Tuesday, 6 November 2012

சிங்கப்பூரில் தமிழரின் பங்கு!! ஒரு வரலாற்று பார்வை...


சிங்கப்பூரில் தமிழர் எனப்படுபவர், தமிழைப் பேசும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து தோன்றியவர் என்பதைப் பலரும் ஏற்றுவந்துள்ளனர். தமிழர் எனப்படுபவர் தமிழ்மொழிப் புழக்கத்தால் மட்டுமே அறியப்படக் கூடியவர் என்று மற்றுமொரு விளக்கமும் உண்டு. ஆயினும், வரலாற்று அடிப்படையில் தமிழ் மொழிப் பயனீடு இன்றைய தமிழக-வடஇலங்கைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மத்தியில் மட்டும் அடங்கிவிடவில்லை. மாறாக, தென்னிந்தியர்கள் மத்தியிலும் தமிழ் புழங்கப்படுகிறது. மலாயா-சிங்கப்பூரில் தமிழ்மொழி தென்னிந்தியர்களின் தொடர்புமொழியாகக் கடந்த நூறு ஆண்டுகளாய் இருந்துவருகிறது. எனவே, தமிழ்மொழிப் பயனீடு, தமிழர் அல்லாதவர் மத்தியிலும் விரிவாக்கம் கண்டுள்ளது. மலாய்ச் சமூகத்துடன் சில தலைமுறைகளாகக் கலந்துவிட்ட குடும்ப உறுப்பினர்களும் தமிழரெனக் குறிப்பிடப்படுகின்றனர். பாட்டன் காலத்தில் மலாய் மாதுவை மணமுடித்தவர் தமிழராக இருந்தால், பேரப்பிள்ளைகள் காலத்திலும் அக்குடும்பத்தில் தோன்றியவர்கள் தமிழரெனக் குறிப்பிடப்படுகின்றனர்.


சிங்கப்பூரில் தமிழர் சமுதாய உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலத்தை எடுத்துக்கொண்டால் போதும். இரண்டாம் உலகப்போருக்கு முந்திய காலப்பகுதி யில், சிங்கப்பூரின் வரலாறு மலாயாவுடன் மிகவும் இணைந்திருப்பதால், சிங்கப்பூர்த் தமிழர்கள் வரலாற்றைத் தனியாகக் காண்பது எளிதாக இராது. போருக்கு முன்னைய ஆண்டுகளில், சிங்கப்பூருக்கும் தமிழர்களுக்கும் மலாக்கா நீரிணைக் குடியேற்ற இடங்களான பினாங்கு, மலாக்கா முதலான இடங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. தமிழர்கள் மலாயாவின் எந்தப் பகுதியிலும் வாழ முடிந்தது. இதனால் சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் மலாயாவின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அதைப் போலவே மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்து வாழ்ந்தனர். இந்த நிலை சிங்கப்பூர் தனி நாடாகும்வரை நீடித்தது. 1965இல் மலேசியர்களுக்கெனச் சிங்கப்பூர் நுழைவு அட்டையை அறிமுகம் செய்த பின்னரே, சிங்கப்பூர்த் தமிழர்கள் எனும் அடையாளம் உறுதிபெற லாயிற்று. அதுவரை ‘ஜாலான் பாஸ்’ (அடையாள அட்டை) மட்டுமே மலாயாவில் வாழத் தேவைப் பட்டது. இந்த அடையாள அட்டைகூட, 1950களில் உருவாகிய கம்யூனிசப் புரட்சியின்போதுதான் அறிமுக மாகியது. அதற்கு முன்னதாக, தமிழர்கள் மலாயாவில் எந்த இடத்திலும் வாழ்வது எளிதாக இருந்தது.

சிங்கப்பூர் இந்தியர்களில், தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு அண்மைய கால வரலாறுதான் காரணமாக உள்ளது. ஆங்கிலேயர் சென்னை மாகாணத்தை ஆண்டபோது, மலாயாவுக்கான உடலுழைப்புக்கான தொழிலாளர்களாகத் தமிழர்களையே பெரும்பாலும் கொண்டுவந்தனர். தமிழ்ப் பாட்டாளிகளை மலாயாவுக்கு எளிதாகவும் மலிவாகவும் கடல்வழி அனுப்ப, நாகைப்பட்டினத் துறைமுகத்தருகில் ஆவடி எனும் பாட்டாளிகளைச் சேர்க்கும் நிலையத்தை நடத்தினர். தமிழ்ப் பாட்டாளி மக்களோடு, மலையாளம், தெலுங்கு முதலான இதர தென்னிந்திய மொழி பேசுவோரும் வந்தனர். இவர்கள் தமிழர்களோடு வாழ்ந்ததால் தமிழில் பேசவும் கற்றனர். இவ்வாறாகத் தென்னிந்தியப் பாட்டாளி மக்கள் மத்தியில் தமிழைத் தொடர்பு மொழியாகக்கொண்ட சமுதாயம் உருவாகியது.


சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்கள் மத்தியில், 50 விழுக்காட்டினருக்கு அதிகமானோர் இந்துக்களாக இருந்தனர். இது சமுதாய ஒருமைப்பாட்டுக்கு உதவியது. கிறித்துவம், இசுலாம் முதலான மதத்தினரும் தமிழர்கள் மத்தியில் இருந்தனர். மொழியால் இவர்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் சமயங்கள் இவர்களைப் பிரித்தே வைத்தன.

சிங்கப்பூர் இந்தியர்களின் சமூக உருவாக்கத்தில், அவர்களின் பொருளாதார நிலைதான் தலையாயக் காரணமாக இருந்தது. காலனித்துவப் பொருளாதாரத்தில் அவர்களின் ஈடுபாடு ஏனைய நடவடிக்கைகளை எல்லாம் பாதித்தது. சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழ்ப் பாட்டாளிகளாய் இருந்ததால், பெரும்பான்மை இந்தியர்கள் பாட்டாளிகளாகவே வாழ்ந்தனர். பாட்டாளித் தமிழர்கள் பொதுப் பயனீட்டுத் துறைகளான சாலை அமைத்தல், கப்பல் தளங்கள், சுகாதாரம் முதலான பிரிவுகளில் பணியாற்றினர். 1970கள் வரை தமிழர்களின் எண்ணிக்கை இத்துறைகளில் மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது. பாட்டாளித் தமிழர்கள் ஈடுபட்ட வேலைகள், அவர்கள் பணியாற்றிய தொழில் மனைகள் அவர்களுக்குத் தரப்பட்ட வீடுகள், இந்த வீடுகளின் அமைப்பு முதலானவை தமிழர்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பாதித்தன. இந்தப் பாதிப்புகள், புதியதோர் தமிழர் பண்பாடு உருவாக அடித்தளமாய் அமைந்தது.

சிங்கப்பூரில் உருவாகிய தமிழர் சமுதாயம், தொடக்கத்தில் பாட்டாளி மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தாலும், போருக்குப் பின் கல்வி கற்ற தென்னிந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தொழில்நுட்பம் மிகுந்த வேலைகள், நடுநிலை நிர்வாகிகள், வியாபாரம் முதலான தொழில்களுக்குப் படித்த இந்தியர்கள் வந்தனர். சிங்கப்பூரைத் தூரகிழக்குக்கான கடற்படைத்தளமாகப் பிரிட்டன் மாற்றியபோது, மலையாளிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்தது.


பாட்டாளிகள், கல்வி அறிவு தேவைப்பட்ட தொழில்களில் ஈடுபட்டோர் ஆகியோருடன் மூன்றாம் பகுதியினராக வர்த்தகத்தில் ஈடுபட்ட தமிழர்களைக் குறிப்பிடலாம். வர்த்தகத்தில் ஈடுபட்ட இதர இந்தியர்களோடு ஒப்பிடுகையில், வர்த்தகத்தில் ஈடுபட்ட தமிழர்கள் பல்வேறு பொருள்களை விற்பவர்களாகவும் சேவைகள் வழங்குபவர்களாகவும் இருந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இவர்கள் வந்திருந்தனர். இவர்களிடையே குறிப்பிடத்தக்கவர்களாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் விளங்கினர். தமிழகத்தின் கடலோர நகரங்களில் இருந்து தமிழ் முஸ்லிம்களும் கேரளப் பகுதிகளிலிருந்து மொப்ளாக்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். சின்னஞ்சிறு பொருள்கள் விற்பது, சமைத்த உணவைத் தள்ளுவண்டிகளில் எடுத்துச்சென்று விற்பது, பலசரக்குக் கடைகள், ஜவுளிக் கடைகள், தங்க நகைசெய்து விற்பது, தனவைசிகத் தொழில் (வட்டித் தொழில்) முதலான பல்வேறு தொழில்களில் தமிழர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், மேலோட்டமாகப் பார்க்கும்போது, வர்த்தகத்தில் வட இந்தியர்கள் முன்னணி வகிப்பதுபோல் தெரிந்தது. வட இந்தியர்களின் கடைகள், பழைய சிங்கப்பூரின் மையப் பகுதியில் இருக்கும் ‘ஹய் ஸ்திரீட்’ (High Street) எனும் சாலையில் அமைந்திருந்ததால், வியாபாரத் துறையில் அவர்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததாகத் தோற்றம் தந்தது. தென்னிந்திய வியாபாரிகள், இந்தியச் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால், தமிழர்கள் பரவலாக வாழ்ந்த இடங்களில் தத்தம் வியாபாரத்தைச் செய்தனர். வட இந்திய வணிகர்கள் கால வோட்டத்தில், செல்வந்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வியாபாரங்களில் ஈடுபட்டனர். இந்திய வணிகர்கள் மத்தியில் காணப்பட்ட இருதுருவப் போக்கு, சமுதாய உருவாக்கத்திலும் விளைவுகளை ஏற்படுத்திற்று.


சமுதாய உருவாக்கமும் அடையாளமும்...
இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள், மலாயாவின் இந்தியச் சமூகத்தின் ஒரு பகுதியினராய்க் கருதப்பட்டனர். தமிழர்களின் உலகளாவிய சிந்தனையைக் குறிப்பிடுகையில் அதில் முதலிடம் வகித்தது அவர்கள் மலாயாவில் இந்தியர்களாக வாழ்ந்த வாழ்க்கைதான். அதே சமயத்தில் அவர்களின் எண்ண அலைகள் இன்றைய தமிழகம், வட இலங்கை ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. சிங்கப்பூரில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் அவர்களோ அல்லது அவர்தம் மூதாதையரோ விட்டு வந்த கிராமம் மனத்தில் தெள்ளத் தெளிவாக இருந்தது. சிங்கப்பூர் ‘சம்பாத்தியம்’ செய்ய வந்த இடமாகவும் தமிழகத்திலிருந்த அவர்களுடைய ‘ஊர்’ நிலையான இடமாகவும் விளங்கியது. சிங்கப்பூர்த் தமிழர்களின் சிந்தனையில், தமிழகத்தில் காணப்படாத தமிழ் மொழியால் ஏற்பட்ட இன உணர்வு மிளிர்ந்தது. மலாயாவில் தமிழ் புழங்குவோர் அனைவரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வு படிப்படியாக மேலோங்கியது. இந்த உணர்வுகளுக்கு அப்பால்தான், இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் என்ற சிந்தனை எழுந்தது. சிங்கப்பூர் மலாயா ஆகியவற்றின் வரலாறு எழுதுவோர் மலாய்க்காரர், சீனர், இந்தியர், இதர இனத்தவர் எனும் நான்கு இனப் பாகுபாட்டைக்கொண்டே பல ஆய்வுகளை எழுதி வந்திருப்பதால் தமிழர்களின் தனிப்பட்ட அடையாளம் பல நிலைகளில் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் வந்துள்ளது. இதனால் சிங்கப்பூர்த் தமிழர்களுக்குத் தனியொரு வரலாறு எழுதுவது பெருஞ்சவாலாக இருந்துவருகிறது.

சிங்கப்பூரில் தமிழர்கள் தனியொரு அடையாளம் பெற, பல்வேறு சமூக உருவாக்கங்கள் உதவின. சிங்கப்பூருக்குள் குடியேறும் முதல் தலைமுறைக் குடியேறிகள் மத்தியில் சாதி ஒரு முக்கியச் சமூக அடையாளமாக உதவியது. தொடக்க நிலைச் சமூகங்களை உருவாக்கச் சாதியமைப்பு உதவியாக இருந்தது. குறிப்பிட்டதொரு சாதியைச் சார்ந்தோர் போதிய எண்ணிக்கையில் இல்லாதபோது, தமிழர்கள் தாங்கள் வந்த ஜில்லா, வட்டாரம் முதலானவற்றின் அடிப்படையில் தொடக்க நிலைச் சமூகக் கூட்டங்களை உருவாக்கினர்.


இந்திய விடுதலைக்கு முன்னர் சென்னை மாகாணத்தில் எழுந்த பல்வேறு சமூகச் சிந்தனைகள், சமூக இயக்கங்கள் மலாயாவில் வாழ்ந்த தமிழர்களை ஈர்த்தன. இவற்றில் இரண்டு, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களையும் கவர்ந்தது. திராவிட இயக்கம் சிங்கப்பூர்த் தமிழர்கள் மத்தியில் சமூக மாற்றத்தைச் செய்யத் தூண்டியது. தமிழர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் அது சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியது. அரசியல் விடுதலையைக் காட்டிலும், தமிழர்கள் தங்கள் சமுதாய வாழ்க்கையில் தீவிரமான சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டுமென அது தூண்டியது. இந்திய விடுதலை இயக்கம், சில இந்தியர்களிடையே முக்கிய இயக்கமாகக் கருதப்பட்டாலும், பாமரத் தமிழர்கள் மத்தியில் அது இரண்டாம் இடத்தையே வகித்தது. மகாத்மா காந்தி போன்ற இந்திய தேசியத் தலைவர்களைத் தவிர, இந்திய விடுதலை பற்றிய ஏனைய கருத்துகள் அனைத்தும் தமிழ்மொழி வாயிலாகவே பாமரத் தமிழர்களைச் சென்றடைந்தது. ஆங்கில மொழியைப் புழங்கிய இந்தியர்களிடையே, இந்திய விடுதலை இயக்கம் ஒன்றுதான் முக்கியமான இயக்கமாக இருந்தது. இந்திய விடுதலை இயக்கம், ஆங்கில மொழியை அதிகமாத் தழுவிச் செயல்பட்டதால், பாமரத் தமிழர்கள் மத்தியில் அதற்கு அதிக வரவேற்பில்லை.


சமூகச் சீர்திருத்தம் பற்றிய கருத்துகள் மலாயாவில் வேரூன்றியதால், 1930களின் பிற்பகுதிக்குள், கோயில்களில் ஆதிதிராவிடர்கள் நுழைவதற்கு இருந்த தடை அகன்றது. சாதி சமய விழாக்களில் இருந்து அகன்றதால், தீமிதி, தைப் பூசம் முதலான தமிழ் இந்து விழாக்கள் தமிழர்கள் திரளாக ஒன்றுகூடும் விழாக்களாக மாறின. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரின் பல இடங்களில் நடைபெற்ற தைப்பூசம் தெங் ரோடு சுப்பிரமணியர் ஆலயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்தது. தீமிதி விழா சௌத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வளர்ந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், இன்றைய அல்பர்ட் சாலையைத் தமிழர்கள் ‘தீமிதித் திடல்’ என்றே அழைத்தனர். அங்குதான், சிங்கப்பூரில் முக்கியச் சமய விழாவாகத் தீமிதி கொண்டாடப்பட்டது.


இரண்டாம் உலகப்போர் பொருளாதார நெருக்கடியையும் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் இல்லாமையையும் தமிழர்களுக்குத் தந்தது. அந்த இன்னல் சூழ்ந்த போர்க்கால வாழ்க்கையிலும் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் மனநிறைவுகள் ஏற்பட்டன. சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயக் காலனித்துவம் பாட்டாளித் தமிழர்களை உடல் உழைப்பாளிகளாக மட்டும் கருதி வந்த நிலை ஜப்பானியரின் வருகையால் மறைந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட இந்திய தேசிய விடுதலைப் படையில் பாட்டாளித் தமிழர்கள் போர் வீரர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தங்களை மனிதச் சமுதாயத்தின் அடிமட்டத்தில் உழலும் வெறும் கூலிகளாய் எண்ணி வாழ்ந்த ஆயிரக்கணக்கான பாட்டாளித் தமிழர்கள் நேதாஜியின் வீர உரைகளால் மன எழுச்சி பெற்றனர். இரண்டாம் உலகப்போரின் முடிவு இந்திய விடுதலைப் படைக்கு வெற்றி தராவிட்டாலும் அதில் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் எண்ணத்தில் பலவித முன்னேற்றச் சிந்தனைகள் நிலவின.

1950களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் பொதுத் தேர்தலைப் பிரபலமாக்கின. இதனால், இந்தியர்களில் பெரும்பான்மையினராய் இருந்த தமிழர்கள் தேர்தல்களில் முக்கிய மக்களாகக் கருதப்பட்டனர். 

தொழிற்சங்கங்களில் தீவிரப் பங்காற்றிய தமிழர்களால் புதிய அரசியல் கட்சிகள் பல தோன்றின. தமிழர்களின் ஆதரவினால் பல் வேறு அரசியல் கட்சிகள் சிங்கப்பூரில் உருவாகின. 1959ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது உள்நாட்டு நிர்வாகத்தில் சுயாட்சி பெற்றது. அச்சமயத்தில் ஆளுங்கட்சியிலும் எதிர்க்கட்சிகளிலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அன்று ஆளுங்கட்சியாக இருந்த ‘மக்கள் செயல் கட்சிக்கு’ தமிழர்களின் ஒருமித்த ஆதரவு இருந்தது. மக்கள் செயல் கட்சி தனது அரசியல் சித்தாந்தத்தில் தமிழுக்குச் சரிநிகர் இடம் தந்தது தமிழர்களின் ஆதரவை ஈர்த்தது எனலாம். சிங்கப்பூர் மலேசியாவில் சேருவதற்கு முன்னதாகவும் சேர்ந்த பின்னரும் மக்கள் செயல் கட்சியின் அரசியல் செல்வாக்குக்குத் தமிழர்கள் பேராதரவு தந்தனர். சிங்கப்பூரின் மக்கள் தொகையில் தமிழர்கள் 4 விழுக்காட்டினராய் இருந்தாலும் சிங்கப்பூர் மலேசியாவில் சேர்ந்திருந்த காலத்தில் தமிழர்களின் பலம் 10 விழுக்காடாக அதிகரித்திருந்தது. எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்களிப்பு வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாய் இருந்தது.


சிங்கப்பூரில் நிகழ்ந்த துரித அரசியல் மாற்றத்தில், தமிழர்களின் ஆதரவை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பார்த்ததால் தமிழும் முக்கியத்துவம் பெற்றது. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய தமிழ்மொழிக் கல்வியும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் அரசாங்க நிதியுதவி பெற்றன.



வேலைவாய்ப்பு ...
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விதிகளை, அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதனால், நடுத்தர மற்றும் அடித்தள வேலைவாய்ப்புகள், இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவருக்குக் கிடைப்பது இனி சிரமமாக இருக்கும்.
சிங்கப்பூரில் தற்போது, 35 சதவீதம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி, அங்குள்ள வெளிநாட்டவர் தற்போது, மாதம் குறைந்தபட்சம் 2,800 சிங்கப்பூர் டாலர் சம்பாதித்தால் தான், அங்கு பணிபுரிவதற்கான அனுமதியை (இ.பி.,) பெறலாம். இந்த விதி திருத்தப்பட்டு, மாதம் 3,000 சிங்கப்பூர் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்ற புதிய விதி, 2012ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக அங்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து வருவதால், குறைந்த சம்பளம் உள்ள வேலை கூட மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வந்தன.
இதையடுத்து, அந்நாட்டின் மனிதவள அமைச்சகம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நீண்ட கால அடிப்படையில், வெளிநாட்டுப் பணியாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, நாட்டில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வெளிநாட்டுப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமீப காலமாக இ.பி., கோரி அதிகளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. அதனால் அடிமட்ட, நடுத்தர, நிர்வாக மற்றும் உயர் நிர்வாக வேலைகளில், வெளிநாட்டினர் சேர்வதற்கான விதிகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில், அதிக கல்வித்தகுதி அதற்கேற்ற நல்ல சம்பளம் ஆகியன அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 3,800 இந்திய நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை நிறுவியுள்ளன. அவற்றில் பணியாற்றுவதற்கு, இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் அதிகமானோர் சிங்கப்பூருக்குச் செல்கின்றனர். தற்போதைய புதிய விதிகளால் அவர்களின் வருகை பாதிக்கப்படக்கூடும். ஆனால், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு புதிய விதிகளால் பாதிப்பு ஏற்படாது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment