Thursday, 8 November 2012

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பிரசாரம்!! ஒரு பார்வை...


உடல் உறுப்பு தானம் செய்ய திருமண அழைப்பிதழ் வடிவில் நூதன பிரசாரம்

ரத்ததானம், கண்தானம் வரிசையில் இன்று உடல் உறுப்பு தானம் செய்வதிலும் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இறந்த பின் மண்ணோடு மக்கிப்போகும் உடல் பாகங்களை பிறருக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் வாழ வைப்பதோடு, இறந்தவரும் இந்த உலகில் வாழும் உணர்வு உறவினர்களுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி நூதன பிரசாரம் செய்து வருகிறது.

திருமண அழைப்பிதழ் வடிவில் உடல் உறுப்பு தானம் வலியுறுத்தப்படுகிறது. அந்த அழைப்பிதழில் உடல் உறுப்பு தானம் செய்வோர் என்கிற வரனும், உடல் உறுப்பு தேவைப்படுவோர் என்கிற வரனும் இணைந்து உயிர்களை காப்பாற்ற இருக்கின்றனர். ஒருவர் உடல் நலமின்றியோ, விபத்திலோ, தீவிர சிகிச்சைப் பிரிவில் மூளை, மூளைத்தண்டு செயலிழந்து பிற உடலுறுப்புகள் இயந்திர உதவியில் செயல்படுமானால் அவர் மூளைச் சாவு அடைந்தவராவார்.

மூளைச்சாவு அடைந்தவரை அனுபவம் வாய்ந்த மூளை நரம்பியல் மருத்துவர்கள் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை ஆய்வு செய்து மூளைச்சாவு சான்றிதழை வழங்குகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் மூளைச்சாவடைந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்தால் உயிர்ப்புடன் இதய துடிப்புடன் வைக்கப்படுகிறது. செயற்கை சுவாசத்தை அகற்றிய உடன் அவர்கள் இறந்து விடுகிறார்கள். எனவே இவர்களின் நெருங்கிய உறவினர்களின் ஒப்புதலோடு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவைப்படும் உறுப்புகளை பொருத்தி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் காக்கலாம்.

தம் வாழ்நாளுக்கு பிறகு உடல் உறுப்பினை தானமாக அளிப்பதற்கு உறுதியேற்று தம் குடும்பத்தாரிடம் தன் சுயவிருப்பப்படி சட்டத்திற்குப்பட்டு எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளிப்போம். இவ்வாறு அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஆகியோர் நூதன பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதுவரையிலும் ரத்த தானம், கண் தானம் பற்றியே சமூக அமைப்புகள் அதிகமாக வலியுறுத்தி வந்தன. சென்னையில் விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

 நேற்று முன்தினம் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த மதுமலருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. கணவன் கார்த்திகேயன் மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.இதைஏற்று நேற்று காலை  டாக்டர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவினர் கண்கள், கல்லீரல், சிறு நீரகங்கள் ஆகியவற்றை ஆபரேஷன் செய்து எடுத்தனர். கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும், மற்றொன்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும்,  கண்கள் ஜோசப் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கண்கள் தவிர மற்ற உறுப்புகள் உடனடியாக உரியவர்களுக்கு பொருத்தப்பட்டது.

தொகுப்பு : மு. அஜ்மல் கான் 

No comments:

Post a Comment