Thursday, 12 January 2012

நபி (ஸல்)இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்பு பணி....


மக்கா வாழ்க்கை

நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தூதர் எனும் கௌரவம் அருளப்பட்டதற்குப் பிறகுள்ள வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். அவை ஒன்றுக்கொன்று தன்மையால் மாறுபடுகிறது.

1. மக்காவில் வாழ்ந்த காலம். இது ஏறத்தாழ 13 ஆண்டுகள்.

2. மதீனாவில் வாழ்ந்த காலம். இது முழுமையாக 10 ஆண்டுகள்.

இவ்விரு வாழ்க்கையும் மாறுபட்ட பல நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பல தனித்தன்மைகள் உண்டு. நபி (ஸல்) அழைப்புப் பணியில் கடந்து வந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும்போது இதனை நாம் அறிகிறோம்.

மக்கா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1) மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.

2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்” வரை தொடர்ந்தது.

3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி: இது பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.

இவற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு மதீனா வாழ்க்கை நிலைகளை பின்னர் காண்போம்.
நபித்துவ நிழலில்
ஹிரா குகையில்

நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.

தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்; உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)

ஜிப்ரீல் வருகை

பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.

அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.

தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.

இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:

“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) “அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான ‘நவ்ஃபல்’ என்பவன் மகன் ‘வரகா“விடம் அழைத்துச் சென்றார்கள்.

வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) “என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!” என்றார். “என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!” என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா “இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி சிறிது காலம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இறைச் செய்தி தாமதம்!

இது குறித்த பல கருத்துகள் நிலவினாலும் அந்த இடைவெளிக் காலம் சில நாட்கள் என்பதே உறுதியான கருத்தாகும். இதையே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இப்னு ஸஅது (ரஹ்) அறிவிக்கிறார்கள். வஹியின் இடைவெளிக்காலம் மூன்று அல்லது இரண்டரை ஆண்டு என்று கூறுவது சரியானதல்ல.

அறிஞர்களின் பல்வேறு கருத்துகளை ஆய்வு செய்ததில் எனக்கு ஒன்று புலப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் மட்டுமே ஹிராவில் தனித்திருந்துவிட்டு ஷவ்வால் முதல் பிறையின் காலையில் வெளியேறி வீட்டுக்கு வருவார்கள். இவ்வாறு நபித்துவத்துக்கு முன் மூன்று ஆண்டுகள் தங்கினார்கள். அந்த மூன்றாவது ஆண்டின் ரமழானில் நபித்துவம் அருளப்பட்டது. புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிராவில் தங்கி ரமழானை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டாவது வஹி அருளப்பட்டது. இதில் என் கருத்து என்னவென்றால், நபித்துவம் கிடைக்கப் பெற்ற ரமழான் முடிந்த பிறகு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையில்தான் இரண்டாவது வஹி இறங்கியது. அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிராவுக்கு செல்லவில்லை. உறுதியான சான்றுகளின்படி ரமழான் பிறை 21 திங்கள் இரவில் முதல் வஹி அருளப்பட்டது. இரண்டாவது வஹி ஷவ்வாலின் முதல் பிறை வியாழன் காலை அருளப்பட்டது. ஆகவே, இக்கருத்தின்படி வஹியின் இடைவெளிக்காலம் 10 நாட்கள் மட்டுமே! இதுவே ரமழானின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல் பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்!)

வஹியின் இடைவெளிக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் திடுக்கமும் கவலையும் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இதுபற்றி ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது:

இரண்டாவது வஹி வருவதற்கு சிறிது காலதாமதமானது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) தோன்றி “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் துணிவார்கள். அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.

மீண்டும் ஜிப்ரீல்

இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான். (ஃபத்ஹுல் பாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)

இந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது. (ஸஹீஹுல் புகாரி)

இவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.

முதலாவது வகை:

“நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்”

என்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும்; ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வசனத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே! நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.

இரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்; அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.

“உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்”

அதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்! அதில் எவரையும் இணையாக்காதீர்கள்.

“உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்”

அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

“அசுத்தங்களை வெறுத்திடுங்கள்”

அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.

“நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்”

அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.

“உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்”

நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.

ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராடவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!

உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.

அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

அவர்களுக்கு நம் சார்பாகவும் மனித குலத்தின் சார்பாகவும் சிறந்த நற்கூலியை அல்லாஹ் நல்குவானாக!

நபி (ஸல்) அவர்களின் நீண்ட தியாக வாழ்க்கையின் சில பகுதியைத்தான் நாம் பின்வரும் பக்கங்களில் காண இருக்கிறோம்.

வஹ்யின் வகைகள்

நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின் வகைகள் பற்றி இப்னுல் கய்” (ரஹ்) ‘ஜாதுல் மஆது’ என்ற தனது நூலில் கூறுவதாவது:

1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.

2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள். உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே தவிர வேறு வகையில் அடைய முடியாது.”

3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.

4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்) அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக் கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.

5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் ‘அந்நஜ்ம்’ என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்” தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!

7) வானவரின்றி நேரடியாக அல்லாஹ் பேசுவது. மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியது போல! மூஸா நபிக்கு இந்த சிறப்பு கிடைத்தது பற்றி குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும் இந்த சிறப்பு கிடைத்தது என மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களின் மூலம் தெளிவாகிறது. (ஜாதுல் மஆது)

முதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்

இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்

“சூரா” முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.

முந்தியவர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உயவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.

இவர்களையடுத்து இச்சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீன்) என்று பெயர் சூட்டப்பட்ட அபூ உபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ், அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத், அவரது மனைவி உம்மு ஸலமா, அர்கம் இப்னு அபுல் அர்கம், உஸ்மான் இப்னு மள்வூன், அவரது இரு சகோதரர்கள் குதாமா, அப்துல்லாஹ், உபைதா இப்னு ஹாரிஸ், ஸயீது இப்னு ஜைது, அவரது மனைவி ஃபாத்திமா பின்த் கத்தாப் (உமர் அவர்களின் சகோதரி) கப்பாப் இப்னு அரத், ஜஃபர் இப்னு அபூதாலிப். அவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ், காலித் இப்னு ஸயீது இப்னு ஆஸ், அவரது மனைவி உமைனா பின்த் கலஃப், அம்ரு இப்னு ஸயீது இப்னு ஆஸ், ஹாதிப் இப்னு ஹாரிஸ், அவரது மனைவி ஃபாத்திமா பின்த் முஜல்லில், கத்தாப் இப்னு அல் ஹாரிஸ், அவரது மனைவி ஃபுகைஹா பின்த் யஸார், மஃமர் இப்னு அல்ஹாரிஸ், முத்தலிப் இப்னு அஜ்ஹர், ரமலா பின்த் அபூ அவ்ஃப், நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி அன்ஹும்) ஆகிய இவர்கள் அனைவரும் குறைஷி கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், மஸ்வூத் இப்னு ரபீஆ, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். அபூ அஹ்மத் இப்னு ஜஹ்ஷ், பிலால் இப்னு ரபாஹ் ஹபஷி, ஸுஹைப் இப்னு ஸினான், அம்மார் இப்னு யாஸிர், யாஸிர், அவரது மனைவி சுமைய்யா, ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.

பெண்களில் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்றும் பலர் இஸ்லாமை ஏற்றனர். அவர்கள்: உம்மு அய்மன் பரகா ஹபஷியா, அப்பாஸின் மனைவி உம்முல் ஃபழ்ல் லுபாபஹ், அஸ்மா பின்த் அபூபக்ர். (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் திருப்தி கொள்வானாக!) (இப்னு ஹிஷாம்)

“அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் - முந்தியவர்கள் முதலாமவர்கள்” என்று குர்ஆனில் அல்லாஹ் இவர்களை போற்றுகின்றான்.

இஸ்லாமை ஆரம்பமாக ஏற்றுக் கொண்ட ஆண், பெண்களின் எண்ணிக்கை 130 ஆகும். எனினும், இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாக அழைப்பு விடுத்த காலத்தில் இஸ்லாமை ஏற்றார்களா? அல்லது அவர்களில் சிலர் அதற்குப்பின் இஸ்லாமை ஏற்றார்களா? என்று உறுதியாக கூறமுடியாது.

தொழுகை

இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் “சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது” என்று கூறுகின்றனர்.

இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது அபூதாலிப் பார்த்து அதுபற்றி விசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார்.

தொழுகை மட்டுமே முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு வணக்க வழிபாடுகளோ, ஏவல் விலக்கலோ இருந்ததாகத் தெரியவில்லை. அக்கால கட்டத்தில் அவர்களுக்கு ஏகத்துவ விளக்கங்களைக் கற்றுக் கொடுத்து, நற்பண்புகளில் ஆர்வமூட்டி, அவர்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தும் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், அவ்வசனங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் அவர்கள் கண்முன் காண்பதுபோல் வர்ணித்தன. எழுச்சிமிகு உபதேசங்களால் இதயங்களைத் திறந்து ஆன்மாவுக்கு வலுவூட்டி அக்கால மக்கள் அதுவரை அறிந்திராத ஒரு புதிய நாகரீக வாழ்வுக்கு இறைமறை அவர்களை அழைத்துச் சென்றது.

இவ்வாறே மூன்று ஆண்டுகள் கடந்தன. நபி (ஸல்) அவர்கள் அழைப்பை பகிரங்கப் படுத்தாமல் தனி நபர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள். குறைஷிகள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை அறிந்திருந்தனர். மக்காவில் இஸ்லாம் குறித்த சர்ச்சை எழுந்து மக்களும் அதுபற்றி பேசத் தொடங்கினர். இதைப் பிடிக்காத சிலர் முஸ்லிம்களை இம்சித்தனர். எனினும், நபி (ஸல்) அவர்கள் அம்மக்களின் மார்க்கத்தையும் சிலைகளையும் விமர்சிக்காததால் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை மக்காவாசிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டாம் கால கட்டம்
பகிரங்க அழைப்பு

சகோதரத்துவம் பேணுதல், உதவி ஒத்தாசை புரிதல் போன்ற நற்பண்புகளுடன் தூதுத்துவத்தைச் சுமந்து அதை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களின் ஒரு கூட்டம் தயாரானபோது இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதலாவதாக,

“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)

என்ற வசனம் அருளப்பட்டது. இத்திருவசனத்தின் முன்தொடல் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூது கிடைத்ததிலிருந்து இஸ்ரவேலர்களுடன் அவர்கள் ஹிஜ்ரா செய்தது வரையிலான நிகழ்வுகளும், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் களுக்குக் கிடைத்த வெற்றியும், ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தாருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் விவரிக்கப்படுகிறது. மேலும், ஃபிர்அவ்னை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தபோது நபி மூஸா (அலை) கடந்து சென்ற அனைத்து நிலைமைகளும் விவரமாகக் கூறப்பட்டன.

இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கட்டளையுடன் மேற்கூறப்பட்ட விவரங்களை கொண்டு வந்ததற்கான காரணம்: மக்களை அழைக்கும்போது அவர்களிடமிருந்து பொய்ப்பித்தல், அத்துமீறல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்; அவற்றைத் தாங்கியே தீரவேண்டும். எனவே, தொடக்கத்திலிருந்தே தங்களது செயல்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் முன்சென்ற நபிமார்கள் மற்றும் சமுதாயத்தவர்களின் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டப்பட்டது.

இம்மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்கள் தங்களது நிலையில் தொடர்ந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழிவான முடிவையும் அல்லாஹ்வின் தண்டனையையும் தெரிந்துகொள்ள வேண்டும்; அழகிய முடிவு தங்களுக்குத்தான் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்தில் நூஹ், இப்றாஹீம், லூத், ஹூது, ஸாலிஹ் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயத்தினர், “அஸ்ஹாபுல் அய்கா’ (தோட்டக்காரர்கள்) என இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்களின் முடிவுகள் கூறப்பட்டுள்ளன.

நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்

இவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் ஹாஷிம் கிளையாரை அழைத்து “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே புகழ்கிறேன். அவனிடமே உதவி தேடுகிறேன். அவன்மீது நம்பிக்கை வைக்கிறேன். அவனிடமே பொறுப்பு ஒப்படைக்கிறேன். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை. அவனுக்கு இணை யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்” எனக் கூறித் தொடர்ந்தார்கள்; “நிச்சயமாக “ராம்த்’ (போருக்கு செல்லும் வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற இடங்களையும், நீர்நிலைகளையும் அறிந்து வருவதற்காக அனுப்பப்படும் தூதர்) பொய்யுரைக்கமாட்டார். எந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லையோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நான் குறிப்பாக உங்களுக்கும், பொதுவாக ஏனைய மக்களுக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள். நீங்கள் விழிப்பது போன்றே எழுப்பப்படுவீர்கள். உங்களது செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படுவீர்கள். நிச்சயமாக அது நிரந்தர சொர்க்கமாக அல்லது நிரந்தர நரகமாக இருக்கும்” என்று உரையாற்றி முடித்தார்கள்.

அப்போது அபூ தாலிப் கூறினார்: “உனக்கு உதவி செய்வது எங்களுக்கு மிகவும் விருப்பமானதே, உனது உபதேசத்தை ஏற்பதும் எங்களுக்குப் பிரியமானதே, உனது பேச்சை மிக உறுதியாக உண்மைப்படுத்துகிறோம். இதோ! உனது பாட்டனாரின் குடும்பத்தார்! நானும் அவர்களில் ஒருவன்தான். எனினும், நீ விரும்புவதை அவர்களைவிட நான் விரைவாக ஏற்றுக் கொள்வேன். எனவே, உனக்கிடப்பட்ட கட்டளையை நீ நிறைவேற்றுவதில் நீ உறுதியாக இரு. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பேன். எனினும், எனது மனம் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை” என்றார்.

அப்போது அபூ லஹப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது (இந்த அழைப்பு) மிக இழிவானது. இவரை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நீங்களே தடுத்துவிடுங்கள்” என்றான். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இருக்கும்வரை அவரைப் பாதுகாப்போம்” என்று கூறிவிட்டார். (அல்காமில்)

ஸஃபா மலை மீது...

அபூதாலிப் தனக்கு பாதுகாப்பளிப்பார் என்று நபி (ஸல்) உறுதியாக அறிந்தபின் இறை மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக ஸஃபா மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று சப்தமிட்டார்கள். (பெரும் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.)

பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.

அவர்களது அழைப்பைச் செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என வினவ சிலர் “முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் மற்றும் பலரும் அங்கு குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.

அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்) “இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மக்கள் “ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை” என்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான வேதனை வருமுன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம், ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று தனது கூட்டத்தினரைத் திடீரெனத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி “யா ஸபாஹா!” என்று அழைத்தவரைப் போன்றாவேன்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்து அல்லாஹ்வின் வேதனை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரின் பெயர்களைத் தனித்தனியாகவும், பொதுவாகவும் குறிப்பிட்டுக் கூறினார்கள்.

“குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

கஅபு இப்னு லுவய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.

முர்ரா இப்னு கஅபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

குஸைய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.

அப்துல் முனாஃபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

அப்து ஷம்ஸ் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஹாஷிம் கிளையாரே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அப்துல் முத்தலிபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.

அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது. அல்லாஹ்வுடைய தூதரின் மாமியான அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது..

அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதை கேட்டு பெற்றுக்கொள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் உங்களது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி முடித்தார்கள்.

இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். “நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து “அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் இறங்கியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதி, ஃபத்ஹுல் பாரி)

இவ்வாறாக ஏகத்துவக் குரல் ஓங்கியது. நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களிடம் நீங்கள் இத்தூதுத்துவத்தை (நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை) ஏற்றால்தான் நம்மிடையே உறவு நீடிக்கும். இதைத்தவிர அரபுகள் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளெல்லாம் அல்லாஹ்வின் எச்சரிக்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று கூறித் தங்களது நிலையை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.

இவ்வாறே அழைப்புப் பணியின் குரல் மக்காவின் நாலாதிசைகளிலும் எதிரொலித்தது.

“ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் (அவர்களுக்கு) விவரித்து அறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 15:94)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) நிராகரிப்பவர்களின் சபைகளில் துணிந்து நின்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கத் தொடங்கினார்கள். முன் சென்ற நபிமார்கள் தங்களது சமுதாயத்தினருக்குக் கூறி வந்த,

நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:59)

என்ற வசனத்தை அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். நிராகரிப்பவர்களின் கண் முன்னே கஅபாவின் முற்றத்தில் பட்டப்பகலில் பகிரங்கமாக அல்லாஹ்வை வணங்கத் தொடங்கினார்கள்.

நபி (ஸல்) ஏகத்துவ அழைப்புக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. ஒருவர் பின் ஒருவராக அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவினார்கள். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சண்டை சச்சரவுகள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சியைக் கண்ட குறைஷிகள் கடுங்கோபத்தில் மூழ்கினர்.

ஹாஜிகளைத் தடுத்தல்

இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் “இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் “நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் “இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.

குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: “இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.”

குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.

குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?

வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.

குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஊதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.

குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?

வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)

குறைஷியர்கள் வலீதிடம் பிரச்சனையற்ற ஒரு நல்ல ஆலோசனையைத் தங்களுக்கு கூறும்படி கேட்க அதற்கு வலீத் “அது குறித்து சிந்திக்க எனக்கு அவகாசமளியுங்கள்” என்று கூறி மிக நீண்ட நேரம் யோசித்தபின் மேற்கண்ட தனது கருத்தைக் கூறினான் என சில அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலீதின் இச்செயல் குறித்து அல்முத்தஸ்ஸிர் என்ற அத்தியாயத்தில் 11 முதல் 26 வரையிலான 16 வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்து அவ்வசனங்களுக்கிடையில் அவன் யோசித்த விதங்களைப் பற்றி அல்லாஹ் மிக அழகாகக் குறிப்பிடுகிறான்.

நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! (ஒன்றுமில்லை.) பின்னும் (அதனைப் பற்றிக்) கவனித்தான். பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். ஆகவே “இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை” என்றும், “இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை” என்றும் கூறினான். (அல்குர்ஆன் 74:18-25)

இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள். மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.

ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.

இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.

 
அழைப்புப் பணியில் இடையூறுகள்

ஹஜ் காலம் முடிந்தது. இறையழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவறுத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

1) பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்:

இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர். அற்பமான வசைச்சொற்களால் நபி (ஸல்) அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர்.

(நமது நபியாகிய உங்களை நோக்கி) “வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினர்.

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 38:4)

வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது வீசினர்.

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)

நபி (ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.

(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் “எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனல்லவா? (அல்குர்ஆன் 6:53)

அதற்கு அல்லாஹ் அந்த வசனத்தின் இறுதியிலேயே பதிலளித்தான். மேலும், இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து எவ்வாறெல்லாம் பரிகசித்தார்கள் என்பதையும் விவரிக்கிறான்.

நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தாரிடம் சென்று விட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) “நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்” என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (அல்குர்ஆன் 83:29-33)

இவ்வாறு ஒவ்வொரு நாளும் கேலி, கிண்டல், குத்திப்பேசுதல் போன்ற இடையூறுகளை அதிகரித்துக் கொண்டே சென்றனர். இது நபி (ஸல்) அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை, உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)

பிறகு அவர்களது மன நெருக்கடியை அகற்றும் வழியைக் கூறி அவர்களை உறுதிப்படுத்துகிறான்.

நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து, அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள். உமக்கு “யக்கீன்’ (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள். (அல்குர்ஆன் 16:97)

மேலும் பரிகசிப்பவர்களின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதாக அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 16:95, 96)

அதுமட்டுமின்றி அவர்களது தீய செயல்கள் அவர்களுக்கு எதிராகவே முடியும் என்பதையும் அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்தான்.

(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. (அல்குர்ஆன் 6:10)

2) சந்தேகங்களை கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும்

ஏகத்துவ அழைப்பை மக்கள் செவியேற்று சிந்திக்க முடியாத வகையில் பல வகையான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்ஆனைப் பற்றி இவ்வாறு கூறினர்:

இவை சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட வாக்கியங்கள்; நபி (ஸல்) அவர்கள் தாமே இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு கவிஞர்தான்; தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை; இரவில் பொய்யான கனவுகளைக் கண்டு பகலில் அதை வசனமாக ஓதிக் காட்டுகிறார்; நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அதைப் புனைந்து கொள்கிறார்; குர்ஆனை இவருக்கு கற்றுத் தருவது ஒரு மனிதர்தான்; குர்ஆனாகிய இது பொய்யாக அவர் கற்பனை செய்துகொண்டதே தவிர வேறில்லை இதைக் கற்பனை செய்வதில் வேறு மக்களும் அவருக்கு உதவி புரிகின்றனர்; இது முன்னோர்களின் கட்டுக்கதையே; காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது அதனை இவர் மற்றொருவரின் உதவியைக் கொண்டு எழுதி வைக்கும்படி செய்கின்றார் இவ்வாறெல்லாம் அந்த நிராகரிப்பவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்சாரம் செய்து வந்தனர். (பார்க்க அல்குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4, 5)

சில வேளைகளில் குறி சொல்பவர்களுக்கு ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்வது போல நபி (ஸல்) அவர்கள் மீதும் ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்கின்றன என்றனர். இதை மறுத்தே பின்வரும் வசனம் அருளப்பட்டது.

(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! (அல்குர்ஆன் 26:221-223)

அதாவது மக்களே! பாவத்தில் உழலும் பொய்யான பாவியின் மீதுதான் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள். நான் பொய்யுரைத்தோ பாவம் செய்தோ நீங்கள் கண்டதில்லை. அப்படியிருக்க இந்தக் குர்ஆனை ஷைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “இவருக்கு ஒருவகையான பைத்தியம் பிடித்துள்ளது. நல்ல கருத்துகளை இவரே சிந்தித்து அதை அழகிய மொழிநடையில் கவிஞர்களைப் போன்று கூறுகிறார். எனவே இவர் கவிஞர்; இவரது வார்த்தைகள் கவிகளே” என்றனர். அல்லாஹ் இவர்களுக்கு மறுப்பு தெரிவித்து, கவிஞர்களிடமுள்ள மூன்று தன்மைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றுகூட நபி (ஸல்) அவர்களிடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினான்.

கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர். நிச்சயமாக, அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 26:224-226)

1) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்திலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கி, இறையச்சத்துடன் நேர்வழியையும் அடைந்தவர்களாவர். வழிகேட்டிற்கான எந்த அடையாளமும் அவர்களிடமில்லை.

2) கவிஞர்கள் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு உளறுவதைப் போன்று நபி (ஸல்) முன்னுக்குப் பின் முரணாக உளறவில்லை. மாறாக, அவர்கள் ஒரே இறைவன்; ஒரே மார்க்கம் என்ற கொள்கையின் பக்கம் எப்போதும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

3) தாங்கள் செய்ததையே பிறரிடம் நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். பிறரிடம் எடுத்துரைத்ததையே தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுக்கும் கவிஞர்களுக்கும், குர்ஆனுக்கும் கவிதைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை பிறகு எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கும் குர்ஆனுக்கும் எதிராக நிராகரிப்போர் எழுப்பிய ஒவ்வொரு சந்தேகத்துக்கும் தெளிவான, ஆணித்தரமான பதில்களை அல்லாஹ் இறக்கி அருளினான். நிராகரிப்பவர்களின் பெரும்பாலான சந்தேகங்கள் ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மரணித்தவர் மறுமையில் எழுப்பப்படுவது ஆகிய மூன்றைப் பற்றியே இருந்தது. ஏகத்துவம் தொடர்பான அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் குர்ஆன் உறுதியான பதிலளித்து அவர்களது கற்பனைக் கடவுள்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதையும் தெளிவுபடுத்தியது. குர்ஆனின் ஆணித்தரமான விளக்கங்கள் குறைஷியரின் கோபத்தையே அதிகரிக்கச் செய்தது.

அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்; நம்பிக்கைக்குரியவர்; இறையச்சமிக்க ஒழுக்க சீலர் என்று உறுதி கொண்டிருந்த அதே நேரத்தில், அவர் அல்லாஹ்வின் உண்மையான தூதூர்தானா? என சந்தேகித்தனர். ஏனெனில், “நபித்துவம்’ என்பது மிக உயர்ந்த ஒன்று! அதை சாதாரண மனிதர்களால் பெற முடியாது என அவர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவே, அல்லாஹ் தனக்களித்த நபித்துவத்தைப் பற்றி அறிவித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்களென நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்தபோது இணைவைப்பவர்கள் திகைத்துப்போய் பின்வாங்கினர். இவர்களின் இக்கூற்றுகள் பற்றியே அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கினான்.

(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! (அல்குர்ஆன் 25:7)

மேலும் “முஹம்மது மனிதராயிற்றே!

மனிதர் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 6:91)

அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து அல்லாஹ் (அதே வசனத்தில்) கூறுகிறான்:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: “மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (“தவ்றாத்’ என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? (அல்குர்ஆன் 6:91)

மூஸா (அலை) மனிதர்தாம் என்று அவர்கள் நன்கு விளங்கியிருந்தனர். அப்படியிருக்க முஹம்மது (ஸல்) மனிதராக இருப்பதுடன் அல்லாஹ்வின் தூதராக ஏன் இருக்கக்கூடாது?

ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களின் தூதுத்துவத்தை மறுத்து இவ்வாறுதான் கூறினர்.

அதற்கவர்கள், “நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 14:10)

இவர்களின் இக்கூற்றுக்குப் பதிலாக இறைத்தூதர்கள் கூறினார்கள்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார் களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். (அல்குர்ஆன் 14:11)

ஆகவே, இறைத்தூதர்களும் மனிதர்கள்தான். எனவே, மனிதராக இருப்பது நபித்துவத்திற்கு எந்த வகையிலும் முரண்பாடானது அல்ல என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்தின.

இப்றாஹீம், இஸ்மாயீல், மூஸா (அலை) ஆகிய அனைவரும் மனிதர்களாக இருந்து அல்லாஹ்வின் தூதராகவும் இருந்தார்கள் என்பதை மக்காவாசிகள் ஏற்றிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மீதான இந்த வாதத்தை விரைவிலேயே கைவிட்டு விட்டு மற்றொரு சந்தேகத்தைக் கிளற ஆரம்பித்தனர். அதாவது, மிகவும் மகத்துவம் வாய்ந்த தூதுத்துவத்தைக் கொடுக்க இந்த அனாதையைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? மக்கா, தாயிஃப் நகரத்திலுள்ள செல்வமும் செல்வாக்கும் மிக்க பல தலைவர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆதரவற்றவரான இவரை அல்லாஹ் ஒருபோதும் தூதராக்க மாட்டான் என்று வாதிக்கத் தொடங்கினர். அவர்களின் இக்கூற்றை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரியமனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.(அல்குர்ஆன் 43:31)

இவர்களின் இக்கூற்றுக்கு பதிலுரைத்து இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.

(நபியே!) உங்கள் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தாமா? (அல்குர்ஆன் 43:32)

அதாவது தூதுத்துவம், வஹி (இறைச்செய்தி) இரண்டும் அல்லாஹ்வின் கருணையாகும். அதை, தான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கும் முழு உரிமையும் அவனுக்குரியதே! அவ்வாறின்றி இவர்கள் விரும்பிய நபர்களுக்குத்தான் கிடைக்க வேண்டுமென்று இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? என அல்லாஹ் வினா தொடுத்து, தூதுத்துவத்தை யாருக்கு கொடுப்பது என்பதை அவனே நன்கு அறிந்தவன் என அடுத்து வரும் வசனத்தில் கூறுகிறான்:

அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படும் வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் 6:124)

இதற்கும் உரிய பதில்கள் கிடைக்கவே, மற்றொரு சந்தேகத்தைக் கிளறினர். உலகில் அரசர்கள் படை, பட்டாளம் சூழ மிகக்கம்பீரமாக, செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்க தன்னை அல்லாஹ்வின் தூதரென வாதிக்கும் முஹம்மதோ சில கவள உணவுக்காக வாழ்க்கையில் இப்படியெல்லாம் சிரமப்படுகிறாரே? என்றனர்.

(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:7, 8)

நிராகரிப்பவர்களின் மேற்கூறிய கூற்றுக்குரிய பதிலை அல்லாஹ் அதைத் தொடர்ந்துள்ள 9, 10, 11 வசனங்களில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி (இந்த) அக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.

(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) அவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கத்தை உங்களுக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.

உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எயும் நரகத்தையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 25:9, 10, 11)

அதாவது, சிறியவர்-பெரியவர், பலவீனர்-வலியவர், மதிப்புடையவர்-மதிப்பற்றவர், சுதந்திரமானவர்-அடிமை, ஏழை-பணக்காரர் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதே முஹம்மது (ஸல்) அவர்களது பணி! எனவே அரசாங்க தூதர்களைப் போல படை பட்டாளம், பாதுகாவலர், பணியாட்கள் ஆகியோர் சூழ முஹம்மது (ஸல்) இருந்தால் மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரணமான மனிதர்களும் ஏழை எளியோரும் எவ்வாறு அவரைச் சந்தித்து பயன்பெற முடியும்? எனவே அரசர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ்ந்தால் நபித்துவத்தின் நோக்கமே அடிபட்டுவிடும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.

அடுத்து, மரணத்துக்குப் பின் எழுப்பப்படுவதை அவர்கள் மறுத்து வந்தார்கள். அது அறிவுக்கு எட்டாததாகவும் ஆச்சரியமானதாகவும் அவர்களுக்குத் தென்பட்டது. அவர்களின் இக்கூற்றை பற்றி இதோ அல்குர்ஆன் விவரிக்கிறது:

“நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும் போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்) (அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்” என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 37:16, 17)

(அன்றி, “இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப்போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீளவைக்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை” என்றும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 50:3)

எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அன்றி, (இம்மனிதர்) “அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ” என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று! எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 34:7, 8)

மரணத்திற்கு பிறகு எழுப்படுவதை பரிகாசம் செய்து அவர்கள் கவிதையும் பாடினர்,

“மரணமா? பிறகு எழுப்புதலா? பிறகு ஒன்று சேர்த்தலா? உம்மு அம்ரே இது என்னே கற்பனை கதை?”

உலகில் நடைபெறும் நிகழ்வுகளை அல்லாஹ் அவர்களது சிந்தனைக்கு உணர்த்தி, அவர்களது கூற்றுக்கு மறுப்புரைத்தான். அதாவது, அநீதமிழைத்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமலும், அநீதத்திற்குள்ளானவன் அதற்குரிய பரிகாரத்தைப் பெறாமலும் மரணித்து விடுகிறான். அவ்வாறே, நன்மை செய்தவன் அதற்குரிய நற்பலனையும், தீமை செய்தவன் அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்காது மரணமடைகின்றான். மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கையும் அங்கு ஒவ்வொரு செயலுக்குமான தகுந்த கூலியும் என்ற நியதி இல்லாதிருந்தால், இந்த இரு வகையினரும் சமமாகி விடுவார்கள். அதுமட்டுமின்றி பாவியும் அநீதமிழைத்தவனும் நல்லவரை விடவும் அநீதமிழைக்கப்பட்டவனை விடவும் பாக்கியத்திற்குரியவர்களாக ஆகி விடுவார்கள். ஆனால், நீதமானவனான அல்லாஹ் தனது படைப்பினங்களை இத்தகைய முரண்பாட்டில் வைத்துவிடுவான் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விவரிக்கிறான்.

(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பளிக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 68:35, 36)

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறை அச்சமுடைய வர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (அல்குர்ஆன் 38:28)

எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் தாம் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே! அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது. (அல்குர்ஆன் 45:21)

மறுமுறை எழுப்புவது அல்லாஹ்விற்கு முடியுமா? என்ற அவர்களின் சந்தேகத்திற்கு இதோ அல்லாஹ் பதில் அளிக்கின்றான்.

(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான். (அல்குர்ஆன் 79:27)

வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 46:33)

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) (அல்குர்ஆன் 56:62)

அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 30:27)

எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104)

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமர் (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு?) எனினும் (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 50:15)

இவ்வாறு அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் அறிவார்ந்த விளக்கத்தை அல்லாஹ் அளித்தான். எனினும், அந்தக் நிராகரிப்பவர்கள் ஆணவத்தால் சிந்திக்க மறுத்து தங்களது கருத்தையே மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தனர்.

3) முன்னோர்களின் கட்டுக்கதைகளைக் கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது

நிராகரிப்பவர்கள் மேற்கண்ட சந்தேகங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்கள் குர்ஆனை செவியேற்கவோ இஸ்லாமிய அழைப்புக்கு பதில் தரவோ இயலாதவாறு அவர்களிடையே புகுந்து தங்களால் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய அழைப்பைக் கேட்கும் மக்களிடையே நுழைந்து கூச்சல், குழப்பங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தி அவர்கள் குழுமியுள்ள அந்த இடங்களிலிருந்து அவர்களை மிரண்டு ஓடவைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுப்பதற்கு அல்லது தொழுவதற்கு அல்லது குர்ஆன் ஓதுவதற்கு தயாரானால் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவார்கள். இது குறித்து அடுத்து வரும் வசனம் அருளப்பட்டது:

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதினாலும்) நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு அதில் கூச்சல், குழப்பம் உண்டுபண்ணுங்கள். அதனால் நீங்கள் (முஸ்லிம்களை) வென்றுவிடலாம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)

இத்தகைய இடையூறுகளால் நபி (ஸல்) அவர்களுக்கு மக்கள் மன்றங்களிலும் பொதுச் சபைகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதும் குர்ஆனை ஓதிக் காண்பிப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. எனவே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மக்கள் முன்னிலையில் தோன்றி சொல்லவேண்டிய விஷயத்தை எடுத்துச்சொல்லி, ஓதிக்காட்ட வேண்டியதை ஓதிக்காட்டி விடுவார்கள். கடினமான இந்நிலை நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.

குறைஷியர்களில் ஒருவனான “நள்ரு இப்னு ஹாரிஸ்’ ஒரு முறை “ஹீரா’ சென்றிருந்தபோது அங்கிருந்து பாரசீக அரசர்கள் மற்றும் ருஸ்தும், இஸ்ஃபுந்தியார் ஆகியோரின் கதைகளை கற்று வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு சபையில் உபதேசம் செய்யவோ, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவோ தொடங்கினால், அவர்களுக்குப் பின் “நழ்ரு’ நின்று கொண்டு “குறைஷியரே! முஹம்மதை விட நான் அழகாகப் பேசுவேன்” என்று கூறி, தான் கற்று வந்த கதைகளைக் கூறி முடித்தபின் “என்னை விட முஹம்மது அழகாகப் பேசிட முடியுமா?” என்று கேட்பான். (இப்னு ஹிஷாம்)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: இனிமையாக பாட்டுப் பாடும் ஓர் அடிமைப் பெண்ணை நழ்ரு விலைக்கு வாங்கியிருந்தான். இஸ்லாமை ஏற்க எவரேனும் விரும்பினால் அவரிடம் தனது பாடகியை அழைத்துச் சென்று “இவருக்கு உணவளித்து, மதுவைப் புகட்டி, இனிமையாக பாட்டுப் பாடு” என்று அவளிடம் கூறுவான். பிறகு, அம்மனிதரிடம் “முஹம்மது உன்னை அழைக்கும் காரியத்தைவிட இது மிகச் சிறந்தது” என்று கூறுவான். இது குறித்து பின்வரும் வசனம் அருளப்பட்டது. (துர்ருல் மன்ஸுர்)

(இவர்களைத் தவிர) மனிதல் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)
துன்புறுத்துதல்
நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)

உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)

ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)

பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.

ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் “ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்” என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)

அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்” என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)

(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)

அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)

கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.(அஸதுல் காபா)

ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)

உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொயூரமாக வேதனை செய்தான். (இஸாபா)

அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)

இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.

அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.

(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.

இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)

இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார். (இப்னு ஹிஷாம்)

அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் - இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.

(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.

No comments:

Post a Comment