Thursday, 5 January 2012

இணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
ஏக இறைவவனுக்கு இணை வைத்தவர்களை இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று இஸ்லாம் பார்க்கவில்லை. ”இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள்” என்ற வட்டத்திற்குள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் செய்த நன்மைகள் மறுக்கப்படுகிறது. இணை வைத்தவர்கள் ஏக இறைவனின் வசனங்களை செவியேற்க மறுத்து அவனுக்கு இணை வைத்தது போல!
இறைவனுக்கு இணையாக எதையும் எவரையும் வணங்கக்கூடாது! இஸ்லாம் இந்தக் கொள்கையை அடிப்படையாக நிறுவியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் அஸ்திவாரத்தின் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தவர்கள், இறைவனால் புறக்கணிக்கப்படுவார்கள் எனும்போது அவர்களின் நன்மைகள், தீமைகள் கணக்கிடப்பட வேண்டும் என்பதும் அர்த்தமற்றதாகும்.
இறைவனுக்கு இணை கற்பிக்ககூடாது என்ற இறைவனின் கடுமையான எச்சரிக்களை ஏற்கமாட்டோம்! நாங்கள், எங்களின் பெரியார்கள், பீர்கள், மகான்கள், முன்னோர்கள் கூறியதை தான் ஏற்போம்!, ஆனால் நாங்கள் செய்த நல்லறங்கள் மட்டும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. இஸ்லாம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை! இறைவனுக்கு இணை கற்பிப்பதை, பெரும் பாவங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இஸ்லாம் நிறுத்தியுள்ளது.
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்” (திருக்குர்ஆன், 4:048,116)
”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்” (திருக்குர்ஆன், 4:116)
“லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது ” என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!”  (திருக்குர்ஆன், 31:13)
”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்”  (திருக்குர்ஆன், 5:72)
ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்பாடுகளை, பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதியாகவும் இறை வசனங்கள் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார், இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவனின் வாக்கு!
முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் இது பொதுவானதே!எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!
”இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்” (திருக்குர்ஆன், 6:088)
”நம்பிக்கை கொண்ட பின்னர் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒரு போதும் எற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.” — (ஏக இறைவனை) ”மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை” (திருக்குர்ஆன், 3:90-91)
நபி (ஸல்) அவர்களையே இறைவன் எச்சரிக்கின்றான்!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது”  (திருக்குர்ஆன், 39:65-66)
இறைவனுக்கு இணை கற்பிப்பவர் அவர் அவர் முஸ்லிமாக பிறந்திருந்திருந்தாலும் கூட, அவரின் நல்லறங்கள் – நன்மைகள் அழிக்கப்படும் என்று சொல்லி, இதில் நபி (ஸல்) அவர்களுக்கே எவ்வித சலுகையும் வழங்கவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் மேற்கண்ட இறைவசனங்களிலிருந்து இணைவைத்தல் என்பது மறுமை வாழ்க்கையை நாசாமாக்ககூடிய அதிபயங்கரமான செயல் என்பதையும் அறிய முடிகிறது.
சுருக்கமாக, மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்னவென்றால்: 
  1. இறைவனுக்கு இணை கற்பித்தால், ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
  2. இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
  3. இறைவனுக்கு இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
  4. இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்
இணைவைப்பாளர்களுக்கு இறைன் கூறும் உவமானம்:
தன்னுடைய திருமறையிலே ஒவ்வொருவருக்கும் உதாரணம் கூறும் இறைவன் இணைவைப்பவர்களுக்கு உதாரணம் கூறும் போது நம்மால் தாங்கிக்கொள்ள இயலாத மிகக்கடுமையான உதாரணத்தைக் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான” (அல்குர்ஆன் 22:31)
எனவே சகோதர, சகோதரிகளே!
இறைவன் கூறிய இந்த உதாரணத்தை மீண்டும் ஓரிரு முறை கவனமாகப்படித்துப் பாருங்கள்! நினைத்துப் பார்த்தாலேயே அதிபயங்கரமானாகத் தோன்றும் இத்தகைய கடுமையான உதாரணத்தை இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ் கூறுகிறான். ஆனால் என்ன பரிதாபம் நம் பெற்றோர்களும், சகோதர, சகோதரிகளும், உறவினர்களும் நமக்கு நெருக்கமான நன்பர்களும் சர்வ சாதாரணமான இத்தகைய படுபயங்கரமான இணைவைப்பில் உழன்றுக்கொண்டிருந்தும் அவர்களின் மீது அக்கரையின்றி நாம் அலட்சியமாக இருக்கின்றோம்.
தமிழகத்திலே ஏகத்துவம் பட்டி தொட்டியெல்லாம் பரவிவிட்டது; அதனால் நாம் முன்பு போல ஏகத்துவ பிரசாத்தில் மும்முரமாக ஈடுபடத்தேவையில்லை! அதனால் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்! என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். இதுநாள் வரை, தமிகழத்தில் மிகப்பெரும்பாண்மையான பள்ளிவாசல்கள் இணைவைப்பாளர்களின் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் ஊர்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் வைத்தே இறைவனுக்கு இணை கற்பிக்கும் மவ்லூதுகள் ஓதப்பட்டு, முஹ்யீத்தீனை ஆயிரம் முறை கூவி அழைக்கப்படுகிறது. பிறகு நாம் எவ்வாறு தமிழகத்திலே ஷிர்க் ஒழிந்துவிட்டது என்று கருதி நமது செயல்பாடுகளில், இணைவைப்புக்கு எதிரான பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கமுடியும்?
அவர்கள் இறைவனுக்கு இணைவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்வதில்லை என்றும் மாறாக இணைவைத்தல் என்றால் என்ன என்று தெரியாமலேயே மேலும் அவற்றின் விபரீத விளைவுகளைப் பற்றி அறியாமையினாலேயே அன்பியாக்கள் மற்றும் அவ்லியாக்களின் ஷஃபாஅத்- பரிந்துரை கிடைக்கும் என்றெண்ணி இவ்வாறு செய்கின்றனர் என்றும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். மேலும், ‘அல்லாஹ்வைத் தவிர பிறரிடம் பிரார்த்திப்பதும் இணைவைப்பு’ என்ற அறியாமையின் காரணமாகவே இவர்கள் சமாதிகளில் உள்ளவர்களை இடைதரகர்களாகவும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கும் மிஞ்சிய ஆற்றல் உள்ளவர்களாகவும் சித்தரித்து அவர்களின் கப்ருகளுக்கு மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள்களுக்கு (சிலைகளுக்கு) பூஜை செய்வது போன்று செய்து வருகின்றனர் என்றும் நாம் அறிவோம்.
மேலும் இத்தகைய இணைவைப்பில் ஈடுபடுபவர்களை நாம் பார்த்தோமேயானால் அவர்களில் பலர் நம்மைவிட அதிக அமல்கள் செய்பவர்களாகவும் தக்வாவில் உறுதியுடையவர்களாகவும் தோன்றுவார்கள். எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் சுன்னத்தான தொழுகை மற்றும் நோன்புகளை அதிகம் பேணுபவர்கவும் மேலும் அதிகமதிகம் உம்ரா செய்பவர்களாகவும் இருந்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தர்ஹா வழிபாடு, மௌலூது மற்றும் மார்க்கம் அனுமதிக்காத பித்அத்கள் போன்றவற்றையும் தொடர்ந்து செய்துவருபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு இறைவனின் மேற்கூறிய இறைவசனங்களான ‘இறைவனுக்கு இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்துவிடும்’ (6:88) என்ற இறைவனின் எச்சரிக்கையைக் கூறி அவர்களை திருத்துவது நமது கடமை இல்லையா?
அல்லாஹ் கூறுகின்றான்:
“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (அல்-குர்ஆன் 66:6)
எனவே அறியாமையினால், சமாதிகளை நோக்கி தறிகெட்டு அலையும் நமது சகோதர நெஞ்சங்களுக்கு ஷிர்க் என்றால் என்ன? என்று விளக்கி அதன் தீமைகளை அவர்களுக்கு உணர்த்துவதற்கு முயற்சிக்க வேண்டும். ஏகத்துவக் கொள்கைகளை ஏற்றிருக்கும் நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கு பயந்து, நமக்குள் இருக்கும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை கொஞ்சம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, இறைவனின் கட்டளைப்படி நம்மையும் நம் குடும்பத்தவர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும். இதுவே மற்ற எதனையும் விட நமது இன்றியமையாத செயலாக நாம் கருதவேண்டும். இதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிந்து நம் அனைவரையும் நரகத்திலிருந்து பாதுகாத்து அவனது சுவனப்பூஞ்சோலையில் நுழைவதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.

No comments:

Post a Comment