-101)
இவர்களெல்லாம் குர்ஆன், சுன்னா வழியில் ஷிர்க், பித்அத்துகளைக் களையெடுப்பதற்காக பாடுபட்டவர்களில் மிகவும் முயற்சி எடுத்தவர்கள் ஆவர்.

தபவுத் தாபியீன்களில்… இமாம் மாலிக்(ரஹ்)

தாபியீன்களுக்குப் பிறகு தபவுத் தாபியீன்களின் காலம். அதில் தலையாய இடத்திலிருப்பவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள். நான்கு மத்ஹப்களின் இமாம்களில் ஒருவராக பிரபலமாகியிருக்கும் இமாம் மாலிக் பின் அனஸ்(ரஹ்) அவர்கள் இந்த பூமியில் குர்ஆன், சுன்னாவை நிலைநாட்டுவதற்காக என்னவெல்லாம் தியாகங்களை மேற்கொண்டார்கள் என்பது பற்றி நமக்குக் கூறப்பட்டதோ? இல்லையோ? இமாம்களின் பெயரைச் சொல்லி விமர்சித்ததையும் அவர்களை துச்சமாகக் கருதி அவர்களைக் குறை கூறியதையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

மத்ஹபுகளை விமர்ச்சிப்பது வேறு, இமாம்களை விமர்ச்சிப்பது வேறு, தன்னுடைய வாழ்க்கையில் ஐங்காலத் தொழுகையைப் பேணுதலாகத் தொழாதவர்களெல்லாம் இஸ்லாத்திற்காக தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த இமாம்கள் மீது மிக மோசமான வார்த்தைகள் துணிந்து உபயோகப்படுத்துவதை தமிழக மக்களுக்கு மத்தியில் மட்டும்தான் காணமுடிகிறது.

நம்முடைய பலவீனம், கல்வியின்மை, கல்விக்கும் நமக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இவற்றின் காரணத்தால் இஸ்லாத்திற்காக மிகப்பெரிய தியாகங்கள் செய்திட்ட, எவர்களுடைய முயற்சியினால் இன்று நாம் குர்ஆன், சுன்னாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோமா அப்படிப்பட்ட தியாகிகளை புறந்தள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய துணிவு சில தமிழக பேச்சாளர்கள் சிலரிடம் வந்திருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் இஸ்லாத்திற்காக எவ்வளவு பெரிய தியாகங்கள் செய்தார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை பாருங்கள்.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் காலத்தில் ஒரு கலீஃபா இறந்து விட, அடுத்ததாக ஜஃபர்பின் சுலைமான் என்பவருடைய ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் இமாம் மாலிக் (ரஹ்)அவர்களுக்கு ஆட்சிக்கட்டிலிலிருந்து ஒரு நெருக்கடி வருகிறது. “ஒரு மனிதன் நிர்ப்பந்திக்கப்பட்டு தலாக் சொன்னால் அந்த தலாக் செல்லாது என்ற ஹதீஸை மக்களுக்கு நீங்கள் அறிவிக்கக்கூடாது” என்பது தான் அந்த நெருக்கடி.காரணம், அங்கு ஆட்சித் தலைவருக்கு நிர்ப்பந்தமாக பைஅத் வாங்கப்பட்டு வந்த சமயம் அது. நிர்ப்பந்தமான தலாக் செல்லாது எனும்போது நிர்ப்பந்தமாக வாங்கப்பட்ட பைஅத்தும் செல்லாது என்றாகிவிடும் அல்லவா? ஆனால் இமாம் அவர்கள் நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள் நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த சுன்னாவை ஒருநாளும் மறைக்கவே மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார்கள்.
இறுதியில் ஆட்சியில் இருந்தவர்கள் சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரையும் ஏவி விட்டு இமாம் அவர்களை ஒரு கழுதை மேல் ஏற்றி அமர வைத்து சாட்டையாலும், கற்களாலும் அடித்து ஊர்வலமாக ஓட ஓட விரட்டுகிறார்கள். அந்த நேரத்திலும் இமாம் அவர்கள் கலங்கவில்லை, கதறவில்லை அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த, உதித்த வார்த்தைகள் இதோ:“என்னை யார் முன்னதாக அறிந்திருக்கின்றீர் களோ என்னை நீங்கள் அறிந்திருக்கீன்றீர்கள். என்னைப் பற்றிய அறிமுகம் எவருக்கு இல்லையோ அறிந்து கொள்ளுங்கள்; அஸ்பஹீ இனத்தைச் சேர்ந்த அபூஆமிரின் பேரனான அனஸின் மகன் மாலிக் நான் தான். நான் சொல்கிறேன் நிர்ப்பந்திக்கப்பட்டு வாங்கும் தலாக் செல்லாது” என்று இரத்தம் சொட்ட சொட்ட தொடர்ந்துசொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள். இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் மக்களுக்கு சுன்னா சென்றடைய வேண்டும் என்பதற்காக தொகுத்த நூல் தான் “முஅத்தா மாலிக்” என்ற பிரபலமான நூலாகும்.

அவர்கள் ஹிஜ்ரீ 179-ல் வஃபாத்தாகிறார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய மாணவர் இமாம்ஷாஃபீ(ரஹ்) அவர்கள் வருகிறார்கள்.

இமாம் ஷாஃபியீ(ரஹ்)
இவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடமும் வகீம் பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்களிடமும் கல்வியை கற்கிறார்கள். இது தவிர பல அறிஞர்களைச் சந்திக்கச் சென்று தமது கல்வி அறிவை வளர்த்துக் கொண்டு அவர்களும் ஒரு ஹதீஸ் நூலைத் தொகுக்கின்றார்கள்.
அதுதான் இன்று முஸ்னத் ஷாஃபியீ என்று அறியப்படும் நூலாகும். மேலும் “அர்ரிஸாலா” என்ற ஓர் அற்புதமான ஹதீஸ்கலை நூலையும் தொகுக்கின்றார்கள். அது மட்டுமல்ல ஹதீஸ் தொகுப்பிலேயே ஹதீஸ் கலையை உருவாக்கியவர்களே இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் தான்.
இரண்டு ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தோன்றினால்அதை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு ஹதீஸ் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது என்றிருக்கும் பிரிதொரு ஹதீஸ் நபி(ஸல்)அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழித்தார்கள் என்றிருக்கும்.
இஹ்ராம் அணிந்துவிட்டால் திருமணம் தடை என்று ஒரு ஹதீஸிலும் இஹ்ராம் அணிந்து நபிகள்(ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள் என்று மற்றோர் ஹதீஸிலும் இருக்கும். இப்படி முரண்பாடாக வரக்கூடிய ஹதீஸ்களை எப்படி விளங்கிக் கொள்வது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் “இக்திலாஃபில் அஹாதீஸ்” என்ற நூலைத் தொகுக்கிறார்கள். ஆழமான தீர்வை தருகிறது அந்நூல்.
மேலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கப்ரு வழிப்பாட்டினர், சூஃபியாக்களின் கொள்கைகள் அனைத்தையும் தரைமட்டமாக்குவதற்காக கொள்கை ரீதியான பல புத்தகங்களைத் தொகுத்து இந்த சமுதாயம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனையிலிருந்து வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டிருக்கின்றார்கள் இமாம் அவர்கள். இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் பின் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் 204-ல் வஃபாத்தாகிறார்கள்.


இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்):
அதற்குப் பிறகு அப்பணியை சிரமேற்கொண்டு செயல்படவும் மார்க்கத்திற்காக தம்முடைய இன்னுயிரை நீத்திடவும் தயாராகிறார்கள் இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள்.இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் வரலாற்றை படிக்கும் போது கல்விப்பணியில் இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ(ரஹ்) இவர்களையெல்லாம் விஞ்சி நிற்பதை அறிய முடிகின்றது. தம்முடைய தந்தையிடமிருந்தும் தம்முடைய சகோதரரிடமிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்ட இமாம் அவர்கள்
சுமார் 30,000 ஹதீஸ்களைக் கொண்ட முஸ்னத் அஹ்மத் என்ற மிகப்பெரிய ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுக்கின்றார்கள். இந்த ஹதீஸ்களை மக்களுக்கு போதிக்கும்போதெல்லாம் என்னுடைய சொந்த கருத்தை எழுதாதீர்கள் என மக்களை எழுதவிடாமல் தடுத்து விடுவார்கள்.
இதனாலேயே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் சொந்தக் கருத்துக்களடங்கிய நூல் எதுவுமே இருக்காது. எல்லாம் ஹதீஸ் நூற்களாகத்தான் இருக்கும். தமது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹதீஸ்கள் மட்டுமே தொகுக்கப்படவேண்டும் என்று விரும்பிய இமாம் அவர்கள் அப்துல்லாஹ் என்ற தமது மகனாரிடம் “அப்துல்லாஹ்வே! இந்தப் புத்தகத்தை நீ மிக மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி நூலாக அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். காரணம், இதில் நான் தொகுத்தளித்துள்ள 30,000 ஹதீஸ்களும் 7,00,000 ஹதீஸ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்” என்று கூறுகிறார்கள்.

இமாம் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்த 30,000 ஹதீஸ்களைத்தான் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலாக நாம் பார்க்கிறோம். அஹ்மத் என்று வருவதெல்லாம் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் தொகுப்பு நூலான முஸ்னத் அஹ்மத் என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ்கள்தாம்.

இமாம் அவர்கள் இந்த குர்ஆன், சுன்னாவை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட சிரத்தை எண்ணிலடங்காதது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஃபித்னா தோன்றுவதுபோல் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் காலகட்டத்திலும் மிகப்பெரிய பித்அத்(ஃபித்னா) தோன்றுகிறது. மஃமூன் என்பவரின் ஆட்சிக்காலத்தில் “குர்ஆன் படைக்கப்பட்ட பொருள்” எனும் கூற்று பெரும் குழப்பமாக திகழ்ந்தது. குர்ஆன் படைக்கப்பட்ட பொருள் என்று சொன்னால் படைக்கப்பட்ட பொருட்கள் அழிவதைப் போன்று குர்ஆனும் அழிந்து போய்விடும் எனும் சித்தாந்தத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் அது அழிந்துவிடும் எனில் அல்லாஹ்வும் அழிந்து விடுவான் என்றாகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆகவே இத்தீய கொள்கையை ஒரு போதும் வளரவிடக்கூடாது என்று அக்காலத்தைய இமாம்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள்.இதில் பலரும் துன்புறுத்தப்படுகிறார்கள். மஃமூன் என்ற அரசனின் கடைசி காலத்தில் தான் (ஹிஜ்ரீ 218-ல்) இந்த ஃபித்னா தொடங்குகின்றது அவர் மரணிக்கின்றார். அவர் மரணித்தவுடன் இந்த ஃபித்னா இல்லாமல் ஆகிவிடும் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) எண்ணுகின்றார்கள்.

ஆனால் அதற்குப்பிறகு முஃதஸிம் என்பவர் ஆட்சிக்கு வருகிறார். இவரும் அந்தத் தீயக்கொள்கையில் உறுதியாக இருக்கின்றார். இக்கொள்கையை எதிர்க்கின்றவர்களை சிறையிடைக்கக் கட்டளையிடுகின்றார். அப்பொழுது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களும் அவர்களுடன் முஹம்மத் பின் நூஹ் என்பவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பக்தாதுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாக முஹம்மத் பின் நூஹ் அவர்கள் வழியிலேயே வஃபாத்தாகி விடுகிறார்கள். எஞ் சியிருப்பது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் மட்டும்தான்.
ஒரு சிலர் ஆட்சியாளருக்கு பயந்து கொண்டு இக்கொள்கையை விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் ஃபித்னாவை ஒழிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இமாம் அவர்கள் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. இமாம் அவர்கள் 30 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தப் பிறகு அரசன் முஃதஸிம் இமாம் அவர்களை சிறையிலிருந்து விடுவித்து என்ன நினைக்கின்றீர்கள்? கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்று விசாரிக்கின்றார்.

அதற்கு இமாம் அவர்கள் “எந்த மாற்றமும் இல்லை” என துணிந்து கூறுகின்றார்கள். அப்படியா னால் அங்குள்ள 2 கம்புகளில் ஏதேனும் ஒன்றில் கைவையுங்கள்! என்று கூறுகிறான். இமாம் அவர்களுக்குக் காரணம் புரியவில்லை ஒரு கம்பில் இமாம் கைவைத்து விடுகின்றார்கள். அதற்குப்பிறகு அந்தப் பகுதியிலுள்ள கோரமுகம் கொண்ட சில சாட்டை வீரர்கள் வருகின்றார்கள். இரக்கம் என்பதையே அல்லாஹ் அவர்களின் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டானோ என்னவோ இமாம் அவர்களை அடிக்க ஆரம்பிக்கின்றனர் ஒரு அடியிலேயே இமாம் அவர்கள் மயக்க முறுகிறார்கள் கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிகிறது. அடுத்து ஒரு அடி இப்படியே 30-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் சில நூல்களில் 80-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி உடம்பில் ஒரு இடம்கூட அடிவிழாமல் மிஞ்சவில்லை எனும் அளவிற்கு அடிக்கப் படுகிறது. இறுதியில் இமாம் அவர்களின் உடலுக்கு மருந்திடுவதற்காக மருத்துவர் வந்து அவர்களுடைய உடம்பில் சில சதைத்துண்டுகளை துண்டித்து எடுக்கின்றார். காரணம் அந்த சதைத்துண்டு களெல்லாம் செத்துப்போயிருந்தன, அதற்கு உயிர் இல்லை. அடித்துக் கொண்டிருக்கும் போதே சில சதைத்துண்டுகள் தொங்கிக் கொண்டும் இருந்திருக்கின்றது.

பிறகு அதையெல்லாம் துண்டித்து எடுத்து விட்டுதான் மருத்துவம் செய்யப்படுகின்றது. பிறகு இமாம் அவர்களால் தொழக்கூட முடியாத நிலை இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம். இதுவே இமாம் அவர்களின் மரணப்படுக்கையாகி விடுகின்றது. இப்படி சத்தியத்திற்காக இமாம்கள் பட்ட கஷ்டங் களையும் யாருக்காகவும், எதற்காகவும் மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்ளாத நிலையையும் அவர்களின் வரலாற்றில் பார்க்கின்றோம். இமாம் அவர் கள் ஹிஜ்ரீ 241 வஃபாத்தாகிறார்கள்.
அவர்களுக்குப் பிறகு யஹ்யா இப்னுமுயீன் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 233) அலீ இப்னு மதீனீ (ஹிஜ்ரீ 234) என ஹிஜ்ரீ 200களில் இந்த மிகப்பெரிய அறிஞர்கள் இஸ்லாத்திற்காக தங்களுடைய தியாகத் தை பதிந்திருகின்றார்கள்.

இமாம் புகாரீ (ரஹ்):
அடுத்து இமாம்களுடைய மாணவர்களின் காலம் வருகின்றது அவர்கள்தான் குர்ஆன், சுன்னாவை நிலை நாட்டுவதற்கான அடுத்த தியாகிகள் கூட்டம். புகாரீ என்ற ஹதீஸ் நூலை நாம் பார்க்கின்றோம். அதை தொகுத்த இமாம் புகாரீ அவர்கள் மேற்கண்ட தியாகிகளின் மாணவராக இமாம்களுக்கு அடுத்த கால கட்டத்தில் வருகின்றார்கள்.
  1. இமாம் இமாம் புகாரீ (ரஹ்) ஹிஜ்ரீ : 256
  2. இமாம் முஸ்லிம் (ரஹ்) ஹிஜ்ரீ: 261
  3. இமாம் அபூதாவூத் (ரஹ்) ஹிஜ்ரீ : 275
  4. இமாம் திர்மிதீ (ரஹ்) ஹிஜ்ரீ : 279
  5. இமாம் நஸாயீ (ரஹ்) ஹிஜ்ரீ : 303
இவர்கள் அனைவரும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் மாணவர்களாவர். மத்ஹபு இமாம்களின் மாணவர்கள் தான் இவர்கள். இந்த இமாம்கள் அனைவருமே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்ற அறிஞர்களிடமிருந்தும் ஹதீஸ்களைத் தேடிப் பெற்று மிகப்பெரும் தொகுப்பு நூல்களை நமக்குத் தந்து குர்ஆன், சுன்னாவை நிலை நாட்ட பாடுபட்டிருகின்றார்கள்.
இவர்களோடு தியாகங்கள் முடிந்து விட்டதா? என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மாணவர்கள் வருகின்றார்கள்.
  • இமாம் இப்னு ஹ§ஸைமா(ரஹ்) அவர்கள் – (ஹிஜ்ரீ 311)
  • இமாம் தாரகுத்னீ- (ஹிஜ்ரீ 385)
  • இமாம் கத்தீப் – (ஹிஜ்ரீ 463)
  • இமாம் அப்துல் கனி அல்மக்திஸீ அவர்கள்- (ஹிஜ்ரீ 600)
இப்படியாக 6-வது நூற்றாண்டு வரைக்கும் அந்தத் தொடர் நீண்டு கொண்டேபோகிறது.
மேற்கண்ட எத்தனையோ அறிஞர்கள் இவர்களது இந்தப் பெயர்களெல்லாம் நம் காதுகளில் விழுந்திருக்கின்றதா? ஏதோ நாம் தான் முதன் முதலில் இந்த உலகத்திற்கு குர்ஆன், சுன்னாவை அறிமுகப்படுத்துகிறோம் என்பது போன்ற மாயை இங்கு உருவாக்கப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் குர்ஆன், சுன்னாவை மேலோங்கச் செய்யும் பணி சங்கிலித் தொடராக வந்து கொண்டேயிருக் கின்றது என்பதுதான் உண்மை.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)
இந்தத் தொடரின் முத்தாய்ப்பாய் 7-ம் நூற்றாண்டில் வருகை தருகின்றார்கள், ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)அவர்கள்.
ஸைகுல் இஸ்லாம் எனப் போற்றப்படும் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் (ஹிஜ்ரீ728) கால கட்டம் மார்க்கத்தின் பெயரால் அனைத்துக் குப்பைகளும் நிறைந்திருந்த காலமாகும் இஸ்லாம் என்ற பெயரில் ஷிர்க், பித்அத், குஃப்ர், முஃதஸிலா, கத்ரிய்யா,சூஃபியாக்கள் என்றெல்லாம் எத்தனை கொள்கைக் குழப்பங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் நிறைந்திருந்த காலம் அது.
அத்தனை அனாச்சாரங்களும் நிறைந்திருந்த காலகட்டத்தில் பிறந்த இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் அத்தனைக் கொள்கைக் குழப்பங்களுக்கும் எதிராக போராடினார்கள். தார்த்தாரியர்களின் ஆட்சியில் மாட்டிக்கொண்ட இமாம் அவர்கள் ஒரு பக்கம் கல்விப்பணி, ஒருபக்கம் ஃபத்வா, ஒரு பக்கம் ஜிஹாத் என பல வகைகளில் மார்க்கத்திற்காக பெரும் சேவை செய்திருப்பதை அறிய முடிகிறது. அவர்கள் சுமார் 6 போர்க்களங்களில் வாளெடுத்துப் போரிட்டிருக்கின்றார்கள் என்பதையும் வரலாற்று நூலில் பார்க்க முடிகிறது.
இப்படி பல வழிகளில் மார்க்கத்தை நிலை நாட்ட பாடுபட்ட இமாம் அவர்கள் இறுதியில் அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சிறையிலேயே -ஹிஜ்ரீ- 728-ல் மரணமடைகிறார்கள் இப்படி பல தியாகங்களுக்கு மத்தியிலும் இமாம் அவர்கள் பல நூல்களைத் தொகுத்திருக்கின்றார்கள். அதில் 30 பாகங்களைக் கொண்ட “மஜ்மூஅத்துல் ஃபதாவா” என்ற மிகப் பெரிய ஃபத்வா நூலும் ஒன்று. இன்று உலகம் முழுக்க பரவலாக காணக்கிடைக்கின்ற அதை ஒருவர் படித்து விட்டாரெனில் தவறான அனைத்து கொள்கைகளையும் எதிர்த்து போராடும் அளவிற்கு ஆதாரங்களை தொகுத்து வைத்திருக்கின்றார்கள்.
அந்த ஆட்சி நஜ்தில் இருந்து ரியாத், கஸீம், அல் ஹஸ்ஸா ஆகிய பகுதிகளுக்கு விரிவடைந்ததோடு இமாம் அவர்களின் பிராச்சாரமும் விரிவடைந்து மக்கா, மதீனா என ஹிஜாஸ் மாகாணத்திற்கு வருகி ன்றது. அன்றைய மக்கா, மதீனாவின் பள்ளிகளில் புர்தா, ஷிர்க்கான கவிதைகள் என அனாச்சாரங்கள் மலிந்திருந்தது.மார்க்கத்திற்கு முரணான அத்தனை அனாச்சாரங்களையும் ஒழித்ததில் இமாம் அவர்க ளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாதுகாப்பதற்கு அளித்துள்ள உத்தரவாதம் என்பது எங்கெல்லாம் அல்லாஹ் வகுத்தளித்த கொள்கைக்கு மாற்றமான, எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவோ அங்கெல்லாம் அதற்கு எதிராக மார்க்கத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி மார்க்கத்தின் உண்மை நிலையை காப்பதுதான் அல்லாஹ் எடுத்துக் கொண்டுள்ள உத்தரவாதத்திற்கு அடையாளமாகும்.
இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களுக்குப் பிறகு இப்னு கய்யூம், தஹபீ, இப்னு கஸீர் என்ற தஃப்ஸீரைத்தொகுத்த இப்னு கஸீர்(ரஹ்)- (ஹிஜ்ரி 774) இமாம் ஷன்ஆனீ, இமாம் ஷவ்கானீ (ஹிஜ்ரி 1250) இவர்களெல்லாம் வருகின்றார்கள்.

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரலி):
இவர்களுக்குப் பிறகு (ஹிஜ்ரீ -1206-ல்) முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் வருகின் றார்கள். இவர்கள் தான் வஹ்ஹாபி என்று அறியப்படுகின்றார்கள்.
நஜ்தில் தோன்றிய இமாம் அவர்கள் ஸவூதி மன்னரோடு தொடர்பு கொண்டு மன்னர் ஸவூத் அவர்களின் உதவியுடன் கொள்கை சீர்திருத்தப்பணிகளை செய்தார்கள்.

இமாம் அவர்கள் மாணவர்களின் சிறு குழுவை உருவாக்கி, அங்குள்ள பள்ளியிலேயே பாடம் படித்துக் கொடுக்கின்றார்கள். பக்குவம் பெற்ற மாணவப்பட்டாளம் ஒன்று உருவானதும் முதல் வேலையாக அந்த நகரத்தில் எங்கெல்லாம் கப்ருகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றனவோ அத்தனை கப்ருகளும் உடைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் லட்சியமாக இருந்தது. ஒரு பக்கம் மன்னரின் ஆதரவு, இன்னொரு பக்கம் மார்க்கம் போதிக்கப்பட்ட மாணவர்களின் குழு இந்த பலத்தைக் கொண்டும் அங்கு கப்ரு வழிபாடு, ஷிர்க், சூஃபியிஸம் அனைத்தும் அல்லாஹ்வின் உதவியால் அழித்தொழிக்கப்பட்டன.

அந்த ஆட்சி நஜ்தில் இருந்து ரியாத், கஸீம், அல் ஹஸ்ஸா ஆகிய பகுதிகளுக்கு விரிவடைந்ததோடு இமாம் அவர்களின் பிராச்சாரமும் விரிவடைந்து மக்கா, மதீனா என ஹிஜாஸ் மாகாணத்திற்கு வருகின்றது. அன்றைய மக்கா, மதீனாவின் பள்ளிகளில் புர்தா, ஷிர்க்கான கவிதைகள் என அனாச்சாரங்கள் மலிந்திருந்தது.மார்க்கத்திற்கு முரணான அத்தனை அனாச்சாரங்களையும் ஒழித்ததில் இமாம் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாதுகாப்பதற்கு அளித்துள்ள உத்தரவாதம் என்பது எங்கெல்லாம் அல்லாஹ் வகுத்தளித்த கொள்கைக்கு மாற்றமான, எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவோ அங்கெல்லாம் அதற்கு எதிராக மார்க்கத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி மார்க்கத்தின் உண்மை நிலையை காப்பதுதான் அல்லாஹ் எடுத்துக் கொண்டுள்ள உத்தரவாதத்திற்கு அடையாளமாகும்.பெயரளவில் முஸ்லிம்கள் என்கின்ற பெரும் கூட்டத்தை அல்லாஹ் விரும்புவதில்லை மாறாக சிறிய கூட்டமாக இருந்தாலும் கொள்கைப்பிடிப்புள் ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.

ஹிஜ்ரி -12-ம் நூற்றாண்டு வரையில் குர்ஆன், சுன்னாவை நிலைநாட்ட பாடுபட்ட தியாகம் செய்த சிலரை பார்த்திருக்கின்றோம்.

அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி
ஹிஜ்ரீ 1353-ல் ஒரு மிகப்பெரிய அறிஞர் வருகின்றார். ஆம்! அவர்தான் அப்துர் ரஹ்மான் முபாரக்பூரி. இந்தியாவில் பிறந்த அவர்கள் மார்க்கத்தை கற்றுக்கொண்டு இந்த குர்ஆன், சுன்னாவிற்காக செய்த தியாகம் மகத்தானதாகும். திர்மிதீ என்கிற நூலை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நூலிற்கு இமாம் அவர்கள் ஸுஹ்பதுல் அஹ்வதீ என்கிற ஓர் அருமையான விளக்கவுரை நூலை எழுதுகின்றார்கள்.
இந்தியாவில் பிறந்த ஷைக் அவர்கள் எழுதிய இந்த நூல் தான் உலகம் முழுக்க இன்றைக்கு திர்மிதீயின் விரிவுரையாக கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முபாரக்பூரி என்பது இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்பூரி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அர்ரஹீக்குல் மக்தூம் என்கிற மிக பிரபலமான (நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) நூலைத் தொகுத்தவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.

ஷம்ஸுல் ஹக்
ஷம்ஸுல் ஹக் ஹிஜ்ரீ 1329-ல் (மரணம்) வருகின்றார்கள்.அவர்கள் அபூதாவூத் என்கிற ஹதீஸ் நூலிற்கு அரபியிலேயே ஹவ்ழுல் மஹ்பூஸ் என்கிற ஓர் அழகான விரிவுரையை எழுதுகின்றார்கள். இந்தியாவில் பிறந்த இமாம் அவர்கள் இந்த மார்க்கத்திற்காக செய்த தியாகத்தின் சின்னமாக அந்த விரிவுரை நூல் இருக்கிறது.

இதுதவிர பல நூல்களை இமாம் அவர்கள் எழுதுகின்றார்கள். (எந்தளவிற்கென்றால்) இருக்கக்கூடிய ஷிர்க், பித்அத் செய்பவர்களெல்லாம் கொதித்தெழுகின்றார்கள். குர்ஆன், சுன்னாவின் பிரச்சாரம் வீரியமடைந்து வருகின்றதே கப்ரு வழிபாடு கூடாது, புர்தா கூடாது இப்படி அனாச்சாரங்களை எல்லாம் எதிர்க்கின்றார்களே என ஆர்ப்பரிக்கின்றார்கள்.
அதன் வெளிப்பாடாய் கி.பி 1926-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25,26-ம் தேதியன்று லக்னோவில் மிகப்பெரிய மாநாட்டை கூட்டுகிறார்கள். அந்த மாநாட்டின் பெயர் முஸ்லிம் ஹிஜாஜ். ஹிஜாஜ் மாகாணத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தோன்றி ஏகத்துவப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார். அந்தப் பாதிப்பு இங்கேயும் தவ்ஹீத் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற அந்த அணிக்குப் பெயர் அஞ்சுமனே ஹிஸ்புல் அஹ்னாஃப்.ஹனஃபி மக்களின் கூட்டம் என்கிற ஒரு மாநாடு நடைபெற்றது அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த தீர்மானங்களில்………!
மன்னர் அப்துல் அஜீஸிடமிருந்து மக்காவை விடுவிக்க வேண்டும். அவர்தான் இந்த மக்காவை கையில் வைத்துக்கொண்டு இங்குள்ள ஷிர்க், பித்அத்களிலெல்லாம் வஹ்ஹாபியக் கொள்கையைத் திணித்து இந்த நிலையை உருவாக்கியது. எனவே அவரை அந்த ஆட்சியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இந்த அப்துல் அஜீஸ் ஷிர்க், பித்அத்தெல்லாம் கூடாது என்று சொல்லக்கூடிய வஹ்ஹாபிக் கொள்கையில் இருப்பவர். எனவே இவர் ஆட்சியில் இருக்கும் வரை எவரையும் ஹஜ்ஜுக்குப் போக விடக்கூடாது. அங்கு சென்றால் ஷிர்க், பித்அத், கப்ரு என எதுவும் இல்லை என தெரிந்துக்கொள்வார்களோ என்கிற அச்சத்தில் ஹஜ்ஜுக்குப் போக விடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றார்கள்.
அடுத்து இந்தக் கோரிக்கையை நிறை வேற்றுவதற்காக ஷிர்க், பித்அத்திற்கு ஆதரவாக அன்றிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற “ஷியாயிஸ” கொள்கையைச் சார்ந்த ஈரான் அரசாங்கத்தின் உதவியை நாடவேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றுகின்றார்கள்.
அந்த மாநாட்டிற்குப் பிறகு 1926-ன் கடைசியில் இன்னொரு மாநாடு அதே லக்னோவில் நடக்கின்றது. அதில் எடுககப்பட்ட முக்கிய தீர்மானங்கள்……!
இந்த அப்துல் அஜீஸ் ஆட்சியில் இருப்பதனால்தான் குர்ஆன், சுன்னா போன்ற செய்திகளெல்லாம் பரவுகின்றது. எனவே இந்த ஆட்சியை மாற்றவேண்டும். அதாவது ஹிஜாஸிற்கு ஆட்சிமாற்றம் தேவை. நீங்கள் தான் அதை செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீங்கள் எங்கள் பகுதியை காப்பாற்றிக் கொடுங்கள். மக்கா, மதீனாவை காப்பாற்றிக் கொடுங்கள் என பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது யார்? இன்று இங்கு இந்திய முஸ்லிம்களில் யாரெல்லாம் பரேலவி கொள்கையிலும், ஷியாக் கொள்கையிலும் கப்ர் வழிபாட்டிலும் இருக்கின்றார்களோ அவர்கள்தான் குர்ஆன், சுன்னாவை அழித்தொழிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் உதவிகேட்டு லக்னோவில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியவர்கள் என்பதை அறிகிறோம்.

குர்ஆன், சுன்னா மாநாடுகள்
இப்படியே இவர்கள் நடத்திக் கொண்டு போகட்டும் என விட்டால் சரிபடாது இனியும் பொறுக்க முடியாது என நினைத்த குர்ஆன், சுன்னாவை பேணக்கூடிய மக்கள் 1926-ல் 11-வது மாதத்தில் டெல்லியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்துகின்றார்கள்.

அடுத்து அஞ்சுமனே முஹம்மது என்கிற இயக்கம் 1345-ல் குஜராத்தில் மாநாடு நடத்துகின்றது. அடுத்து அஞ்சுமனே அஹ்ல ஹதீஸ் என்கிற இயக்கம் பீகாரில் மாநாடு நடத்துகின்றது.

பேர்ணாம்பட்டில் விழிப்புணர்வுக் கூட்டம்
இந்த காலகட்டத்தில் ஒரு முக்கிய செய்தியையும் நாம் காண முடிகிறது. அஞ்சுமனே இத்திபாவுஸ் ஸலஃப் என்று சொல்லக்கூடிய ஸலஃபுகளைப் பின்பற்றக்கூடிய ஒரு இயக்கத்தின் சார்பில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய பேர்ணாம்பட்டில் அதே காலகட்டத்தில் அதாவது 1345-வாக்கில் ஒரு மாநாடு நடத்தப்படுகின்றது.



தமிழகத்தில் கால் ஊன்றிய குர்ஆன், சுன்னா
சனாவுல்லாஹ் அம்ரஸ் பூரி
1906-ல் ஸைகுல் இஸ்லாம் ஸனாவுல்லாஹ் அம்ரஸ்பூரி அவர்கள் அம்ரஸ்தர் என்கிற ஊரில் பிறந்த மிகப்பெரிய இமாமான அவர்கள் மிர்ஸாகுலாம் காதியானி காலத்தில் வாழ்ந்தவராவார்கள்.அவர்கள் தான் காதியானியிஸத்திற்கே சாவு மணி அடித்தார்கள். இவர்களுடைய தலைமையில் குர்ஆன், சுன்னா கொள்கையைக் கொண்ட அஹ்லே ஹதீஸ் கூட்டமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஏற்படுத்தப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் ஷைக் அவர்கள் டெல்லியில் “தாருல் ஹதீஸ் அர்-ரஹ்மானிய்யா”என்கிற மதரஸாவை துவங்குகின்றார்கள். இந்த மதரஸாவில் புடம் போட்டு எடுக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் இன்றைக்கு தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸை போதித்துக் கொண்டிருக்கக்கூடிய உமராபாத் மதரஸாவில் ஷைகுல் ஹதீஸாக இருக்கக்கூடிய ஜஹீருத்தீன் அவர்கள்.

அவர்களுடைய கடும் உழைப்புதான் இந்தியா முழுக்க குர்ஆன், சுன்னா ஆணித்தரமாக மக்கள் மத்தியில் தழைத்தோங்குவதற்கு காரணமாக அமைந்திருந்தது.இதுபோன்ற கொள்கை பிடிப்புள்ள அறிஞர் பெருமக்கள் உருவாகக் காரணமே ஷைக் அவர்கள் நிறுவிய “தாருல் ஹதீஸ் அர்-ரஹ்மானிய்யா” என்ற மதரஸாதான்.இமாம் ஸனாவுல்லாஹ் அவர்களின் பணி அத்தோடு முடிந்துவிடவுமில்லை. 1321-ஹிஜ்ரியில் அஹ்ல ஹதீஸ் என்கிற பத்திரிக்கையை துவங்கி அதில் தவறான அனைத்துக் கொள்கையினருக்கும் பதில் தருவது, விளக்கம் சொல்வது போன்ற மாபெரும் பணியை இமாம் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

சித்தீக் ஹஸன் கான்
இன்னொரு முக்கியமான ஒரு அழைப்பாளர் சித்தீக் ஹஸன் கான். போபாலில் மன்னராக இருந்த இவர்கள் அந்தப் பதவியைப் பயன்படுத்தியே மார்க்கத்தைப் போதித்துக் கொண்டிருந்தார்கள். குர்ஆன், சுன்னாவைப் படிப்பது மட்டுமல்லாமல் மிகப்பெரியதொரு ஃபத்ஹுல் பயான் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன் என்ற தஃப்ஸீரை(குர்ஆன் விரிவுரையை)அரபியிலேயே 8 பாகங்களாக எழுதியிருக்கின்றார்.
சுமார் 222 புத்தகங்களை எழுதிய இவர் அதில் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அரபியிலேயே எழுதியிருக்கிறார். அரும்பெரும் தஃப்ஸீரை உருவாக்கிய மிகப்பெரிய பெருமை சித்தீக் ஹஸன் கான் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

முந்தைய அறிஞர்களின் அரும்பணியை மறந்து விடக்கூடாது
இத்தனைக்கும் பிறகு தான் தமிழகத்தில் குர்ஆன் சுன்னாவைப் பெற முடிகின்றது. இந்த மிகப்பெரும் தியாகிகள் ஒன்றிணைந்துதான் இன்று தமிழகத்தில் தவ்ஹீது உதயமாகியிருக்கின்றது.
இதையெல்லாம் நினைவு படுத்துவதன் நோக்கம் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சேவை செய்வதற்காக எல்லாக் காலங்களிலும் எல்லாப் பகுதியிலும் ஒரு கூட்டத்தை எழுப்பியிருக்கின்றான். அந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு அல்லாஹ் வேலை வாங்குகின்றான். அது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

இன்றைக்கு யாரெல்லாம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கின்றார்களோ அவர்களும் அந்தப்பட்டியலில் வந்தவர்களே தவிர இவர்கள் புதிதாகத் தோன்றியவர்கள் அல்ல என்பதைப் புரிந்துக் கொள்வதுடன் எல்லா இமாம்களும் அவரவர்களுடைய காலக்கட்டத்தில் கடுமையாக தியாகங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள், இந்த மார்க்கத்திற்காக உழைத்திருக்கின்றார்கள்.அதிலும் குறிப்பாக அந்த இமாம்கள் ஒருவரையருவர் மதித்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் துஆ செய்திருக்கின்றார்கள்.
எவர்களுடைய பெயர்களெல்லாம் சொல்லப்பட்டதோ அனைவருக்கும் அனைத்து விஷயங்களிலும் மிக சரியாக இருந்தார்கள் என சொல்ல வரவில்லை. சில கருத்து வேறுபாடு இருந்திருக்கும். சில விஷயங்களில் முரண்பட்ட கருத்துக்கள் இருந்திருக்கும் ஆனால் அவர்களின் இலக்கு என்ன என்பதுதான் முக்கியம்.
அவர்களில் ஒவ்வொருவரும் தமக்கு முன் சென்ற அறிஞர்களை மதித்திருக்கின்றார்கள். ஆக நாமும் இதற்கு முன்னால் யாரெல்லாம் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்தார்களோ அவர்களை மதிக்க வேண்டும். இதற்குப் பின்னால் வரக்கூடியவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
அவர்கள் ”எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்”” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். 59:10
தியாகிகளை மதிக்க வேண்டும் என்கிற காரணத்தினால் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூட தாம் ஒரு நபியாக இருந்தும் கூட தனக்கு முன் சென்ற(சிறுசிறு) தியாகிகளைக் கூட சொல்லிக்கொண்டிருந்தார்கள். குகை வாசிகள், நெருப்புக்குன்ற வாசிகளின் சிறுவர்கள் பற்றியெல்லாம் புகழ்ந்து சொல்லியிருக்கின்றார்கள்.
நாமும் அதுபோன்று தியாகிகளின் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்ள பாடுபட வேண்டும். அவர்களில் குர்ஆன், ஹதீஸை போதித்தவர்களின் கருத்தை மதிக்கக்கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்று நாம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனைக்கு வந்திருக்கின்றோம். ஷிர்க் (இணைவைப்பு) பித்அத் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களை இனம் கண்டு அவற்றிலிருந்து விலகி தவ்பா செய்தவர்களாக இருக்கின்றோம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

இந்த மார்க்கத்தின் எதார்த்தமான, உண்மையான நிலையை நாம் தமிழகத்தில் புதிதாகக் கண்ட ஒரு நிலையில் இருக்கின்றோம். இந்த மாதிரியான மார்க்கத்தின் எதார்த்த நிலையை முதன் முதலில் தமிழகம் தான் தந்திருக்கின்றதா? இதை முதன் முதலில் தமிழகத்திலிருந்து தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடியவர்களை அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கிறான்.


அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment