Wednesday, 21 November 2012

அறிந்து கொள்வோம!! - அப்பன்டிசைடிஸ் (Appendicitis)



Appendicitis (அப்பன்டிசைடிஸ்) - என்பது பொதுவாக கல்டைசல் வலி என எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. உண்மையில் இவ்வருத்தமானது குடல் வளரி தாக்கப்படுவதால் ஏற்படுகின்றது.

குடல் வளரி அல்லது குடல்வால் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலும், சிறுகுடலும் பிரியுமிடத்தில் புறப்பக்கமாக நீட்டப்பட்ட விரல் மாதிரி அமைந்த நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும்
. இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது. இவ் உறுப்பானது சுமார் 4 அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் கொண்ட ஒரு புழு மாதிரியான தோற்றமுடையது.

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.

மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது.

இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன. குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.

பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.

அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?
அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும். இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.

உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும். இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழுவதும் பரவி ஆபத்தாக மாறிவிடும். வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis)என்பார்கள். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?
திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
படுத்தல், தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.

வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்
பசியின்மை
வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்

பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பார்ப்பதன் மூலம் மருத்துவரால் நோயை நிச்சயிக்க முடியும்.

சிகிச்சை
அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.

சிறுதுளைகள் மூலம் சத்திரசிகிச்சை
சில தருணங்களில் அதைச் சுற்றிச் சீழ்க்கட்டி (Appendiciel Abscess) தோன்றலாம். நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) கொடுத்து அதைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றறையில் குழாய் விட்டு சீழை அகற்றவும் செய்வர். 6 முதல் 8 வாரங்களுக்குப் பின் சத்திர சிகிச்சை மூலம் அப்பென்டிக்சை அகற்றுவார்கள்.

சத்திரசிகிச்சை வசதி கிட்டாதபோது அல்லது நோயாளி சத்திரசிகிச்சைக்கு உட்படக் கூடியளவிற்கு ஆரோக்கியமாக இல்லையெனில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமும், நார்ப்பொருள் குறைந்த இலகுவாக சமிபாடடையும் ஆகாரங்களுடனும் சிகிச்சை அளிப்பதுண்டு.

சில ஆய்வுகள் சத்திரசிகிச்சை செய்யாமலே அப்பென்டிசைடிஸ் குணமாகும் என்று கூறுகின்றன. ஆயினும் சத்திரசிகிச்சைக்கான வசதிகள் இருக்கும்போது அவ்வாறு ரிஸ்க் எடுப்பது புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது....

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment