முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.
முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும்.
குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.
அதாவது
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.
இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து பெரும்பாலும் இந்த பண்டிகைகள் உயிரோட்டமற்று ஏதோ கடனுக்காக நடத்தப்படுகின்றன. ஷியாக்களால் உருவாக்கப்பட்டு அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கமும் இதை முஸ்லிம்களின் பண்டிகையாகவே கருதுகிறது. இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்கதினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும்
இல்லை.நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்.
ஸஹாபாக்களை கேவலப்படித்தி, அல்குர்ஆனிலே குறைகண்டு ஏன் எம் பெறுமானார் அவர்கள் கூட மார்க்கத்தை மறைத்து விட்டார்கள் என பெறும் அபாண்டங்களை சுமத்தி இஸ்லாத்துக்கு வெளியே சென்ற ஷியாக்கள் ஹஸன், ஹுஸைன் (ரழி) அவர்களின் சிறப்புக்களை மாத்திரம் சொல்லுவார்கள். மற்ற ஸஹாபாக்களை காபிர்கள் என்று சொல்லும் துரோகிகள் தமது சுய ரூபத்தை வெளியே காட்டாமல் (தக்கிய்யா) இருக்கின்றார்கள்.
ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படடுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment