Wednesday 14 November 2012

இலங்கையில் நடமாடும் உள்ளாடைத் திருடர்கள்!! ஒரு சிறப்பு பார்வை ....



இதென்ன விசித்திரமான தலைப்பாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா?
தலைநகர் கொழும்பில் சுற்றித்திரியும் சைக்கோ நபர்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

கொழும்பு நாரஹென்பிட்ட, கிருலப்பனை, தெமட்டகொடை, ஊறுகொடவத்தை, மாளிகாவத்தை பகுதிகளில் உள்ளாடைகளைத் திருடுவோரின் அட்டகாசங்களைத் தாங்க முடியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் மெட்ரோவுக்குத் தெரிவித்தனர்.

பெண்களுடைய உள்ளாடைகளைத் திருடிச்செல்லும் இவர்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோர் தயங்குகின்றனர்.    
கொடியில் உடைகளை உலர வைக்கவே முடியாது சிரமத்தை எதிர்நோக்கியருக்கும் மக்கள் சில சந்தர்ப்பங்களில் தொடர்மாடிகளில் ஏறியும் உடைகளைக் களவெடுக்கும் திருடர்கள் குறித்து ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க கிருலப்பனை பகுதிக்கு சென்று மக்களிடம் கருத்துக் கேட்டோம்.

தமது படங்கள், விபரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர்கள் எம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினை. போதைக்கு அடிமையானவர்களே இவ்வாறான துர்நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதே அவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
“நாங்க ரொம்ப காலமா இங்க குடியிருக்கோம். குடுகாரனுங்க தொல்ல தாங்க முடியல. கதவ தெறந்து வச்சிட்டு வெளியில போக முடியாது. வந்து பார்த்தா நிறைய சாமான்கள் காணாமல் போயிருக்கும்.

போனவாரம் மதியச்சாப்பாடு சாப்பிட்ட பிறகு நித்திரையாகிட்டேன். அன்றைக்கு கரன்ட் இருக்கல்ல. காற்று வரட்டும் என்று ஜன்னலைத் திறந்துவிட்டு நித்திரையாகிட்டேன்.
என்னோட தலையணைக்கு பக்கத்தில மொபைல் இருந்தது. ஒன்றரை மணித்தியாலத்துக்குப் பிறகு கண்விழிச்சுப் பார்த்தபோது மொபைலைக் காணோம். அது 28 ஆயிரம் பெறுமதி.
என்னோட கட்டிலுக்கும் ஜன்னலுக்கும் மூன்றடி தூரம் இருக்கும். ஜன்னலுக்குள்ள கையை நீட்டி ஃபோனை எடுக்க முடியாது. ஆனாலும் எப்படி எடுத்தங்கன்னு தெரியல.
துணிகளைக் காய போட முடியாது. புது உடுப்புகளை கொடியில் போடவே பயமா இருக்கும்” என்கிறார் 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர்.

நாம் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் போதைக்கு அடிமையானவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அவர்களோடு பொதுமக்கள் எந்த உறவுகளையும் வைத்துக்கொள்வதில்லை. சொந்த உறவுகளும் கைகொடுப்பதில்லை.

இந்நிலையில் போதையேற்றிக்கொள்வதற்காக பணம் தேவைப்படுகிறது. அதற்காக எவ்வாறான தீய செயல்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களை போதை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது.

சிலர் குப்பைகளைக் கிளறி பொருட்களைத் தேடுவார்கள், மற்றும் சிலர் பழைய பொருட்கள், உபகரணங்களை சேகரித்து விற்பார்கள். எனினும் அதிகமானோர் இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதிலும் உள்ளாடைகளைத் திருடுவோரின் நோக்கம் பற்றிச் சிந்திக்கையில் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவே கருத முடியும்.
தெமட்டகொடை ஆராமய பகுதியில் வசிக்கும் சகோதர மொழி பேசும் குடும்பத்தலைவி ஒருவரின் கருத்து இது.

“அன்றொருநாள் திங்கட்கிழமை, காலை 10 மணி இருக்கும். மரத்திலான பெரிய கம்பங்களைத் தூக்கிக்கொண்டு இருவர் வந்தார்கள். பார்ப்பதற்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் போல காட்சிதந்தாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது யாரும் சந்தேகப்படவில்லை.

இந்தப்பகுதியில் கேபிள் திருத்துவதற்கு வந்திருப்பதாகக் கூறினார்கள். இங்குள்ளவர்கள் சந்தேகப்படாதவண்ணம் நடந்துகொண்டார்கள். அவர்கள் எங்கிருந்தார்கள்? எங்கு சென்றார்கள்? போன்ற எந்த விபரமும் எமக்குத் தெரியாது.

மாலையானதும் தான் ஆடைகளைத் திருடிச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. ஒருசிலரின் உள்ளாடைகளை மட்டும் திருடியிருக்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு பொலிஸாரிடம் அவர்கள் சிக்கிக்கொண்டதாகவும் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம்” என்றார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இலங்கையில் போதைப் பொருளுக்கு அடிமையான 50 ஆயிரம் பேர் இருப்பதாக தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கமகே வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இறுதியாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் நாடு முழுவதிலும் கைது செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையானோரில் 48 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தோர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதானோரில் ஆண்,பெண் விகிதம் 29:1 என கணிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளைக் கட்டுப்படுத்தினால் மாத்திரமே இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது குறித்து தேசிய (அபாயகரமான) போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கமகே எமக்குக் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானோரில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிகமானோர் இருக்கின்றனர்.

இவர்களிடம் தீய பழக்கங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். எனினும் இவ்வாறு ஆடைகளைத் திருடுவோர் எல்லாருமே போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனக் கூற முடியாது. மன நோயாளிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் போதைக்கு அடிமையான சிலர் இருக்க வாய்ப்பு உண்டு. தூரநோக்கு அடிப்படையில் பார்த்தால் இது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.” என்றார்.

தலைநகரில் இவ்வாறான திருடர்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெறுகின்ற போதிலும் உரிய ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் யார் என்பது குறித்து பொதுமக்கள் தகவல் வழங்குவதிலும் பின் நிற்கிறார்கள். பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பினூடாகவே திருடர்களை நாம் கண்டுபிடிக்க முடியும் என தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆம்! எது எவ்வாறெனினும் இந்தக் குற்றச் செயல் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
தலைநகர் கொழும்பில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடமாடும் இந்த மனநோயாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இல்லையெனின் அவர்களது பார்வை சாதாரண மக்கள் மீதும் திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நன்றி  : ஆர்.நிர்ஷன்..


No comments:

Post a Comment