குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்கும் ஒரு பொருள் பால். தாய்ப்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்ப்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் ''பாக்கெட் பால்'' மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால். ஆனால், இந்த பாலில் சலவைக் கட்டி, யூரியா, சோடா போன்றவை கலக்கப்படுவது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாக்கெட் பால் அடர்த்தியாகத் தெரிய, சில வகை வேதிப்பொருட்களைச் சேர்க்கின்றார்கள்.
சிட்ரிக் ஆசிட் கலந்த குளிர்பானங்களால் நரம்பு மண்டலம், சிறு நீரகம், மூளைப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம். புற்று நோய்க்கான காரணிகளும் இருக்கின்றனவாம். சில்லி சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு புற்று நோய் ஏற்பட்டு விட்டது என்பதை ஒரு பதிவர் எழுதியிருந்தார். இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.
மேலும் உணவை விஷமாக்கி விற்பனை செய்து வியாபாரிகளை, சுவாமி அச்சுதானந்த் டிர்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், கடைகள் மற்றும் பண்ணைகளில் விற்கப்படும் பால்களில் தண்ணீருடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுப்பொருள்கள் கலக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் பால்களில் அரசின் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆராய்ந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கக் கூறி மத்திய அரசு உள்ளிட்டு இந்தியாவின் பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. இதற்காக நாடு முழுவதுமிருந்து பால் மாதிரிகள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், பாக்கெட் சாரா பால் மாதிரிகளில் 63 சதவிகிதமும், கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பால் மாதிரிகளில் 33 சதவிகிதமும், உடலுக்கு தீங்கி விளைவிக்கக் கூடிய நச்சுத்தன்மை நிறைந்த சலவைக் கட்டி, யூரியா, சோடா போன்றவற்றின் சாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்த சில ஒழுங்குமுறைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ளது. அதேபோல், பாலுக்கான ரகங்களையும் இந்த ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையிலேயே பால் விற்பனை செய்யப்படும். ஆனால், சில விற்பனையாளர்கள், லாபத்தை ஈட்டுவதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தக்கூடிய பாலில் நச்சுத்தன்மையை கலந்து விடுகின்றனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உதவி இயக்குநர் கமல் குமார் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2011 அடிப்படையில், பல்வேறு பால் வகைகளுக்கான தரங்களை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலுமிருந்து 1,791 பால் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், வெறும் 565 மாதிரிகள் மட்டும் அரசின் தர நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,226 மாதிரிகளில் மனிதர்களுக்கு பல்வேறு உபாதைகளை விளைவிக்கக் கூடிய நச்சுத்தன்மை நிறைந்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் இதுபோன்ற தயாரிப்பாளர்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சோதனை செய்யப்பட்ட 136 மாதிரிகளில் 83 சதவிகித மாதிரிகள் அரசின் தரத்திற்கு கீழ் உள்ளதாகும். மேலும், இதுகுறித்த முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.முன்னதாக, நாட்டின் பல பகுதிகளில் ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் பாலில் நச்சுத்தன்மை மற்றும் கோலிபார்ம் எனும் பாக்டீரியா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பொதுவாக, பாலில், தண்ணீர், குளுக்கோஸ், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஆகியவை கலக்கப்படும்.
இதில், நச்சுத்தன்மை நிறைந்த தண்ணீரை கலந்தாலே பால் கெட்டுப் போய் விடும். மேலும், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து போய்விடும். பிறகு, அதனை குடிக்கும் குழந்தைகளுக்கு எந்தவித சத்தும் கிடைக்காது. இதுகுறித்து முன்னாள் தேசிய பால் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நிபுணர் டாக்டர் வினோத் கன்சால் தெரிவிக்கையில், பாலை உற்பத்தி செய்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றில் வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆனால், பண்ணைகள் மற்றும் வெளியிடங்களிலிருந்து விற்கப்படும் பால் அரசின் சோதனைக்கு உட்படுத்தப்படாததால், விற்பனையாளர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக பாலில் நச்சுப் பொருட்களை கலந்து விற்பனை செய்து விடுகின்றனர். அதேபோல், விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும் பாலானது உயர்தரத்தில் இருக்காது. இதனால் அவை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கப்படும். இது, பாலின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, நச்சுத்தன்மை நிறைந்த பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. மேலும், கோடைகாலங்களில் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, யூரியா மற்றும் சோடா போன்ற நச்சுத்தன்மை நிறைந்த பொருட்களை சேர்த்துவிடுகின்றனர். இதனை அறியாத மனிதர்கள் அவற்றை வாங்கி அருந்துவதால், பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர் என்றார். இதுபோன்ற நடைமுறைகளை முற்றிலும் ஒழிப்பதற்காக, அனைத்து பால் உற்பத்தியாளர்களையும் ஒழுங்குப்படுத்தும் வகையில் அரசு கட்டாய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006ன் படி, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்து பார்க்க அரசு அதிகாரமளித்துள்ளது. ஆனால், போதிய விழிப்புணர்வின்மையால் பெரும்பாலான மக்களுக்கு, தங்களை பாதுகாத்துக் கொள்வதாக உள்ள இதுபோன்ற சட்டங்களே தெரிவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடத் தேவையாக உள்ள பல்வேறு பொருட்களில் முக்கியமானது பால். அதையும், சில தயாரிப்பாளர்கள் லாப நோக்கத்தோடு கலப்படம் செய்து விற்பனை செய்து வருவது மிகப்பெரிய வேதனையே. இத்தகையோரை ஒடுக்க அரசு கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
ஏன் பால் ஊட்டச்சத்து நிறைந்தது?
மாட்டுப் பாலில் உள்ள சத்தானது கன்றுக்குட்டியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கொழுப்புச் சத்து, புரதச் சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் உள்ளன. அதேபோல், வளர்ச்சிக்குத் தேவையான இம்யூனோகுளோபுளின், ஹார்மோன்கள் மற்றும் உயிர் செயல் புரதக் கூறுகள் ஆகியவை மாடு / எருது பாலில் உள்ளன.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment