Friday 6 January 2012

மதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு!! ஒரு சிறப்பு பார்வை...


தனி தெலுங்கானா குறித்த போராட்டங்களும், அதை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும், ஒசமானியா பல்கலைக்கழக மாணவர்களும், சந்திரசேகர ராவும், சிரஞ்சீவியும், தல்லி தெலுங்கானாவும், விஜய சாந்தியும், சிதம்பரமும், ஐதராபாத்தும் ஆங்கில தமிழ், காட்சி ஊடகங்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் சரியான தீனிபோட்டு வருகின்றன. உஸ்ஸுன்னு ஒத்துக்கறது அப்புறம் அஸ்ஸுன்னு மறுக்கறது என்று மத்திய அரசும் சிதம்பரமும் மறுக்கா மறுக்கா இதை வைத்து அரசியல் செய்ய....அட அதை விடுங்கள்...


தனி தெலுங்கானாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தெலுங்கனா ஏதோ ஆந்திர மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாகவும், அவர்கள் அருணாச்சலம், அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலத்தவரைப்போல கல்வியில், வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டதால், ஒதுக்கப்படுவதால், புறக்கணிப்பின் வலியில் எழுந்த போராட்டம் தான் தெலுங்கானா என்று நினைத்திருந்தேன்...

அடங்கொன்னியா, தெலுங்கனா என்பது ஆந்திராவின் இதயப்பகுதி. ஐதராபாத்தும் அதை சுற்றிய பகுதிகளும். வளமான பகுதி. போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் அதை கோஸ்டல் ஆந்திர மக்களும் ராயலசீமாவினரும் தான் ஆரம்பித்திருக்கவேண்டும். இவ்வளவு நாளாக இதை வைத்து காமெடி செய்பவர்கள், அவர்களது சுயலாபத்துக்காகவே செய்துவந்துள்ளார்கள் என்பது நன்றாக புரிகிறது. ஆமா. அப்படியே புரிஞ்சுட்டாலும் என்கிறீர்களா ? விடுங்க. மேட்டருக்கு வருவோம்.

தலைப்பை பார்த்து கொஞ்சம் ஷாக், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கடுப்பு எல்லாம் வருகிறதா ? அப்படியென்றால் நேராக பின்னூட்டப்பகுதிக்கு சென்று எதையாவது திட்டிவிட்டு செல்லவும். இல்லையென்றால் மேற்கொண்டு படிக்கவும்.

மதுரையை பொறுத்தவரை அது மிகப்பெரிய ஒரு கிராமம். சென்னையில் இருப்பதுப்போல அண்ணாநகர் ரவுண்டானாவோ, அல்லது மவுண்ட்ரோடு பாலமோ இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா ? மதுரை காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரம்.

சென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கும் சரவண பவனுக்கும் வருவதற்கு கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து மணி நேர பயண நேரத்தையும் பணத்தையும் காலம் காலமாக விரயம் செய்துவருபவன் மதுரை தமிழன். எங்களை எல்லாம் பார்த்தால் இளிச்சவாயர்களாக தெரிகிறதா ?

அது மட்டுமா , மெரினா பீச் இருக்கிறதா, அண்ணா சமாதி இருக்கிறதா, அல்லது கன்னிமரா நூலகம்தான் இருக்கிறதா ? ஏன் வரப்போகும் அணு மின் நிலையம் கூட சென்னைக்கருகில் கல்பாக்கத்தில் தானே வரப்போகிறது ? இதிலிருந்து இனிமேலும் சென்னை மதுரையை புறக்கணிக்கத்தான் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கோடம்பாக்கத்துக்காரர்கள் துட்டுக்காக சுப்ரமணியபுரம், மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி, மதுரை சம்பவம், மதுரை முண்டியாண்டி விலாஸ் என்று நூற்றுக்கணக்கில் மதுரையை வைத்து படம் எடுத்து அதன் லாபத்தை தங்கள் முதலை வாயில் போட்டுக்கொள்கிறார்கள். பாட்டு ஹூட்டிங் கூட காஷ்மீரிலோ, மலேசியாவிலோ போய் எடுப்பார்கள். இதனால் மதுரைக்கோ, மதுரையில் இட்லிக்கடை நடத்தும் முருகனுக்கோ என்ன பிரயோஜனம் ?

இனியும் ஏமாற மதுரை தயாராக இல்லை. பாண்டிய நாட்டுக்கு என்ன வரலாறு இல்லையா ? குமரிக்கண்டத்தில் கடல்கோளால் (அதாங்க சுனாமி) அழிந்த தென்மதுரை 72 ஊர்களுக்கு தலைநகர். அதுக்கபுறம் கபாடபுரம். அது 300 ஊருக்கு தலைநகர். அதுக்கும் வந்தது சுனாமி. அதுவும் அழிந்தது. அதுக்கப்புறம் இப்ப இருக்குற மதுரை. மதுரை மீனாட்சி இமயமலை வரை படையெடுத்து வெற்றிபெற்றார். அவர் வம்சம்தானே இந்தியாவையே கட்டி ஆண்ட மவுரியர்கள் ?

மதுரைக்காரகள் வரலாற்றிலும் குறைந்தவர்கள் இல்லை. வீரத்திலும் குறைந்தவர்கள் இல்லை

பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகல்..

(பைப்புல தண்ணி ஒழுவுதே அது இல்லை. இது கலித்தொகையில வர்ர ஒழுகல். நடத்தல்னு அர்த்தம். ஆங். எங்க விட்டேன். பண்பு. ஆமாம். பண்பிலும் குறைந்தவர்கள் இல்லை. நீதியிலும் குறைந்தவர்கள் இல்லை

ஐ யம் நாட் டெல்லிங் அபவுட் இந்த காலத்து மதுரை சுப்ரீம் கோர்ட்டு கிளை. நான் சொல்ல வர்ரது கண்ணகிக்கு நீதி வழங்க உயிர்விட்ட பாண்டியன் நெடுஞ்செழியனையும், நீதிக்காக கையை வெட்டிக்கிட்ட பொற்கை பாண்டியனையும் சொல்றேன்.

இராமாயணத்தில், மகாபாரதத்தில், அசோகர் கல்வெட்டுக்களில், சிங்கள மகாவம்சத்தில், மவுரியர் பட்டயங்களில், கிரேக்க வரலாற்றில் எங்கெங்கும் பாண்டியர் பற்றிய செய்தி உண்டு. அது மட்டுமா, அகநாநூற்றில், புறநாநூற்றில், கலித்தொகையில், எல்லா சங்க இலக்கியங்களிலும் பாண்டிய நாட்டைப்பற்றிய மேட்டர் இருக்குதுங்க.

இது மூலமா நீ என்ன சொல்ல வர்ரேன்னு தானே கேக்குறீங்க ? மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடு அமைக்க காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கொண்டு போராட்ட கமிட்டி அமைக்கப்படும். மதுரையில் ஒரு இட்லிக்கடை இயங்க விடமாட்டோம். அமிர்தம் தியேட்டர் அல்லது மேற்கு கோபுர வீதியில் போராட்ட கமிட்டி அலுவலகம் அமைக்கப்படும்.

ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் பார் த நியூ ஸ்டேட். (உள்துறை செயலாளர் இதை எழுதி ட்ராப்டில் போட்டு வைத்துக்கொள்ளலாம். அதாவது சேமித்து வைத்துக்கொள்ளலாம். நாளை பின்னே சிதம்பரம் சார் வெள்ளை வேட்டி சட்டை துண்டு அணிந்துகொண்டு, கையில் வெள்ளை பேப்பர் வைத்துக்கொண்டு நைட்டு எட்டுமணிக்கு சோனியாஜி வீட்டு வாசலில் பத்திரிக்கை பேட்டி கொடுக்கும்போது அப்படியே பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் ரிலீஸ் செய்ய வசதியாக இருக்கும்.)

1. கோலிவுட்டைப்போல மதுரையில் தனி திரைப்பட துறை உருவாக்கப்படும். மாட்டிவுட் என்று அது அழைக்கப்படும். மாட்டுத்தாவணி பஸ்டாண்டு அருகில் அது இருக்கும் என்பதை தனியாக சொல்லவேண்டுமா ?

2. வண்டியூர் தெப்பக்குளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடி மேம்பாலம் அமைக்கப்படும். அந்த காண்ட்ராக்ட் கழக உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.


3. கங்கை நதியை வைகை நதியுடன் இணைக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அமைச்சர் அழகிரி மன்னிக்கவும், அழகர் ஆற்றில் இறங்கும்போது நிறைய தண்ணீர் ஓடுவது போல செய்யப்படும்.


4. பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, யாதவா கல்லூரி ஆகிய இடங்களுக்கு வெளியே மாணவர்கள் நிம்மதியாக சைட் அடிக்க வசதியாக நிழல் குடைகள் கட்டப்படும்.

5. வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க காந்தி மியூசியத்தில் நடிகர் நாசர் தலைமையில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். இதில் அட்டாக் ஆறுமுகம், வெடிகுண்டு முருகேசன், சைக்கிள் செயின் கோபு, முட்டை பாபு போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.


6. அனைத்து இட்லிக்கடைகளிலும் இட்லிப்பொடி மற்றும் எண்ணை அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்.


7. வெய்யில் அதிகமாக உள்ள காலங்களில் மக்களுக்கு இலவச ஜிகிர்தண்டா பந்தல் அமைக்கப்பட்டு, அரசு சார்பில் ஜிகிர்தண்டா வழங்கப்படும்.


8. மதுரை கேபிள் டிவி அமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை இலவசமாக காட்டப்படும். அதில் வாடா...என்று ஒரு ரவுடி ஹீரோவை என்று சண்டைக்கு அழைக்கும் காட்சி மறுபடி மறுபடி காட்டப்பட்டு, மதுரை மக்களுக்கு வீரம் டிவி வழியாக புகட்டப்படும்.


9. அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு டியூசன் செண்டர் என்று அரசு சார்பில் ஆரம்பிக்கப்பட்டு, சின்ன சந்தில் உயிருக்கு பயந்து ஓடிவரும் மாட்டின் வாலை பிடித்து தொங்கி அந்த மாட்டை டார்ச்சர் செய்வது எப்படி என்று பயிற்றுவிக்கப்படும். மேலும் மத்திய அரசு மூலம் ஜல்லிக்கட்டை ஒலிம்பிக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


10. திருமலை நாயக்கர் மஹால் காதலர் அமைதிப்பூங்கா என்று மாற்றி அமைக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் கள்ளக்காதலர்கள் அமைதியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

11. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அனைவருக்கும் அமவுண்டு செட்டில் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அன்னப்போஸ்டில் வெற்றிபெற ஏற்பாடு செய்யப்படும். வறுமை மற்றும் பஞ்சத்தால் அதிக கடன்காரர்கள் உள்ள தொகுதி எம்.எல்.ஏக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுத்தள்ளப்பட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


12. பெண்களுக்கு சம உரிமை வழங்கும்பொருட்டு, சிவகங்கை காளையார் கோயில் போல புதுக்கோட்டையில் கண்ணியார் கோயில் என்று புதிய கோயில் நகர் உருவாக்கப்படும்.


13. நடிகர் நாகேஷுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சுருளி நீர்வீழ்ச்சி நாகேஷ் நீர்வீழ்ச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படும். அதே போல தூத்துக்குடி என்ற பெயர் தலைவர் பேத்தியின் வாயில் நுழையாததால் சாத்துக்குடி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

14. பழமுதிர்சோலை என்ற பெயரில் மதுரையெங்கும் அரசு சார்பில் ஜூஸ் செண்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் குற்றாலத்துக்கு செல்லும் பயண செலவும் மிச்சப்படுத்தப்படும்.

15. குழந்தைகள் குஜாலாக இருக்கும்பொருட்டு, பள்ளிகளில் சினிமா பீரியட் என்று ஒரு பீரியட் உருவாக்கப்பட்டு, விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் நடித்த பல படங்கள் திரையிடப்படும்.


16.தியாகராஜபுரம், சென்னை சம்பவம், சென்னை டு செங்கல்பட்டு வழி மதுராந்தகம் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு, இது நாள் வரை மதுரையை நக்கல் செய்த சினிமா தயாரிப்பாளர்களை நக்கல் செய்வோம்.


17. மதுரை மல்லி என்ற பெயரில் இண்டர்நேஷனல் லெவலில் பேடண்ட் வாங்கப்பட்டு, இனி மதுரை மல்லி மதுரைக்கே என்ற கோஷத்துடன் எல்லாரும் மல்லிகைப்பூ சூடிக்கொள்ள அரசு உதவும்.

18. மதுரை மத்திய சிறையில் கைதிகள் குஜாலாக இருக்க தனியார் தொலைக்காட்சிகள், மொபைல் தொலைபேசி வசதி, குளுகுளு ஏசி வசதி போன்றவை செய்து தரப்படும். தமிழக அரசு அறுபது வயதில் கைதிகளை விடுவிப்பதற்கு போட்டியாக நாற்பது வயதிலேயே அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

19. மதுரை ஆதீனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்படி கிடைக்கவில்லை என்றால் பாண்டிய அரசே நோபல் என்ற பரிசை உருவாக்கி அவருக்கு தரும். அவர் சிக்ஸ் பேக் பாடியுடன் இருப்பதால் அட்லீஸ்ட் உடற்பயிற்சிக்கான நோபல் பரிசாவது கிடைக்க வழிசெய்யப்படும்.


20. தமிழ்நாட்டில் இருக்கும் மீன்பாடி வண்டிகளை எதிர்த்து மத்திய சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்படும். மீன் என்பது மதுரை கொடி. அதை வண்டிக்கு வைத்து மதுரை கொடியின் மாடஸ்டியை குலைப்பதை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்தப்படும்.


21. நடிகர் முரளி கருப்பாக இருப்பதால் அவரை பாண்டிய நாட்டின் ஆஸ்தான நடிகராகவும், வைரமுத்து பாண்டிய அரசின் ஆஸ்தான கவியாகவும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தெக்கத்தி பொண்ணு என்ற தொடரை எடுத்து மதுரையின் புகழ் பரப்பும் பாரதிராஜாவை பாண்டிய அரசின் ஆஸ்தான டைரக்டராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாண்டிய ஆபத்துதவியாக நடித்த ரீமா சென்னுக்கு சிறந்த நடிகை விருது பாண்டிய அரசின் சார்பில் வழங்கப்படும்.


22. மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த தலைமையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டண்ணலில் ஒளிந்திருந்தாலும் அவர்களை சுழட்டி சுழட்டி அடிக்கவும், மேலும் ஹிந்திக்கார தீவிரவாதிகளை தமிழில் புத்திமதி சொல்லி திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வசனகர்த்தா திரு லியாகத் அலிகான்.




23. வைகை புயல் (வைகையில் தண்ணி வரும், புயல் வருமா ?) நடிகர் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி தமிழ் கூறும் நல்லுலகத்தை காமெடியாக்குவதால்,  பெங்களூரில் அனில் கும்ளே சர்க்கிள் இருப்பது போல எஸ்.எஸ் காலனியை வடிவேலு காலனி என்று மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

24. இதுபோன்ற பல ஐடியாக்கள் கன்னாபின்னாவென செயல்படுத்தப்பட்டு, மக்கள் எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவைக்கப்பட்டு, மதுரையில் கடல் இல்லாத குறை தீர்க்கப்படும். தமுக்கம் மைதானம் அருகே மெரினா என்ற பெயரில் நீச்சல் குளமும் கட்டப்பட்டு, அதில் கோவணம் கட்டியவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும்..

25. இந்த பிரச்சினைக்காக முதலில் குரல்கொடுத்த  எனக்கு  காமராஜர் பல்கலைகழகம் மூலமாக மேலும் ரெண்டு மூனு டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ...

26. நானும் 2009லிருந்து  மதுரையில் வசிப்பதால்...

இனி இல்லை புறக்கணிப்பின் வலி.


வாழ்க மீன்கொடி... வாழ்க பாண்டிய மணி(money)த்திரு நாடு!!!..


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment