Friday, 16 November 2012

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு!! ஒரு இஸ்லாமிய பார்வை....



 ஹிஜ்ரிஎன்றால் என்ன?
அது எதனை குறிக்கின்றது. ஹஜர என்ற அரபுப் பதத்திலிருந்து பிறந்தது தான் ஹிஜ்ரி, ஹிஜ்ரத் என்ற சொற்கள். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு குடிபெயர்ந்து செல்லுதல் என்பதே ஹிஜ்ரத் என்ற சொல்லின் பொருளாகும்.

இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் ஹர்ரான் என்ற ஊரிலிருந்து பாலஸ்தீனம் சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது. 
தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.
இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.
ஈட்டிய சொத்துக்கள், ஒட்டிய வாகனங்கள், செழுமைமிக்க வாழ்க்கை அனைத்தையுமே அந்த அல்லாஹ்வுக்காக தியாகத்தோடு துறக்க முன்வந்தார்கள். சுமார் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பயணத்தை தொடர்ந்தும், அதற்கு முன்னருமாக அணியணியாக நபித் தோழர்களும் தாம் பிறந்து வாழ்ந்த மக்கமா நகரைத் துறந்து 300 மைல் தொலைவிலுள்ள யத்ரிப் எனும் பெரு நகரை அடைந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது 53, அண்ணலாரின் வருகையையடுத்து அன்று வரை ‘யத்ரிப்’ என அழைக்கப்பட்ட அந்நகரம் ‘நபிகளாரின் நகரம்’(மதீநதுன் நபி) என அழைக்கப்படலாயிற்று. இந்நிகழ்வையே ஹிஜ்ரத் பயணம் என்கிறோம். இவ்வாறான ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர்களே ‘முஹாஜிரீன்’கள் என அழைக்கப்படு கின்றனர். இந்த ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப்படுகிறது.
 இஸ்லாமிய ஆண்டு..
இஸ்லாமிய ஆண்டுமுற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638(C.E) அன்று நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நெருங்கிய சகாபா மற்றும் இரன்டாவது கலிபாவான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது. உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை துவக்குவதாகவும் முடிவு செய்யபட்டது. முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை16, 622 C.E. குறிக்கிறது. 
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரா என்பது, நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியாகும்.
எனவே இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறிய ஆண்டாகிய கி.பி. 622ம் வருடம் ஹிஜ்ரியின் முதல் ஆண்டாகவும் அவ்வாறே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் மாதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
இஸ்லாமிய நாளேடு முற்றிலும் சந்திரனை அடிப்படையாக 12 மாதங்களை கொண்டது.
 அவை 1. முஹர்ரம் 2. ஸபர் 3. ரபியுல் அவ்வல் 4. ரபியுல் ஆஹிர் 5.ஜமாத்திலவ்வல் 6. ஜமாத்திலாஹிர் 7.ரஜப் 8. ஷஃபான் 9. ரமலான் 10. ஷவ்வால் 11. துல்காயிதா 12. துல்ஹஜ் 
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய நாட்கள்: 1 முஹர்ரம் - இஸ்லாமிய புத்தாண்டு, 27 ரஜப் - புனித மெஹ்ராஜ், 1 ரமலான் - முதல் நோன்பு, 17 ரமலான் - நூஸுல் குர்ஆன், கடைசி 10 ரமலானில் ஒரு நாள் - லைலத்துல் கத்ர், 1 ஷவ்வால் - நோன்பு பெருநாள், 8-10 துல்ஹஜ் - ஹஜ் செய்யும் நாட்கள், 10 துல்ஹஜ் - ஹஜ் பெருநாள். 
இஸ்லாமிய நாட்காட்டி 12 மாதங்கள் கொண்டுருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றியும் அல் குர்ஆனில் 
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:18
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானiவ் இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 9:36. 
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன் அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 9:37 
இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டதினால், ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது. மாதங்கள் காலங்களை அடிப்படையாக கொண்டு இல்லை. ஆகையால், முஸ்லிம் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் வரும். எடுத்துக்காட்டாக நோன்பு பெருநாள் வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் வரும். ஹிஜ்ரி மாதம் ஆரம்பம், முதல் பிறை மட்டும் அடிப்படையாக அல்லாமல், அந்தந்த இடங்களில் கண்ணால் பிறை பார்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. ஆகையால், முக்கியமான பண்டிகைகள் முன்னமே அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டிகளை மட்டும்வைத்து முடிவு செய்யாமல் கண்ணால் பிறை பார்ப்பதை வைத்து முடிவு செய்யப்படுகிறது. 
முதல் பிறை கண்டுபிடிப்பதில் பல்வேறு திட்டமான அளவுகள் உலகம் முழுவதும் பின்பற்றினாலும், ஒவ்வொரு முறையிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. ஆகையால் உலகம் முழுவதும் அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாளேடுகளில் ஒரு சில நாட்கள் வித்தியாசம் இருக்கலாம். 
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment