Thursday, 22 November 2012

சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே மரணம் ! ஒரு சமூக பார்வை....


Bal Thackeray


கடந்த சில நாட்களாகவே மும்பைநகரம் பதட்டமான சூழ்நிலையில் இருந்துவந்ததை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. மும்பை மட்டுமே வாழுமிடமாக கொண்ட சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடந்த சில நாட்களாகவே நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடியிருந்தது தான் காரணம். சில பேர் வாழும் போதும் பிரச்சனை. மாண்ட பின்பும் பிரச்சனை தான். 



மும்பை தாதா'' என்றும் ''மும்பை ஹிட்லர்'' என்றும் சிவசேனா கட்சியினராலும், அவரது மற்ற ''கூட்டாளிகளாலும்'' அன்போடு அழைக்கப்பட்டவர் தான் இந்த பால் தாக்கரே.
 இந்து மதம் தான் இவரது மூச்சும், பேச்சும். ''தீவிரவாத அமைப்புகளில் 'தற்கொலைப் படை' இருப்பது போல் இந்துக்களிலும் 'தற்கொலை படை' அமைக்கப்பட வேண்டும்'' என அசாதாரணமாக பேசியவர். 

இனவுணர்வுகளை - மாநில உணர்வுகளை  தூண்டி மகாராஷ்டிரா மக்களை - குறிப்பாக மும்பை மக்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வைத்திருந்தார். தனக்கென தனியான பத்திரிகை ஆரம்பித்து, கார்டூனிஸ்டாக இருந்து, சிவசேனா கட்சியை நிறுவியது வரை,  மும்பை, மகாராஷ்டிரா இரண்டும் மராத்தியர்களால் மராத்தியர்களுக்காக ஆளப்படவேண்டியவை என்பது தான் அவரது பிரதானமான கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. குஜராத்தியர்கள், மார்வாடியர்கள், பீகாரிகள்  மற்றும் தென்னிந்தியர்களின் மும்பை நோக்கிய 'குடிப்பெயர்வு' நடைபெறுவதை எதிர்த்து,  மராத்தியர்களின் வேலை வாய்ப்புக்களை வேற்றினத்தவர்கள் தட்டிப்பறிப்பதை அனுமதிக்க முடியாது என்று கோஷமிட்டு 'தாதா' பாணியிலான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் குழித்தொண்டிப் புதைத்தவர்.




பால் தாக்கரே யாரு...? 
                                 தேசத்திற்கு தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரா...? அல்லது தேச பக்தி, ஒற்றுமை, ஒருமைப்பாடு - இவைகளை உயர்த்திப் பிடித்த உத்தமத் தலைவரா....? அல்லது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக - பெண்விடுதலைக்காக போராடிய போராளியா...? அல்லது மும்பையிலுள்ள  ஏழை - எளிய மக்களின் தோழனா...? இதுல எதுவுமே இல்ல... இதற்கு எதற்கு இத்தனைக் கூப்பாடு...? 

          யார் இந்த பால் தாக்கரே...?
                                            மில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அடக்கி - ஒடுக்கி, முதலாளிகளுக்கும், நிர்வாகத்திற்கும் விசுவாசம் காட்டும் அடிவருடியாய், அடியாளாய்  இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியான கோடீஸ்வரன் தானே இவர்.  மும்பை - மராத்தி என்ற பிராந்திய உணர்வும் இன உணர்வும் கொண்டு மும்பையில் குடியேறிய தமிழர்களையும், குஜராத்திகளையும், பீகாரிகளையும் அடித்து விரட்டி தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த தாதா தானே இவர்...? இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷம் கக்கியவர் தானே இந்த பால் தாக்கரே...?இவரது இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தான், நமது நாட்டின் மிக சிறந்த ஓவியர் எம். எப். ஹுசைன் இந்தியாவிற்குள் நுழையமுடியாமல் வெளிநாட்டிலேயே செத்து மடிந்தார். இதையெல்லாம் நாடு மறந்திருக்குமா என்ன....? நாடு மறந்திருக்கலாம். நம்மால் மறக்க முடியுமா...?

               இப்படிப்பட்ட ஒரு தாதாவைத் தான் - ஹிட்லரின் மறு உருவமாய் வாழ்ந்து மடிந்த ஒருவரைத் தான் இன்றைக்கு பத்திரிகை உலகமும், தொலைக்காட்சிகளும், ஆட்சியாளர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஒரு தேசத்தலைவர்  அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நமக்கே கோபம் வருகிறது.

         பால் தாக்கரே நேற்று இறந்ததிலிருந்து தொலைக்காட்சிகளின் பார்வை அனைத்தும் மும்பை பக்கம் திரும்பிவிட்டது. பத்திரிக்கைகளுக்கும் சொல்லவே வேண்டாம். ஒரு மாதத்திற்கு இந்த படம் தான் ஓடும். முகநூலில் கூட பால் தாக்கரே பற்றி தான் தாக்கு தாக்குன்னு தாக்குறாங்க. எதைப்பார்த்தாலும் பால் தாக்கரேவின் புராணங்கள் தான். பாசிச குணம் படைத்த முதலாளித்துவ ஊடகங்கள் ஒரு பக்கம் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறது. 

      இன்னொரு பக்கம், இந்த தேசத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர் இறந்துவிட்டது போன்ற பிரம்மிப்பை இந்திய குடியரசுத் தலைவரும், பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சோககீதம் வாசித்திருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கோ விருந்து சாப்பிடாமல் பண்ண ஆர்டரை கேன்சல் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போய்விட்டார். என்னயா நடக்குது நாட்டுல...? புரியவே இல்லை....! 

        இது எல்லாவற்றிலும் கேவலமான விஷயம் என்னவென்றால்...? மறைந்த அந்த மாபெரும் மனிதரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவது தான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பால் தாக்கரேவின் உடலின் மீது காவல் துறையினர் முழு அரசு மரியாதையுடன் தேசியக்கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒரு தாதா என்கிற பெருமையைத் தவிர அவர் இந்நாள் - முன்னாள் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ - எம். பி யோ அல்லது கவுன்சிலரோ கூட இல்லை. ஒரு சாதாரண மனித உடலுக்கு மூவர்ணக்கொடியை போர்த்தலாமா....? அது தேசியக்கொடியை அவமரியாதை செய்தது போல் ஆகாதா....? அதற்கென்று கட்டுப்பாடுகள் கிடையாதா...? 

               அதேப்போல் பொது சுடுகாட்டில் தகனம் செய்யாமல், பொது மக்கள் கூடும் இடமான  ''சிவாஜி பூங்காவில்'' தகனம் செய்து, நினைவுச் சின்னம் எழுப்புகிறார்கள். சிவாஜி பூங்கா பால் தாக்கரேவுக்கு மிகவும் பிடித்த இடமாம். இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, மும்பை நகரில் பொது மக்கள் கூடும் பகுதியில் - பொது மக்கள் மத்தியில் ஒரு அரசியல் தலைவருக்கு இது போல் தகனம் செய்வது என்பது இதுவே முதல் தடவையாம். அப்படியொரு பெருமைக்கு உரியவரா இவர்...? என்பது தான் நமது கேள்வி.

 இப்படியான போற்றுதலுக்கும், பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் சொந்தமான புண்ணியவானான பால் தாக்கரே மறைந்துவிட்டார். அவரோடு சேர்ந்து இதுவரை அவரை அலங்கரித்து வந்த வன்முறையும், கொலையும், மிரட்டலும், பதட்டமும், அமைதியின்மையும் மறைந்து போகட்டும். மும்பையில் இனி மெல்ல அமைதி மலருட்டும். மும்பையில் இனி மெல்ல அமைதி வாழட்டும். 

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment