ஈழ யுத்தத்தில் ஈடுபட்ட பெரிதும், சிறிதுமான வெவ்வேறு ஈழ விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கும், தற்போது, சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக போராடும் பெரிதும், சிறிதுமான வெவ்வேறு போராளி இயக்கங்கள் நடந்து கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை சற்று விரிவாக நோக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கங்களின் கூட்டமைப்பை ஐரோப்பாவில் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது பிரான்ஸ். சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இரு பெரிய ஒரு திருப்பம். அத்துடன் சிரியா அரசுக்கு விழுந்த மிகப்பெரிய அடி.
காரணம், போராளி இயக்கங்களின் கூட்டமைப்பு சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதங்கள் வழங்குவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் அறிவித்துள்ளார், பிரான்ஸ் ஜனாதிபதி. அதன் அர்த்தம், அடுத்த சில தினங்களில் சிரிய உள்நாட்டு யுத்தத்தில், போராளிகளின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மின்னப் போகின்றன.
கடந்த 20 மாதங்களாக சிரியா அரசுக்கு எதிராக போராளி இயக்கங்கள் நடத்தும் யுத்தத்தில் இது ஒரு திருப்பு முனை. 20 ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் ஈழ விடுதலை போராளி அமைப்புகளுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போன்றதுதான் இது.
பெரிதும், சிறிதுமான வெவ்வேறு போராளி இயக்கங்கள், சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்து வருகின்றன. இருந்த போதிலும், இந்த இயக்கங்கள் இடையே ஒற்றுமை கிடையாது என்ற நிலை இருந்தது.
இது, கிட்டத்தட்ட 1980களின் இறுதியில், இலங்கையில் இருந்த அதே நிலை. அப்போது, பெரிதும், சிறிதுமான வெவ்வேறு ஈழ விடுதலை இயக்கங்கள், இலங்கை ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்தன. இருந்த போதிலும், அந்த இயக்கங்கள் இடையே ஒற்றுமை கிடையாது என்ற நிலை இருந்தது.
அப்போது, ஈழ விடுதலை இயக்கங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சர்ச்சையில் அடிபடும் ‘டெசோ’ அமைப்பு கூட, ஈழ விடுதலை இயக்கங்களிடையே ஒற்றுமை வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான். இருந்த போதிலும், ஈழ விடுதலை இயக்கங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த யாராலும் முடியவில்லை.
ஆனால், தற்போது சிரியாவில் உள்ள நிலை அதில் இருந்து வேறுபட்டு உள்ளது. சிரியாவில், ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பினரிடையே தற்போது ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது சிரியாவில் உள்ள நிலை அதில் இருந்து வேறுபட்டு உள்ளது. சிரியாவில், ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பினரிடையே தற்போது ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“போராளி அமைப்பினர் உங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்” என்று விடுக்கப்பட்ட கோரிக்கை, சிரியாவுக்கு உள்ளே நடைபெறுவது கடினம் என்பதை புரிந்துகொண்டு, போராளி அமைப்புகளிடையே பேச்சுவார்த்தைகளை நடத்த தமது நாட்டில் இடம் கொடுத்தது கத்தார் நாடு.
20 ஆண்டுகளுக்கு முன்பு, “போராளி அமைப்பினர் உங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்” என்று விடுக்கப்பட்ட கோரிக்கை, இலங்கைக்கு உள்ளே நடைபெறுவது கடினம் என்பதை புரிந்துகொண்டு, போராளி அமைப்புகளிடையே பேச்சுவார்த்தைகளை நடத்த தமது நாட்டில் இடம் கொடுத்தது இந்தியா.
அன்று, இந்தியாவில் நடைபெற்ற முயற்சிகள், 5 விடுதலை இயக்க தலைவர்கள் (பிரபாகரன், உமா மகேஸ்வரன், பத்மநாபா, ஸ்ரீசபாரத்னம், பாலகுமார்) ஒன்றாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தது என்ற அளவில் முடிந்து போனது.
ஆனால், சிரியாவில் போராடும் போராளி அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் நாட்டில் கூடி பேசினர். இவர்களுக்கிடையே ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு, ஒரு பொதுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தலைவரை பல நாடுகள் அங்கீகரிக்க தொடங்கியுள்ளன.
‘National Coalition for Opposition Forces and the Syrian Revolution (NCSROF)’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு போராளிகள் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் பெயர், மொவாஸ் அல்-காதிப். இவர் ஒரு சன்னி இன முஸ்லிம். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமய்யாத் பள்ளிவாசலில் இமாம் ஆக இருந்தவர். அதற்குமுன், Applied Geophysicsல் பட்டம் பெற்ற இஞ்சினியராக பணியாற்றியவர்.
போராளி கூட்டமைப்பின் பொதுக்குழு தலைவர், “சிரியா ராணுவத்துக்கு எதிராக போராடும் எமக்கு அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மற்றும் அனைத்து நாடுகளும் ஆதரவு தரவேண்டும்” என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை கோரிக்கை விடுத்தார். அத்துடன், “சிரியா ராணுவத்திடம் துல்லியமான ஆயுதங்கள் உள்ளன. அவர்களை நாம் ஜெயிக்க வேண்டும் என்றால், வெளிநாடுகள் எமக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் பெரிதும், சிறிதுமான வெவ்வேறு 12 போராளி இயக்கங்கள் இணைந்து NCSROF அமைப்பை உருவாக்கியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன், ஈழ விடுதலை இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ENLF என்ற அமைப்பை உருவாக்கின.
இந்த சிரியா போராளிகள் கூட்டமைப்புக்கு வெளிநாட்டு அங்கீகாரம் கிடைக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, இந்த விடுதலை இயக்கங்களில் சில, ஐரோப்பாவில் பின்னணி அமைப்புகளை வைத்துள்ளன. (விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் உலகத் தமிழர் என்ற அமைப்பை வைத்து இயக்கியது போல)
சிரியா போராளி இயக்கங்களின் வெளிநாட்டு பின்னணி அமைப்புகள் பலம் வாய்ந்தவை. இவற்றில், உலக வங்கியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி, ஹாவர்ட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல்துறை பேராசிரியராக இருந்தவர் போன்றவர்கள் தலைவர்களாக உள்ளனர். இவர்கள், வெளிநாட்டு அரசுகளால் மதிக்கப்படும் நபர்களாக உள்ளார்கள். இவர்களால், அந்தந்த நாடுகளை தமது அமைப்புக்கு ஆதரவாக மாற்றுவது சாத்தியமாகி உள்ளது.
சிரியா போராளி இயக்கங்களின் கூட்டமைப்பு NCSROF, சிரியா மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தது.
ஈழ விடுதலைப் போராளிகளின் கூட்டமைப்பு ENLFல் இருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, டெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஆகியோர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டு, அந்த அமைப்புகளை தடை செய்த விடுதலைப்புலிகள் இயக்கம், ஈழ தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் தாம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
சிரியா போராளி அமைப்புகளின் கூட்டமைப்பு NCSROF கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்த கூட்டமைப்பை ஐரோப்பாவில் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது பிரான்ஸ். மற்றைய ஐரோப்பிய நாடுகளும், இந்த அமைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரான்ஸ் செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், திங்கட்கிழமை 6 அரபு நாடுகள் NCSROF அமைப்பை தாம் அங்கீகரிப்பதாக அறிவித்தன. பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையே அந்த 6 நாடுகள்.
பிரான்ஸ் ஜனாதிபதி Francois Hollande, “NCSROF, சிரியா மக்களின் நியாயமான ஏகப் பிரதிநிதிகள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த அமைப்பு நிர்வாக ரீதியில் இயங்கத் தொடங்கியதும், இவர்கள் யுத்தம் புரிவதற்கு ஆயுதங்களை வழங்க நாம் யோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதே பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், 2006ம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என தடை செய்தன.
சிரியா போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து, ஏகப் பிரதிநிதிகளாக அங்கீகரித்து, யுத்தம் புரிய ஆயுதங்களும் கொடுக்க தயாராக உள்ள நாடுகள், ஈழப் போராட்டத்துக்கு ஏன் உதவி செய்யவில்லை? விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சொல்லி புரிய வைப்பதால் இன்றைய தேதியில் எந்த பலனும் கிட்டப் போவதில்லை. ஆர்வமுள்ளவர்கள், தாமாகவே புரிந்து கொள்வார்கள். அல்லது ஏற்கனவே புரிந்து கொண்டிருப்பார்கள்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment